Friday, January 27, 2017

ஆப்பிரிக்காவிலிருந்து…. - பகுதி 3 -டெமுஜின் எனும் பேராளுமை

சென்ற இரண்டு பகுதிகளில், நவீன மனிதன் தொடங்கிய இடம், அதற்கென முன்வைக்கப்பட்ட தியரிகள் மற்றும் அவைகளை ஆதரிக்கும் கருத்துக்களைப் பார்த்தோம். அதிலிருந்து சற்று விலகி, வேறு சில விசயங்களைப் பார்த்துவிட்டு மறுபடியும் "Out Of Africa"வில் இருந்து அடுத்த கட்டத்துக்கு செல்லலாம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் உயிரணுக்களில் 'எக்ஸ்' மற்றும் 'ஒய்' க்ரோமோசொம்கள் இருக்கும் என்பதும், பெண்களிடம் இருப்பது இரண்டுமே 'எக்ஸ்' க்ரோமோசோம்கள் என்பது நாம் அறிந்த விஷயம். டி.என்.ஏ மூலக்கூறுகள்  (Molecules) நெருக்கமாகப் பின்னப்பட்டதுதான் இந்த க்ரோமோசாம் எனப்படும் ரெட்டைச்சுருள் வடிவிலான இழை (Double Helix Strand).

இந்த 'ஒய்' க்ரோமோசோம்கள் ஆண் வாரிசுகளுக்கு தந்தையிடம் இருந்து அப்படியே வந்து சேரும். அப்பாவிடம் இருந்து மகனுக்கு, மகனிடம் இருந்து பேரனுக்கு என்று தப்பாமல் வரிசையாக சென்று கொண்டே இருக்கும். இதனை வைத்து யார் யாருக்கு முன்னோன் என்பதை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். பெண் பிள்ளைகளுக்கு இது இராது, ஏனென்றால், அப்பா மற்றும் அம்மா இருவரிடம் இருந்தும் வரும் 'எக்ஸ்' க்ரோமோசோம்கள் ஒன்றிணைந்து விடும். இது இயற்கையின் டிசைன். ஸ்பென்சர் வெல்ஸ் எனும் மரபியல் ஆய்வாளர், இந்த கணக்கை அடிப்படையாக வைத்து இப்போதுள்ள மொத்த மனித இனத்தின் தந்தை  (Y-Chromosomal Adam) யாராக இருக்கும் என்ற மாபெரும் ஆராய்ச்சியில் இறங்கினார். ஜீனோகிராபிக் ப்ராஜக்ட்  (Genographic  Project)எனப்படும் அந்த ஆராய்ச்சி வெளிக்கொண்டு விசயங்கள் ஏராளம்.

தனது டி.என்.ஏ சோதனையை சில மங்கோலியர்களிடம் இருந்து தொடங்கினார் வெல்ஸ்.  சரி..டெமுஜின் என்றால் என்ன ? இதற்கும் வெல்ஸ் செய்த டி.என்.ஏ சோதனைக்கும் என்ன தொடர்பு ? ஏன் மங்கோலியர்களிடம் இருந்து சோதனையைத் தொடங்க வேண்டும், ஒவ்வொன்றாக லாஜிக்கலாக பார்ப்போம்.
1270ம் ஆண்டு முதல், 1309ம் ஆண்டு வரை மங்கோலியர்கள் வசமிருந்த நிலப்பரப்பு, 1920களில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் வரும்வரை மிகப்பெரியது. 1100 களின் இறுதியில் வடகிழக்கு ஆசியாவில் நாடோடிகளாகத் திரிந்த இனக்குழுக்களை எல்லாம் ஒன்று திரட்டி, அவற்றின் பேரரசனாக தன்னை அறிவித்துக் கொண்டான் "டெமுஜின்" எனும் வீரன். டெமுஜின் என்றால் மங்கோலிய மொழியில் "இரும்பால் ஆன" என்று பொருள். பெயருக்கேற்றாற் போல, அதீத வலிமையோடு, மூர்க்கத்தோடும் இருந்த டெமுஜின், தனது படைபலத்தாலும் போர்த்திறனாலும் ஏகப்பட்ட தேசங்களை வென்றெடுத்தான்.

