Thursday, April 30, 2009

ஜகதலப்பிரதாபங்கள் - அஞ்சு ரூவா நோட்டு

இது நான் ஏற்கனவே எழுதுன பதிவு தான்.ஆனா மறந்து போய் டெலீட் பண்ணிட்டேன்...அதுனால திருப்பி எழுதுறேன்."பிளேடு பக்கிரி" "பணம் கக்கி மெசின்" இதெல்லாம் இதுக்கப்புறம் எழுதுன பதிவுகள் தான்.

நான் அப்போ ரெண்டாங்கிளாஸ் படிச்சிட்டு இருந்தேன்னு நினைக்கிறேன்.எங்க வீட்டுல எப்போவும் போல அப்பவும் ரொம்ப கண்டிப்பு.நானும் ரொம்ப நல்ல பைய்யன் மாதிரி ஆக்சன போட்டுட்டு தான் இருந்தேன்.ஆனா விதி என் பிறந்த நாள் வடிவுல வந்துச்சு.வழக்கம் போல காலைல எந்திச்சு சாமி கும்பிட்டு, அப்பா அம்மா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு , கேசரி பொங்கல் எல்லாம் சாப்டாச்சு.எங்க அப்பா என் கையில ஒரு ஸ்வீட் பாக்ஸ் ,கேசரி எல்லாம் குடுத்து அவரோட கூட வேல பாக்குறவரு வீட்ல குடுத்துட்டு வர சொன்னாரு.போறப்போ எங்க அப்பா "டேய் .. அவுங்க வீட்டுல அன்பளிப்புன்னு காசு ஏதாது குடுத்தா வாங்க கூடாது ..என்ன புரியுதா"னு ரொம்ப அழுத்தி சொன்னாரு . அது வரைக்கும் எனக்கு இது ஒரு பெரிய பிரச்னைல கொண்டு போய் விடப்போகுதுனு தெரியல.

நாலு வீடு தள்ளி தான் அவரு வீடு.அவிங்கள பாக்க எனக்கு புடிக்கலனாலும், நம்ம புது டிரெஸ்ஸ காமிச்சு ஒரு பந்தா வுட்டுட்டு வரலாமேனு ஆசைப்பட்டு போனேன்.அவிங்களும் கூப்பிட்டு ஆசீர்வாதம் பண்ணாங்க.கெளம்புறப்போ "தம்பி..இந்தாப்பா இத வச்சிக்கோ"னு ஒரு நஞ்சு போன அஞ்சு ரூவா நோட்ட கைல குடுத்தாங்க.ஆத்தாடி ...இது என்ன ..இத வாங்குன வீட்டுல பெண்டு நிமித்திருவாங்களேனு.."மாமா வேணாம் மாமா ,,ப்ளீஸ் மாமா" னு எவ்வளவோ கெஞ்சுனேன்.அந்த வில்லத்தனம் புடிச்ச மனுஷன் கடைசி வரைக்கும் கேக்கவே இல்ல.அத கைல வாங்குறப்போ எங்க அப்பா சொன்னது ஒரு வாட்டி மைண்ட் வாய்ஸ்ல வந்துட்டு போச்சு.வேற வழி இல்லாம வாங்கிட்டு வந்துட்டேன்.

காசு கைல வந்த உடனே என்ன ஒரு சந்தோசம். அப்பா சொன்னது மறந்தே போச்சு.வீட்டுக்கு வந்துட்டு ஸ்கூலுக்கு கெளம்பும் போது,எங்க அப்பா மறுபடியும் கேட்டாரு "டேய் ஏதாது காசு வாங்குனியா...வாங்கலேல"னு கேட்டாரு ."இ இ இ இல்லப்பா "னு கெளம்பி ஓடி வந்துட்டேன்.ஸ்கூலுக்கு வந்தப்புறம் மனசுல ஒண்ணுமே ஓடல.இந்த அஞ்சு ரூவாய எப்டி எல்லாம் செலவழிக்கலாம்னு பயங்கர கணக்கு வழக்கு பாத்துகிட்டு இருந்தேன்.தேன் முட்டாய் வாங்கலாமா..பாக்கு முட்டாய் வாங்கலாமான்னு ஒரே குழப்பம் .இப்டி கொடூரமா யோசிச்சிகிட்டே சாயங்காலம் ஆயிடுச்சு.வீட்டுக்கு போறதுக்கு வேன் வேற வந்துருச்சு.அய்யயோ இவ்வளவு பெரிய அமௌன்ட்ட வீட்டுக்கு கொண்டு போகணுமான்னு பயம் வந்துருச்சு.

