Friday, May 29, 2009

எனது பதிவுக்கு கிடைத்த ஒரு பின்னூட்டம் , கண்டிப்பாக படியுங்கள்

"இலங்கையில் பத்து ஏக்கர் பண்ணை, இங்கே தச்சு வேலை"

என்னுடைய இந்த பதிவுக்கு, அன்பர் "உண்மை விரும்பி" இட்ட பின்னூட்டத்தை, அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக,இங்கே தனி பதிவாக எழுதி உள்ளேன்.உங்கள் கருத்துகளையும் சொல்லவும்.

உண்மை விரும்பி said...
அன்பரே!
இன்றை இலங்கை மக்களின் பிரச்சினை தனி ஈழம் அல்ல. தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ளவும், உறைவிடமும் உணவும் தான் என்பதை மறவாதீர். உம்மைப் போன்றி வெளிநாடுகளில் இருந்து கொண்டு தனிஈழம் தனிநாடு என்று கதைத்துக் கொண்டு இருப்போர் ஒரு தடவை இங்கு வந்து எறிகணைகளுக்கு மத்தியில் மாட்டுபட்டால் தெரியும். இங்கு இன்று அகதி முகாம்களில் உடல் அங்கங்களை இழந்து உறவுகள், உடமைகளை இழந்து கற்பிழந்து இனி இழக்க ஏதும் இல்லாத நிலையில் இருக்கும் உறவுகளிடம் சொல்லிப் பாருங்கள் தமிழ்நாடு தமிழீழம் கதையை. உங்களை செருப்பால் அடிக்கும். பட்டால் தானே தெரியும் எதுவும். நமக்கு தமிழ் ஈழம் கொடுத்தால் மட்டும் நாங்கள் என்ன ஒற்றுமையாய் அமைதியுடன் வாழப் போகின்றோமா? அப்பொழுதும் நான் யாழ்ப்பானத்தான் நீ வன்னியான் அவன் மட்டக்களப்பான் இவன் தோட்டக்காட்டான் என்று வேற்றுமை பாராட்டி அடித்துக்கொள்ளத்தானே போகின்றோம்.”சிங்களவன் தேவ....மகன்” என்று ஓர் வசனத்தை உங்கள் பதிவில் இட்டு உள்ளீர்கள். அதில் சிங்களவன் என்பதுடன் தமிழ் என்பதையும் சேர்த்துக் கொண்டால் சரியென்பேன். ஏனென்றால் இங்கு வன்னியிலும் கூட எத்தனையோ பாலியல் ரீதியா பிரச்சினைகள் வி.பு. தளபதிகளால் ஏற்படவில்லையா(உ.தா. முன்னால் வி.பு உறுப்பி்னர் கருணா,அவர் வி.பு விட்டு வெளியேறிய பிறகுதான் அவர் அவளுடன் தொடர்பு இவளுடன் படுத்தார் என்ற செய்தியெல்லாம் வெளியிடப்பட்டது வி.புவால் அப்படியானால் அதற்கு முன்பே அவர்களுக்கு தெரிந்த தானே உள்ளது. இப்படி எத்தனை எத்தனையோ சொல்ல முடியாத விடயங்கள் வி.புவிலும் ஏனைய ஒட்டு தமிழ் குழுக்களினாலும் நடந்தேறியுள்ளது.)

இங்கு வாழும் மக்களின் இப்பொழுதைய என்னோட்டம். எங்களுக்கு தமிழீழமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். இவனுங்களை விட சிங்கள அரசே பரவாயில்லை என்பதுதான்.

நண்பரே !!

தங்கள் வலியும் வேதனையும் எனக்கு புரிகிறது.ஆனால் அதை நேரடியாக அனுபவிப்பது நீங்கள்தான் என்பதால் , உங்களுக்கு தான் அதன் வீரியம் தெரியும்.