1206ல் அவன் பேரரசனாக தன்னை அறிவித்துக்கொண்ட போது, அவனது ராஜாங்கம் கஜகஸ்தானில் இருந்து கொரியா வரை பரவியிருந்தது. வடக்கே தற்போதைய ரஷ்யாவும், தெற்கே சீனாவுமே எல்லைகள். கிழக்கு மேற்காக தொடர்ந்து இருந்த நிலப்பரப்புகள் அனைத்துக்கும் அவனே அதிபதி. இங்குதான் வருகிறது நமது டி.என்.ஏ சோதனைக்கான ஆரம்பப்புள்ளி. இத்தனை தேசங்களை வென்றெடுத்த டெமுஜின் தன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அதே வேகத்தைக் கையாண்டிருந்தான். அவனுக்கு இருந்த நேரடியான குழந்தைகள் மட்டுமே கிட்டத்தட்ட ஆயிரம் பேர் என்கிறது ஒரு கணக்கு.குடும்பம் என்கிற கட்டுக்குள் இல்லாமல், வென்ற தேசங்களில் எல்லாம் தனக்கென சில நூறு வாரிசுகளை உருவாக்கி சென்றிருந்தான் டெமுஜின்.

அதாவது அவனது நேரடியான 1000 வாரிசுகளில் இருந்த ஆண்கள் அனைவருக்கும் தனது 'ஒய்' க்ரோமோசோமை பாஸ் செய்திருந்தான்.அந்த ஆண் வாரிசுகள், அவர்களது ஆண் வாரிசுகளுக்கு அதை அப்படியே பாஸ் செய்ய, இது பல தலைமுறைகளுக்கு தொடர்ந்தது. அடுத்தடுத்த தலைமுறைகளில் மங்கோலியப் பேரரசு ரஷ்யா மற்றும் சீனாவுக்கும் படர்ந்து விரிந்தது.அதனால், அந்தப் பகுதியில் இன்றும் வாழும் அநேகம் ஆண்களின் 'ஒய்' க்ரோமோசோம் டெமுஜினின் ஒய் க்ரோமோசோமுடன் ஒத்துப்போவதில் ஆச்சரியம் இல்லை. இப்படிப்பட்ட ஒரு க்ரோமோசோம் ஜெராக்ஸ் பேக்டரி இருப்பதற்கான வாய்ப்பு அங்கே அதிகம் இருந்ததால், மங்கோலியர்களிடம் இருந்து தனது ஆராய்ச்சியைத் தொடங்கினார் வெல்ஸ்.
இந்த டெமுஜின் என்பவன் வேறு யாருமில்லை. இந்த உலகம் கண்ட மாபெரும் போர்வீரர்களில் ஒருவனான "செங்கிஸ்கான்"தான் அது. 

இன்றும் மங்கோலியர்களில் பலர் தங்களை செங்கிஸ்கானின் வாரிசுகளாக எண்ணுகிறார்கள்.   பலகட்ட சோதனைகளுக்குப்பின் கிட்டத்தட்ட பதினாறு மில்லியன் ஆண்கள் செங்கிஸ்கானின் வாரிசுகள் என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. அதாவது, இந்த உலகத்தில் இருக்கும் ஆண்களில் 0.5% சதவிகிதம் பேர் அவனது வாரிசுகள். 

ஆனால் செங்கிஸ்கானை “Y-chromosomal Adam” ஆக ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் வெல்ஸ் தேடிக்கொண்டிருந்த மனிதனுக்கு வாரிசுகள் மில்லியன்களில் அல்ல பில்லியன்களில் இருந்தாக வேண்டும். இதிலிருந்து ஆராய்ச்சி எந்த பாதை நோக்கி சென்றது என்பதை அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

தொடரும்..

