Monday, July 20, 2009

அந்த 20 நிமிடங்கள் !!

இன்னும் 20 நிமிடம் தாக்குப்பிடித்துவிட்டால் போதும். சுரேஷ் மிகுந்த பதட்டத்துடன் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான்.தான் செய்வது அவனுக்கு தவறு என்று தெரிந்தது.இருந்தாலும் அவன் மனம் அவன் பேச்சை கேட்கவில்லை.இதற்காகத்தானே இத்தனை நாட்களாய் காத்துக் கொண்டிருந்தான்.அவன் செய்வது அப்பாவிற்கு தெரிந்தால் நடப்பதே வேறு.

மசங்கிய முன்னிரவுப் பொழுது. பனி இறங்க ஆரம்பித்திருந்தது. நெடுஞ்சாலையில் இருந்து வலதுபுறம் திரும்பி ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தால், அந்த பங்களாவை நீங்கள் அடையலாம். ஆங்காங்கே பெரிய வீடுகள் தென்பட்டாலும், இது மட்டும் தனியாக இருப்பது போன்ற அமானுஷ்ய தோற்றத்தை உண்டு செய்தது.காம்பவுண்டுக்குள் இருந்த அசோக மரங்கள் காற்றுக்கு சலசலத்து மனதில் ஒரு வித அச்சத்தை உண்டு செய்தது.

ஒரு 1987ம் மாடல் கான்டெஸா கார் அந்த பங்களாவின் முன் நின்றது.அந்த காரில் இருந்து இறங்கிய ஒருவன் , சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, யாருக்கோ ஃபோன் செய்தான்.ஒடிசலான உருவம்தான் .இருந்தாலும், அவனது கண்கள், ஏதோ குரூரம் நடக்கப் போவதை உணர்த்தியது.

சற்று நேரத்தில், தூரத்தில் இரு வெளிச்சப் புள்ளிகள் தோன்றி, அந்த வீட்டை நோக்கி வந்தன. அது ஒரு வேனின் ஹெட்லைட் வெளிச்சம். சுரேஷின் மனம் ஷ்யாமின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.எந்த வித அசம்பாவிதமும் நடக்கும் முன் ஷ்யாம் அங்கு வர வேண்டும் என்று சுரேஷ் விரும்பினான்.

அதிலிருந்து, நான்கு பேர் தடிமாடு போல் இறங்கினார்கள். ஒவ்வொருத்தனும் ஒரு ஆட்டை முழுசாக தின்பான் போல் இருந்தார்கள். சுரேஷ் எதிர்பார்த்தது நடந்தே விட்டது. ஆம், அந்த பெண் வேனிலிருந்து இறக்கப்பட்டாள். அதிகம் போனால் 20 வயதிருக்கும். துவண்டு போய் இருந்தாள். ஏதோ பெரிய இடத்து பெண் போல் தெரிந்தாள். அவளை வீட்டுக்குள் கொண்டு செல்ல அந்த தடியர்கள் முயற்சிக்க, அவள் திமிர ஆரம்பித்தாள். அவர்களை வெல்ல முடியாது என்று தெரிந்தும், உயிரை காப்பாற்றிக் கொள்ள, கடைசி முயற்சி.ஒருவன் அவளை நெட்டித் தள்ளினான், இவள் எட்டி விழுந்தாள். தள்ளியவனை இதற்கு முன் சுரேஷ் எங்கேயோ பார்த்திருக்கிறான்.

இன்னும் ஷ்யாம் வரவில்லை.சுரேஷுக்கு பதட்டம் அதிகரித்தது. அவனது வியர்வை சுரப்பிகள் முழு வேகத்தில் இயங்கி கொண்டிருந்தன. அடுத்து என்ன நடக்கும் என்று அவனால் யூகிக்க முடிந்தது. ஆனால் ,அவன் எதிர்பாராத விதமாக கீழே விழுந்த அந்த பெண் பெருங்கூச்சலோடு எழுந்தாள். தரையில் கிடந்த ஒரு துருப்பிடித்த சிறிய கம்பி அவள் கையில் இருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் , அந்த கம்பி அவள் கையில் இருந்து , தடியனின் கண்களுக்குள் இடம் மாறி இருந்தது. அலறித் துடித்தான். இப்படி ஒரு தாக்குதலை அவளிடம் இருந்து அவன் எதிர்பார்க்கவில்லை. சுரேஷும்தான்.

பக்கத்தில் இருந்த ஒரு தடியன் , வண்டியில் இருந்து ஒரு கட்டையை உருவி அந்த பெண்ணின் மண்டையில் "நச்" என்று இறக்கினான். அந்த சத்தம் சுரேஷின் காதில் எதிரொலித்தது. அவள் மயங்கி விழுந்தாளா இல்லை செத்து விழுந்தாளா என்று தெரியவில்லை.சுரேஷ் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், அவனது தலையில்..."ணங்" கென்று
"ணங்" கென்று கொட்டினார் அவன் அப்பா.

"அடுத்த வாரம் பப்ளிக் எக்ஸாம் வச்சிகிட்டு இப்போ உனக்கு இந்த படம் அவசியமா ? அந்த ஷ்யாம்கிட்ட அப்படி என்னதான் இருக்கோ.என்னத்த நடிக்கிறான் அவன் ? திருந்தவே மாட்டியா ராஸ்கல்"

"அப்பா .. அப்பா..ப்ளீஸ் பா.. நான் படிச்சிருவேன்பா. இந்த கடைசி 20 நிமிசத்தை பாக்குறதுக்குதான்பா, இத்தனை நாளா வெயிட் பண்ணிகிட்டு இருந்தேன்"

9 comments:

செந்தழல் ரவி said...

கலக்கல்...

ச ம ர ன் said...

@ செந்தழல் ரவி

மிக்க நன்றி !!

ஜெகநாதன் said...

ம்ம்ம்.... ஹும்ம்ம்ம்.... ஊகூம்ம்மம்... ​வேறு வழியில்ல! சமரனுக்கு The Interesting Blog அவார்ட் ​கொடுத்துட ​வேண்டியதுதான். என்னாபா?

ச ம ர ன் said...

@ஜெகநாதன்

:) தொடர்ந்து வரவும்.. மிக்க நன்றி

ramesh said...

கலக்குறீங்க..!

Raj said...

Super appu.....innum appakita adivanguna effect pogalayo...?

ச ம ர ன் said...

@ ரமேஷ்

நன்றி!!

ச ம ர ன் said...

@ ராஜ்

எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்ல ;‍)

ஜெகநாதன் said...

ஒரு ​தொடர்பதிவு விருதாக எனது வலைப்பதிவில் உங்களுக்கு 'The Interesting Blog' அவார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது! இது ஒரு அன்பு பாராட்டல்!! மற்றும் விருப்பமான வ​லைப்பதி​வை பிறருக்கு அ​டையாளம் காட்டும் முயற்சியும் கூட. தங்கள் கருத்தறிய ஆவல்.
(காமடி கீமடியெல்லாம் எதுவுமில்ல)