//உம்மைப் போன்றி வெளிநாடுகளில் இருந்து கொண்டு தனிஈழம் தனிநாடு என்று கதைத்துக் கொண்டு இருப்போர் ஒரு தடவை இங்கு வந்து எறிகணைகளுக்கு மத்தியில் மாட்டுபட்டால் தெரியும்.


உண்மைதான் நண்பரே .. அதற்காக கடல் கடந்து அனைத்தையும் இழந்து தவித்து கொண்டிருக்கும் என் உறவினர்களுக்காக நானும் , என்னைப் போல் ஒத்த எண்ணம் கொண்ட நண்பர்களும் , மனதில் இருப்பதைத் கொட்டாமல் இருக்க முடியுமா.

//பட்டால் தானே தெரியும் எதுவும்.

நாங்க‌ள் நீங்க‌ள் ப‌ட்ட‌ துன்ப‌த்தை போல் எதுவும் அனுபவித்த‌து இல்லை.
ஆனால் , என் இன‌ம் அங்கே பாடு ப‌டுவ‌தை நினைத்து தீராத‌ வேத‌னையில் இருக்கிறோம் என்ப‌து ம‌ட்டும் உண்மை.வேத‌னைப்ப‌டுவ‌தைத் த‌விர‌ வேறெதுவும் செய்ய‌ இய‌லாத‌ பேடிக‌ளாக‌ இருக்கிறோம் என்ப‌து தான் நித‌ர்ச‌ன‌ம்.


//இங்கு வாழும் மக்களின் இப்பொழுதைய என்னோட்டம். எங்களுக்கு தமிழீழமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். இவனுங்களை விட சிங்கள அரசே பரவாயில்லை என்பதுதான்.

எங்க‌ளுக்கு அங்கே இருக்கும் நிலைமையை தெரிய‌ப்ப‌டுத்துவ‌து ஊட‌க‌ங்க‌ள் தான். எஞ்சிய‌ ம‌க்க‌ளை பாதுகாப்ப‌த‌ற்காக‌ சிங்க‌ள‌ அர‌சே ப‌ர‌வாயில்லை என்று ஏற்றுக் கொண்டாலும், ஒரு இன‌த்தை அழித்துக் கொண்டு இருக்கும் அர‌சை விம‌ர்சிக்க‌ கூடாதா..


என்னுடைய‌ ப‌திவு ஏதெனும் வித‌த்தில் உங்க‌ள் ம‌ன‌தை புண்ப‌டுத்தி இருக்குமானால் , அத்ற்காக‌ நான் உங்க‌ளிட‌ம் ம‌ன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

3 comments:

Anonymous said...