ஆப்பிரிக்காவிலிருந்து... - பகுதி 2 - முரண்கோட்பாடுகள்

இரண்டு தியரிகளில் ஒன்றான "Out Of Africa"வை முதலில் எடுத்துக்கொள்வோம். "ஹோமோ செப்பியன்ஸ்" உயிரினங்கள் அனைத்துமே ஆப்பிரிக்காவில் இருந்துதான் உருவாகி இடம்பெயர்ந்தன என்பதற்கு வைக்கப்படும் வலுவான காரணங்களில் சில,
1) ஆப்பிரிக்காவில் கிடைத்த படிமங்களில் உள்ள மரபணுக்களில் இருக்கும் பன்முகத்தன்மை (diversity) மற்றும் வகைகள் வேறங்கும் இல்லை. ஒரே இடத்தில் வெகுகாலமாக இருந்து வந்த உயிரினங்களின் மரபணுக்கள் மெதுவாக பிறழ்வடைந்தால்(Mutation) மட்டுமே இது போன்ற வெரைட்டி கிடைக்க வாய்ப்புண்டு.
2) ஹோமோ செப்பியன்ஸுகளுக்கு இடையில் இருக்கும் ஒருமுகத்தனமை, இவை அனைத்தும் ஒரே இடத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவை எனும் கருத்துக்கு வலு சேர்க்கிறது. இதைத்தான் ஆங்கிலத்தில் ஹோமோஜீனஸ் (Homogenous) என்கிறோம். ஒரே குரங்கினத்தில் இருந்து எடுக்கப்பட்ட இருவேறு மரபணு மாதிரிகளில் காணப்படும் வித்தியாசம், மனிதர்களில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் இல்லை என்பது கவனிக்க வேண்டிய விசயம்.
3) பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் உருவான “ஹோமோ எர்காஸ்டர்” (Homo Ergaster) உயிரினங்களில் சில ஐரோப்பாவிற்கு இடம்பெயர்ந்து அங்கேயே இருந்து, இன்றிலிருந்து கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் “நியாண்டர்தல்” ஆக பரிணாம வளர்ச்சி அடைந்தன. ஆப்பிரிக்காவில் இருந்த மீதி ஹோமோ எர்காஸ்டர்கள், ஹோமோ எரெக்டஸாக மாறி, பின்பு செப்பியன்ஸ்களாக பரிணாம வளர்ச்சி அடைந்தன. இரண்டுக்கும் இடையே இருந்த உருவ வித்தியாசங்களால்தான், “ஹோமோ நியாண்டர்தலின்ஸிஸ்” (Homo Neanderthalensis)எனும் தனி உயிரின வகைப்பாடே தோன்றியது.
4) 50000 முதல் 60000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்த செப்பியன்ஸுகள் ஐரோப்பாவிற்கு இடம்பெயர்ந்தவுடன் நியாண்டர்தல்களின் எண்ணிக்கை மளமளவென குறைந்துள்ளது. காரணம், இவர்களின் நவீன வளர்ச்சிக்கு எதிர்த்து நியாண்டர்தல்களால் ஈடுகொடுக்க முடியாததுதான். நியாண்டர்தல் இனத்தின் வளர்ச்சி குறைவாக இருந்ததற்கு காரணம், அவை ஐரோப்பாவில் தனித்து விடப்பட்டதுதான். ஒரு வேளை செப்பியன்ஸ்களாக அல்லாமல், எரெக்டஸாக ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறி இருந்தால், அவை நியாண்டர்தலை அழித்திருக்குமா என்பது சந்தேகமே ? ஏனென்றால் பரிணாம வளர்ச்சியில் நியாண்டர்தல் எரெக்டஸைவிட ஒரு படி மேல்.
ஆதலால், ஹோமோ செப்பியன்ஸ் எனும் நவீன மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றி, அங்கிருந்து உலகின பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து, மற்ற உயிரினங்களை அழித்து தன் இருப்பை உறுதியாக்கிக்கொண்டான் என்று கூறலாம். இருவேறு உயிரினங்களின் மூளையை ஆராய்ச்சி செய்தால் யார் வளர்ச்சி அடைந்தவர் என்பது தெளிவாகத் தெரிந்து விடும். ஆனால் மூளை படிமமாகாது என்பதால், வாழ்வியல் முறை மற்றும் கார்பன் டேட்டிங்கை வைத்து ஒரு முடிவுக்கு வரவேண்டியுள்ளது.