எங்க அப்பா பாசமா பேசுனாலே வினுச்சக்கரவர்த்தி வீர வசனம் பேசுன மாதிரி இருக்கும் .அவரு ரெண்டு வாட்டி வேற கேட்டுருந்தாரு "வாங்கலேலனு". அதுக்கு தைரியமா பொய் சொல்லிட்டேன்.ஆனா இப்போ என்ன பண்றதுன்னு புரியல.அப்போ தான் அந்த சனியன பாத்தேன்.என் காலனி ல இருந்து..என் கூடவே வேன்ல ஸ்கூலுக்கு வர்ற என்னோட ஜூனியர் .அவன் ஒண்ணாங்கிளாஸ் படிச்சிட்டு இருந்தான்.பயங்கரமா திங்க் பண்ணி ஒரு முடிவுக்கு வந்தேன்.

அவன்கிட்ட போயி.."தம்பி .. இந்த காச நீ வீட்டுக்கு கொண்டு போயிரு ... வீட்டுல கேட்டாங்கன்னா ..கீழ கெடந்து எடுத்தேன்னு சொல்லிரு..என்ன " அப்டின்னு சொல்லி..அவன கன்வின்ஸ் பண்ணி அந்த கருப்பு பணத்த பதுக்கிட்டேன்.அவனும் ஒண்ணுமே சொல்லாம வாங்கி ஜோப்புல போட்டுகிட்டான்.இதுல நீங்க கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா அவுங்க அக்கா அப்போவே ரொம்ப அழகா இருக்கும்...ஹி ஹி .காசக்குடுத்து பாரம் குறைஞ்ச சந்தோசத்துல நிம்மதியா வீட்டுக்கு போயிட்டேன்.

உள்ள நுழைஞ்சு காபியெல்லாம் குடிச்சு முடிச்சு ஹோம் வொர்க் எழுதிட்டு இருக்கும் போது , எங்க அப்பா மறுபடியும் கேட்டாரு "டேய் காலைல வாங்கலேல..பொய் சொல்லக்கூடாது" .என்னடா இது திரும்ப திரும்ப கேக்குறாரு.ஒரு வேளை நாம வாங்குனது தெரிஞ்சிருக்குமோனு ஒரு சின்ன பயம்.இருந்தாலும் "இல்லப்பா" னு தெம்பா சொல்லிட்டு என் வேலைய பாக்க ஆரம்பிச்சிட்டேன்.

கொஞ்ச நேரம் கழிச்சு வீட்டு கதவ யாரோ தட்டுனாங்க.தெறந்து பாத்த உடனே எனக்கு அந்த வயசுலேயே ஹார்ட் அட்டாக் வந்துருச்சு.நான் காசு குடுத்து வுட்ட சனியன் அவுங்க அம்மா வோட நிக்குறான்.சுந்தரு ...உனக்கு ஜூன் மாசமே தீபாவளிக்கு ஏற்பாடு பண்ணிடாங்கடான்னு தோணுச்சு.அவுங்க அம்மா எங்க வீட்டுல வந்துட்டு "இந்தா பாருங்க..உங்க பையன் ..காசெல்லாம் குடுத்து ..எங்க சின்ன பையன கெடுக்குறான்" னு சொல்லிச்சு. "டேய் எனக்கு என்ன நாப்பது வயசாடா ஆகுது..உன் பைய்யன விட ஒரு வயசு தாண்டா ஜாஸ்தின்னு " சொல்ல வர்றதுக்குள்ள அவுங்கம்மா நான் கிரவுண்ட்ல பண்ண அலும்பெல்லாம் அவுத்து வுட்ருச்சு.