எனக்கு இருக்கும் ஒரு பிரச்சனை இந்த பின்னூட்டத்தில் என்னவென்றால், த.வி.பு அமைப்பு மட்டுமே பெண்கள் விடயத்தில் கட்டுக்கோப்பாக இருந்த அமைப்பு, அவர்கள் வெளியில் என்ன செய்தார்கள், தாய்லாந்தில் என்ன செய்தார்கள் என்பதிருக்கட்டும், ஆனால் அவர்கள் செல்வாக்குப்பிரதேசங்களிலோ, அவர்களுக்கு அடங்கிய மக்களிடமோ அவர்கள் கண்ணியமாகத்தான் நடந்துள்ளார்கள். அவர்களின் கட்டுப்பாட்டில் ஒரு 8 வருடம் இருந்த அனுபவத்தில் சொல்கிறேன். கருணா பிரிந்து சென்றபின் அவரின் பெயரை களங்கப்படுத்துவதற்கும் துரோகிப்பட்டம் சுமத்துவதற்குமான ஒரு முயற்சியாக இது இருக்கலாம். ஆனால் பொதுவில் த.வி.பு எப்போதும் கீழ்த்தரமாக நடந்து கொண்டது கிடையாது. நானொன்றும் த.வி.பு விட்ட வரலாற்றுத்தவறுகளுக்கு வக்காளத்துவாங்குபவன் இல்லை. ஆனால் தமிழன் இவ்வளவுகாலம் சீலையுரிபடாமல் இருந்தது அவர்களால்தான். இல்லாவிட்டால் நாயைவிடக்கீழ்த்தரமாகத்தான் நாங்கள் பேரினவாதிகளால் நடத்தப்பட்டிருப்போம். தமிழனென்று சொல்லி சிற்றளவேனும் கவுரவமாக நாமிந்த மண்ணில் நடந்து திரிந்ததுக்கு அவர்கள் செய்த யுத்தம் தான் காரணம். நாம் எமக்குள் சண்டை பிடிக்கிறது உள்வீட்டுப்பிரச்சனை. வேறொருத்தன் எனது வீட்டுக்குள் வந்து ஏனிங்கு நீயிருக்கிறாய் என்று கேட்பதைவிட வீட்டுக்குள் இருப்பவன் வந்து கேட்பது ஒப்பீட்டளவில் கவுரவமானது. நானொன்றும் யுத்தத்தால் பாதிக்கப்படாமல் சொகுசு வாழ்க்கை வாழ்பவனல்ல. இதுவரைக்கும் 4 முறை இடம்பெயர்ந்திருக்கிறேன், ஊரில இருந்த ஒரு வீட்டில இப்ப மிச்சமிருக்கிறது தலைவாசல் மட்டும்தான். யுத்தம் என்னையும் பாதிச்சிருக்குத்தான். ஆனால் அதுக்காக எல்லாத்தையும் விட்டிட்டு ஏறிமிதிக்க மிதிபட்டுப்போற அளவுக்கு எனக்கு மானம் மரத்துப்போகேலை. தமிழீழமும் வேண்டாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம் எண்டு முடிவெடுக்க நியாயம் இருக்கு, அதுக்காக உவங்கள் செய்யிற அநியாயம் எல்லத்தையும் பாத்து தலைவிதி உதுதான் எண்டு தலையில அடிச்சுப்போட்டு அவன் குட்டக்குட்ட குனியிற அளவுக்கு நானின்னும் வரேலை. பின்னூட்டமிட்டவர் சொல்லுறமாதிரி வன்னிக்கை இருந்து அடிபட்டு தேறி வந்தவன் தான் நானும், ஆனா மானம் விட்டு உசிர் பெரிசெண்டு உதைபட நான் தயாரில்லை. இது என்ரை கருத்து...ஒருத்தரோடையும் வில்லங்கத்துக்கு சண்டை பிடிக்கோணும் என்பதற்காக இல்லை.

சண்முக சுந்தரம் said...

@அனானி

அருமையான பின்னூட்டம்.

//யுத்தம் என்னையும் பாதிச்சிருக்குத்தான். ஆனால் அதுக்காக எல்லாத்தையும் விட்டிட்டு ஏறிமிதிக்க மிதிபட்டுப்போற அளவுக்கு எனக்கு மானம் மரத்துப்போகேலை//

ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டிய தன்மானம் இது.

உங்கள் பின்னூட்டத்தையும் தனிப் பதிவாக இடுகிறேன்.வலைத்தள நண்பர்கள் வாசிக்கட்டும்.

முகிலினி said...

Lived in their place till 2006 Aug. த.வி.பு எப்போதும் கீழ்த்தரமாக நடந்து கொண்டது கிடையாது. That is the truth. My mom lived there till May the end. The truth த.வி.பு எப்போதும் கீழ்த்தரமாக நடந்து கொண்டது கிடையாது.தமிழன் இவ்வளவுகாலம் சீலையுரிபடாமல் இருந்தது அவர்களால்தான். இல்லாவிட்டால் நாயைவிடக்கீழ்த்தரமாகத்தான் நாங்கள் பேரினவாதிகளால் நடத்தப்பட்டிருப்போம். தமிழனென்று சொல்லி சிற்றளவேனும் கவுரவமாக நாமிந்த மண்ணில் நடந்து திரிந்ததுக்கு அவர்கள் செய்த யுத்தம் தான் காரணம்.

It is the truth.

Ignore உண்மை விரும்பி pls.