கவனிக்க, மேற்கூறிய இனங்களில் செப்பியன்ஸ் தவிர எதுவுமே நவீன, வளர்ச்சி அடைந்த மனிதன் இல்லை. நாம் இதுவரை பார்த்துக்கொண்டிருப்பது, நவீன மனிதனின் பிறப்பிடம்/தொடக்கம் எது என்பதைப் பற்றிய கருத்துகள்தான்.
அடுத்ததாக "Multi-regional" தியரிக்கு ஆதரவான கருத்துகளைப் பார்க்கலாம்,
1) தென் கிழக்கு சீனாவில் கண்டெடுக்கப்பட்ட "பல்" ஒன்றின் வயது கிட்டத்தட்ட 1,25,000 ஆண்டுகள் வரை இருக்கலாம் என்று அனுமானிக்கப்பட்டிருக்கிறது. அது ஹோமோ செப்பியன்ஸுடையது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி லட்சத்தி சொச்சம் ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் ஹோமோ செப்பியன்ஸ்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால், 60000 ஆண்டுகளுக்கு முன், ஆப்பிரிக்காவில் இருந்து ஹோமோ செப்பியன்ஸ் வெளியேறி மற்ற இடங்களுக்கு இடம்பெயர்ந்தார்கள் என்கிற கருத்து தவறாகிறது.
2) ஐரோப்பாவில் 1990களில் கண்டெடுக்கப்பட்ட 'ஓட்ஸி' எனப்படும் மம்மியின் உடலை ஆய்வு செய்ததில் கிடைத்த விசயங்கள் இவை.விஞ்ஞானிகளின் கூற்றுப்படி ஆராய்ச்சி செய்யப்பட்ட மம்மியில் இருந்த ஹெலிக்கோபேக்டர் பைலோரி (Helicobacter Pylori) எனப்படும் பேக்டீரியாவில் இரண்டு வகைகள் உண்டு(ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா). ஐரோப்பாவில் இருக்கும் மனிதர்களிடம் இந்த இரண்டும் சேர்ந்த கலப்பு இருக்கும். ஆனால் 'ஓட்ஸி'யை ஆய்வு செய்ததில் அதில் இருந்த பேக்டீரியாவில் சிறிதும் ஆப்பிரிக்க கலப்பு இல்லை. கார்பன் டேட்டிங்கின் படி அந்த மம்மியின் வயது கிட்டத்தட்ட 5300 ஆண்டுகள். 5300 ஆண்டுளுக்கு முந்தைய மனிதனிடம், 60000 ஆண்டுகளுக்கும் முன்பு இடம்பெயர்ந்த, செப்பியன்ஸின் உடலில் இருந்த, கலப்பினால் மாறுபட்ட ,இன்றைய ஐரோப்பியர்களின் உடலில் இருக்கும் பேக்டீரியா இல்லாதது நவீன மனிதன் ஆப்பிரிக்காவில் மட்டும்தான் தோன்றினான் என்கிற கருத்துக்கு எதிராக உள்ளது.
இங்கே நாம் பேசுவது சில ஆயிரம் ஆண்டுகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டு வெறும் 1000 ஆண்டுகள்தான் ஆகின்றன என்றால் நாம் எத்தனை பெரிய கால அளவைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை யோசித்துப் பாருங்கள். இதனூடே நாம் டெக்டானிக் தட்டுகளின் நகர்வையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆதலால் இதில் approximation தவிர்க்க முடியாதது. இந்த தியரிக்களின் அடுத்தகட்ட ஆராய்ச்சிகள், மற்றும்அவை மூலம் கிடைத்த தகவல்களை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
தொடரும்...