எங்கப்பா அப்போ திருப்பி கேட்டாரு "டேய்..நீ தான் குடுத்தியா"
அப்போ கூட நான் பொய் சொல்லிருக்கலாம் ..ஆனா சொல்லல..ஏன்னா என் விதி .."ஆமப்பா" னு சொன்னேன்."என் பையன நான் கண்டிச்சு வக்கிறேன்"னு எங்க அப்பா அவுங்கட்ட சொல்லிட்டாரு."எங்க இருந்துடா உனக்கு இந்த காசு கிடச்சுது "னு கேட்டாரு."மாமா குடுத்தாங்கப்பா "னு சொல்லி முடிக்கல.என்னா அடிங்கிரீங்க ...சும்மா சொழட்டி சொழட்டி பேத்து எடுத்துட்டாங்க..ஒழுங்கா சொல்லிருந்தா காசு வாங்குனதுக்கு மட்டும் தான் அடி விழுந்திருக்கும் ..இப்போ பொய் சொன்னதுக்கும் சேத்து வேற அடி.

மறுநாள் ஸ்கூல் போறப்போ அந்த பையன்கிட்ட ,அவன் என்னைய மாட்டி வுட்டதக்கூட மறந்துட்டு அவுங்க அக்காவ மனசுல வச்சு பேசினேன். சாந்தமா போயி "எப்படிடா மாட்டுச்சு" னு கேட்டதுக்கு கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம "மேக்ஸ் நோட்டுல வச்சிருந்தேன்"னு சொல்றான்.காசு ஒளிச்சி வைக்கிற இடமாடா இது னு வந்த கோவத்துல அவன் கைய புடிச்சு கடிச்சு வச்சிட்டேன்.நீங்களே சொல்லுங்க..கொஞ்சமாது வெவரம் வேணாம்.அதுக்கப்புறம் நான் அவனையும் பாக்கல..அவுங்க அக்காவையும் பாக்கல.

ஆனா இன்னும் அவன் மேல இருக்குற கோவம் குறையல.இப்போ பாத்தாலும் ...அவன இந்த துரோகத்த சொல்லி சொல்லி அடிக்கணும்னு வச்சிருக்கேன்.இந்த வாட்டி அவுங்க அக்காவுக்காகக்கூட அவன மன்னிக்க மாட்டேன்..ங்கொய்யால...என்னா மனுஷன் அவன்லாம்..

Wednesday, April 29, 2009

சித்தவைத்தியமும் சின்னாபின்னமும்

நான் எந்த ப்ரோக்ராம் பத்தி சொல்ல வர்றேன்னு இதுக்குள்ள எல்லாத்துக்கும் தெரிஞ்சிருக்கும்.அதுல ப்ரோக்ராம் நடத்துற ஆளுக்கு என்ன வயசிருக்கும்.வயசுக்கேத்த பேச்சா பேசுறாரு அவரு.தாங்க முடியலடா சாமி . நானும் ரெண்டு வருசமா பாத்துகிட்டு இருக்கேன், எப்போ பாத்தாலும் அந்த ப்ரோக்ராம் ல வர்ற நிரந்தரமான டயலாக் இதுதான்

"இப்போ உள்ள காலகட்டங்கள்ல .. தப்பு பண்ணி ..தப்பு பண்ணி ...எல்லாருடைய வாழ்கையும் சின்னாபின்னம் ஆயிட்டு இருக்கு"
"ஏண்டா இப்டி பண்ணி வாழ்க்கைய அழிச்சிக்கிறீங்க",
"நீ தப்பு பண்ணி ,அதுனால வாழ தகுதி இல்லாம ஆனது மட்டும் இல்லாம..ஏண்டா தமிழ்நாட்டு பொண்ணுங்களோட வாழ்க்கையையும் சீரழிக்கிற"

இவ்வளவு கொடூரமா பேசிட்டு, அதுக்கப்புறம் "எனக்கு ரெம்ப பெருமையா இருக்கு ..எனக்கு கோடிக்கணக்குல பேரப்புள்ளைக இருக்காங்க.அமெரிக்காவுல இருந்து போன் பண்ணாங்கோ...ஆப்பிரிக்காவுல இருந்து போன் பண்ணாங்கோ..அண்டார்டிகாவுல இருந்து போன் பண்ணாங்கோ"னு சொல்லுவாரு .என்னடா ஒரு சைசா குழப்புராறேனு பாத்தா..அங்க இருந்தெல்லாம் கால் பண்ணி , இவருகிட்ட "தாத்தா நான் தப்பு பண்ணிட்டேன் தாத்தா..என்னைய காப்பாத்துங்க தாத்தா"னு கேட்டாங்களாம்.ஏண்டா ஒரு அளவு இல்லையாடா.