ஆப்பிரிக்காவிலிருந்து...- பகுதி 1-பேரினத்தொடர்பு

லெமூரியா மற்றும் மடகாஸ்கருடனானநமது கலாச்சார, வாழ்வியல் ஒற்றுமைகளைப் பற்றி எழுதிய பின்பு, மேலும் சில விசயங்களைப் பற்றி எழுதத் தோன்றியது. புத்தகங்களிலும், இணையத்திலும் படித்ததை வைத்து, முடிந்தளவுக்கு கோர்வையாக சிறு சிறு பகுதிகளாக எழுதலாமென்று இருக்கிறேன். எழுதப்போவதில் நிறைய விஷயங்கள் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அதனால் எல்லாவற்றையும் எழுதுவதுதான் நியாயம். தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
ஆப்பிரிக்கா என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது கருத்த சுருட்டைமுடி மனிதர்கள், கொளுத்தும் வெயில், பாலைவனங்கள், காட்டு விலங்குகள், ஆதிவாசிகள், கொஞ்சம் படித்தவர்களுக்கு உள்நாட்டுப் போர் விவகாரங்கள், நிறையப் படித்தவர்களுக்கு கிம்பர்லி ப்ராசஸ்.
வெகுஜனத்திற்கு அமெரிக்கா மேல் இருக்கும் மோகம் போல், ஆப்பிரிக்கா மீது ஒரு க்யூரியாசிட்டி உண்டு. காரணம் மேற்கூறிய எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பொருளாதாரம், அரசியல் தவிர்த்து ஆப்பிரிக்கா முக்கியத்துவம் பெறுவது அறிவியல் காரணங்களுக்காக. குறிப்பாக அகழ்வாராய்ச்சி மற்றும் மரபியல் என்று சொன்னால் மிகச்சரியாக இருக்கும்.
உலகில் இங்கு நடத்தப்பட்ட மரபியல் சோதனைகள் அளவு வேறு எங்கும் நடத்தப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. காரணமில்லாமல் ஏதோ ரேண்டம் ப்ராசஸ் முறையில் ஆப்பிரிக்கா ஆய்வாளர்களின் தேர்வாக இருக்கவில்லை. இங்கு கிடைத்த அளவு உயிரின மரபணு வகைகள் வேறெங்கும் கிடைக்கவில்லை. இவ்வளவு பன்முகத்தன்மை கொண்ட படிமங்கள், மரபணுக்கள் வேறெந்த நிலப்பரப்பிலும் இல்லை. அதனால்தான் ஜோகனெஸ்பர்க்கிற்கு அருகே இருக்கும் இடம் "மனித இனத்தின் தொட்டில்" (Cradle of Mankind) என்று அழைக்கப்படுகிறது.
இந்தக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு "Out Of Africa" எனும் தியரி முன்வைக்கப்பட்டது. அதாவது இன்று உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் அனைவருமே ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் என்பதுதான் அது. அதாவது இன்றைக்கு ஆசியன், அமெரிக்கன், யூரோப்பியன் என்று இனவகைப்படுத்தப்பட்டாலும் உங்கள் தொடக்கம் ஆப்பிரிக்கன் என்கிற மாஸ்டர் ரேஸில் இருந்துதான் என்பது இந்தத் தியரியின் சாராம்சம். 
இதோடு சேர்த்து முன்வைக்கப்பட்ட இன்னொரு தியரி "Multiregional". இரண்டு தியரிகளுக்கும் உள்ள வேறுபாடுகளைப் பார்ப்போம்.
1) Out Of Africa - "ஹோமோ எரெக்டஸ்" எனும் உயிரினம் (Homo Erectus) பரிணாம வளர்ச்சி அடைந்து, ஹோமோ செப்பியன்ஸ் ஆக மாறி, அதன் பின்னர் ஹோமோ செப்பியன்ஸ்கள் ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்தார்கள்.
2)Multi-regional - "ஹோமோ எரெக்டஸ்கள்" அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சிக்கு முன்னரே ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயரத் தொடங்கிவிட்டன. வெவ்வேறு நிலப்பரப்புகளுக்கு சென்று தங்கி, வாழ்ந்து, அதன்பின்னர் அங்கங்கே ஹோமோ செப்பியன்ஸ்களாக பரிணாம வளர்ச்சி அடைந்தனர்.
தியரி ஒன்றின் படி, இப்போதிருக்கும் மனிதர்கள் எனும் உயிரினத்தில் இருக்கும் அனைவருக்கும் (ஹோமோ செப்பியன்ஸ் எனும் species) மரபணு அடிப்படையில் நிறைய ஒற்றுமை இருக்க வேண்டும். ஏனென்றால் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறியதே பரிணாம வளர்ச்சியடைந்த இப்போதிருக்கும் உயிரினமாகத்தான்.
தியரி இரண்டின் படி, இப்போதிருக்கும் மனிதர்களிடம் நிறைய வித்தியாசங்கள் இருக்க வேண்டும். காரணம் இதன்படி இன்றைய மனிதனுக்கு நேர்கீழே இருக்கும் ஹோமோ எரக்டஸ் எனும் உயிரினமாக இடம்பெயர்ந்து அதனில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளோம்.
லத்தீனில் ஹோமோ என்றால் "மனிதன்" என்று பொருள். செப்பியன்ஸ் என்றால் "அறிவுள்ள" என்று பொருள். பரிணாமச் சங்கிலியில் செப்பியன்ஸுக்கு நேரடியாக கீழிருந்த உயிரினங்கள் "ஹோமோ எரெக்டஸ்". எரெக்டஸ் என்றால் லத்தீனில்நேராக நிற்கக்கூடியஎன்று பொருள். கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால். "ஹோமோ" என்கிற பேரினத்தில் (ஜீனஸ்) மிச்சமிருக்கும் ஒரே உயிரினம் (ஸ்பீசிஸ்) செப்பியனஸ் மட்டுமே.
இதில் எந்தத் தியரி சரியானது என்ற முடிவுக்கு வருவது எப்படி ? உலகில் பல இடங்களில் இன்று வாழும் மனிதர்களின் டி.என்.ஏக்களை எடுத்து, அதன் மரபணுக்களை, ஆப்பிரிக்காவில் இருந்து எடுக்கப்பட்ட மிகப்பழைய "ஹோமோ செப்பியன்ஸ்" டி.என்.ஏவுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அதில் ஒற்றுமை இருந்தால் முதல் தியரி சரி.ஏனென்றால் இத்தனை ஆண்டுகள் பரிணாம வளர்ச்சிக்குப்பின் ஒற்றுமை இருக்கிறதென்றால், அங்கிருந்துதான் நம் பயணம் தொடங்கியிருக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வர இயலும். ஒரு வேளை ஒற்றுமை இல்லையென்றால், பரிணாம வளர்ச்சியில் இதற்கு முந்தைய உயிரினமாக இருந்த பொழுது ஒற்றுமை இருந்திருக்கலாம். ஆனால் இந்த உயிரினமாக வளர்ச்சி அடைந்த பின்பு ஒற்றுமை இல்லை. நாம் பல்வேறு இடங்களில் தனித்தனியாக பரிணாம வளர்ச்சி அடைந்தோம் என்று எடுத்துக்கொள்ளலாம்.
உதாரணமாக மனிதனுக்கும் சிம்பன்ஸிக்கும் இருக்கும் டி.என்.ஏக்கள் 95 சதவிகிதம் ஒத்துப் போகும். இருந்தாலும் நமக்குள் எவ்வளவு வேறுபாடுகள் இருக்கின்றன ? காரணம் இரண்டும் "ஹோமினிடே" எனும் குடும்பத்தில் இருந்து பிரிந்து, இருவேறு பேரினங்கள் வழியாக வளர்ச்சியடைந்த வெவ்வேறு உயிரினங்கள். மனிதர்கள் ஹோமோ எனும் பேரினத்தின் வழி வந்தவர்கள். சிம்பன்ஸிகள் "பேன்" எனும் பேரினத்தின் வழி வந்தவை.
இந்த அறிவியல் வகைப்பாட்டை (Scientific Classification) எளிதாகப்புரிந்து கொள்ள இவ்வாறு எடுத்துக்கொள்ளலாம்,
Kingdom-->Phylum or Division-->Class-->Order-->Family-->Genus-->Species.
Family – குடும்பம் (E.g Hominidae)
Genus –
பேரினம் (E.g Homo, Pan)
Species –
உயிரினம் (E.g.Sapiens, Erectus)
இந்த இரண்டில் எந்தத் தியரி சரி ? எது தவறு ? அதிலிருந்து மேற்கொண்டு நடந்த ஆய்வுகள் என்னென்னெ என்பதை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
தொடரும்..