"தாத்தா கிட்ட வாப்பா ..நான் உன்ன சரி பண்ணி அனுப்புறேன் "னு அவரு சொல்றப்போ சத்தியமா சிரிப்பு தான் வருது . ஆனாலும் உண்மைய சொல்லணும்னா,லொள்ளு சபாவ விட இவரு ப்ரோக்ராம் தான் பயங்கர காமெடியா இருக்கு.

இதுல தொழில் ரகசியம் என்னானு கேட்டீங்கன்னா ,இவிங்க ரெண்டு மூணு தலைமுறையா இதத்தான் பண்ணிக்கிட்டு இருக்காங்களாம்.இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோ ...

அங்கே ஈழம் எரிகிறது..இங்கே பிரச்சாரம் சூடு பிடிக்கிறது

யப்பா சாமிகளா...நீங்க அங்க செத்துக்கிட்டு இருக்குற நம்ம சொந்தக்காரனை காப்பாத்த வேணாம்.அவுங்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்க வேணாம்.அது தமிழனோட விதி.
இதையெல்லாம் பாத்துட்டு ..ஒண்ணும் பண்ண முடியாம,புலம்புறதுக்கும் அழுறதுக்கும் மட்டும் தான் நம்ம இருக்கோமா ..அப்டின்னு நினைக்கும் போது சாதாரண மக்களான எங்களுக்கே அசிங்கமா இருக்கு.அது எப்டி ,கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம..இதையும் வச்சி அரசியல் பண்ணனும்னு நினைக்கிறீங்க ?

நம்ம இனம் அழிஞ்சிகிட்டு இருக்கு.அத வச்சு நாமளே அரசியல் பண்றது அசிங்கமா இருக்கு.செஞ்சத சொல்லி ஓட்டு கேளுங்க,இல்ல செய்யப்போறத சொல்லி ஓட்டு கேளுங்க.இங்க எட்டு கோடி பேர் இருந்தும் அங்க அனாதையா செத்துக்கிட்டு இருக்கவன வச்சு உங்க ஓட்டு வேட்டைய நடத்தாதீங்க...நல்ல இருப்பீங்க.இந்த ஆட்சி ,அந்த ஆட்சினு இல்ல...எது இருந்தாலும் அவன காப்பாத்த முடியாது.ஏன்னா அவன் தமிழன் பாருங்க.இன்னும் ஒரு ஒண்ணு ரெண்டு மாசம் போனா,இங்க நாம போராடுறதுக்கு அங்க ஒருத்தனும் உயிரோட இருக்க மாட்டாங்க போலிருக்கு. இதுல இத வச்சு அரசியல் வேற .

அப்புறம் ஒரு விஷயம்..யாரோ ஒரு தலைவரு " முத்துக்குமாரா.. அது யாரு" னு கேட்டுருக்காராம்.நீங்கெல்லாம் ரெம்ப நாளைக்கு நல்ல இருப்பீங்க சாமி..

காதலும் காத்தாடியும் - ஒரு அருமையான விளக்கம்

ஒரு நாளு சூர போதையில இருந்த என் நண்பன் ரமேசு ...ஹாஸ்டல் ல ரிப்பேர் பண்றதுக்காக கழட்டி வச்சிருந்த ஃபேனை தூக்கி கைல வச்சிக்கிட்டு .. என் கிட்ட கேட்ட ஒரு கேள்வி...

"காதல்ங்கறது காத்து மாதிரி
காத்து ஃபேன் ல இருந்து வருது
என் கையில ஃபேன் இருக்கு ...அப்போ
எனக்கு காதல் வந்துருச்சா ?? "

உங்க யாருக்காது பதில் தெரிஞ்சா தயவு செஞ்சு சொல்லுங்க ...ப்ளீஸ்....