Saturday, July 11, 2009

ராசா சுந்தரு எப்டிய்யா இருக்க..

இப்போ நானு "மாஸ்கோவின் காவிரி" படத்திலிருந்து "கிராமம் தேடி வாடா"னு ஒரு பாட்டு கேட்டுட்டு இருக்கேன். நல்லாத்தான் இருக்கு.

போன மாசம் எங்க கிராமத்துக்கு, பொங்கலுக்கு போயிருந்தேன்.எங்க அப்பா பிறந்து வளர்ந்ததெல்லாம் அங்கதான். ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்துல ஒரு சின்ன கிராமம். நான் காலேஜ் போற வரைக்கும் ரெகுலரா பொங்கலுக்கு அங்க போயிடுவோம்.பொங்கலுன்னா அந்த ஊரை பொறுத்த அளவுக்கு மாஸ்டர் கடவுள் அருள்மிகு காளியம்மா தான்.காலேஜ் போனதுக்கு அப்புறம் அங்க போகலை.எங்க குடும்பம் அங்க பரம்பரையா பெரிய குடும்பம்கிறதுனால, எப்போவுமே கொஞ்சம் மரியாதை உண்டு. இந்த வாட்டி பொங்கலுக்கு போயிட்டு திரும்புனப்போ, மனசு கனத்தது என்னவோ உண்மைதான்.

இந்த வாட்டி மூணு நாளு லீவ் போட்டுட்டு காரை எடுத்துட்டு கெளம்பிட்டேன்.எனக்கு அங்க என்னோட நெருங்கின சொந்தக்காரங்கள தவிர நிறைய பேரத் தெரியாது.என்னய இத்தன பேருக்கு தெரியும், இவ்ளோ மரியாதை , பாசம் வச்சிருக்காங்கனு தெரிஞ்சப்போ மனசு உருகிருச்சு.

எங்க ஊருல ஒவ்வொரு பொங்கலுக்கும் பூ,சந்தனம், மஞ்சள் வச்சு சாமி செய்வாங்க. அதுக்கு பேரு கரகம். நைட்டு பூரா உக்காந்து கரகம் செஞ்சு முடிச்சிட்டு அதிகாலையில, சிங்க வாகனத்துல உக்கார வச்சு , ஊர்வலமா போயி, கோவில்ல இறக்கிருவாங்க.அப்புறம் பொங்க வச்சு, கிடா வெட்டி, சாயங்காலம் முளைப்பாரி எடுத்துட்டு, கரகத்தை கரைச்சிருவாங்க.இந்த வாட்டி காளியம்மன் கோவிலை புதுப்பிச்சுருந்தாங்க.இதுல முக்கியமான விசயம் சாமி செய்யுறதுக்கு பூ கொண்டு போறது.இந்த வாட்டி அந்த முறை எங்க குடும்பத்துக்கு வந்தது.சும்மா இல்லீங்க, 6000 ரூவா 7000 ரூவாக்கு பூ மட்டும்னா யோசிச்சு பாத்துக்குங்க, எவ்ளோ இருக்கும்னு.அது போக மாலைக்கு தனியா ஊர் பூரா செய்வாங்க.

சண்டை போட்ட சொந்தம், சண்டை போடாத சொந்தம்னு எல்லாரும் வந்துட்டாங்க.எங்க கொள்ளு தாத்தா கட்டுன வீட்டுலதான் இருப்போம்.அந்த வீடு கட்டி 107 வருசம் ஆச்சு.அந்த காலத்துலயே அவ்ளோ பெரிய வீடு.ஃபோட்டோ பாருங்க. நைட்டு பூ கொண்டு போறதுக்கு வைரசாமி, மேள தாளத்தோட எங்க வீட்டுக்கு வந்துட்டாங்க.எங்க வீட்டுல வச்சு பூஜை பண்ணி முடிச்சிட்டு, என்னய பூ தூக்க சொன்னாங்க.அப்பா வந்து " இல்ல சாமி இவனால் தூக்க முடியாது, ஆள் வச்சு தூக்கிக்கலாம்னு சொன்னாங்க.அதுக்கு சாமி " உங்க மகன் தான் தூக்குவான்" ..."தூக்குங்க தம்பி"னு சொல்லிட்டாரு.

கிழக்க பாத்து நின்னு , வைரசாமிகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு பூக்கட்டை தூக்கி தலையில் வச்சேன்.அடிச்ச மேளத்துலயும், மனசுல இருந்த உணர்வுக்கும் உடம்பு ஒரு நிமிசம் உலுக்கிருச்சு.சத்தியமா என்னால அந்த உணர்ச்சிய விவரிக்க முடியல.மேள தாளத்தோட ஊர்வலமா போயி கோவில்ல எறக்கி வச்சாச்சு.பெரியவுங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிட்டு, கோவில்ல இருந்து எங்க வீட்டுக்கு வர்ற வரைக்கும் அத்தன விசாரிப்பு.

"ராசா சுந்தரு எப்டிய்யா இருக்க..ஏன் இப்டி மெலிவா இருக்க..ஒரு வாய் சாப்புட்டு போய்யா"

"அவங்க அப்பனும் இப்படித்தான நரம்பா இருப்பான்"

"உன்ன பாத்தா அப்படியே பெரியய்யாவை பாத்த மாதிரி இருக்குய்யா.அம்புட்டு தொலவு கார்லயா வந்த.ஏன்யா ?"
(எனக்கு எங்க தாத்தா பேரத்தான் வச்சிருக்கு.அவரு இறந்த வீட்டுலதான் நான் பொறந்தேன்)

"ஏன்யா இம்புட்டு முடி வச்சிருக்க, வெட்டுய்யா"

"அவுக..அவுக இருக்குற ஊரு ஸ்டைல்ல இருக்காக,பேசாம இரு"

"காளியாத்தா சும்மாவா..எங்க போனாலும் வந்துதான் ஆகணும்..ஆத்தா அவ புள்ளகளை வர வச்சிருவா. யய்யா..வருசா வருசம் வந்துருய்யா"

"யய்யா..உன்னய தூக்கிகிட்டே திரிஞ்சேன் நீ சின்ன பயலா இருக்கப்போ..என்னயத் தெரியலனு சொல்ற"

"பயல என்னமோன்னு நினைச்சேன்..இம்புட்டு பாசமா இருக்கானே"

" நீ வேலை பாக்குற கம்பேனி நம்ம ஊருப்பக்கம் இல்லயாய்யா, மதுரைல கூடவா இல்ல"


இதெல்லாம் நான் வீட்டுக்கு வர்ற வரைக்கும் நடந்த பேச்சுல ஒரு பாதி தான்.கேட்டவிங்க எனக்கு என்ன முறை வேணும்னு கூட எனக்கு தெரியல.எங்க அப்பா ஒவ்வொரு முறையா சொல்லிட்டு இருந்தாரு.வீடு வந்து சேர்றதுக்குள்ள கண்ணு பூத்துருச்சு.இதுல ஒருத்தவுங்கள நான் பேச்சு வாக்குல, அக்கானு சொல்ல.."என்னய்யா, மதினிய போயி அக்கானு சொல்ற"னு ஒரு கெழவி கேட்டுச்சு. "தெரியல பாட்டி, ரொம்ப நாளு ஆச்சுல"னு சொன்னேன்."யய்யா... நான் உனக்கு பெரியம்மா முறைய்யா"னு சொல்ல..எனக்கே அசிங்கமா போச்சு.

வேல பாக்குற ஊருல, வீட்டை விட்டு வெளிய போனா,ஒருத்தனுக்கும் நம்மள தெரியாது, ஆனா அங்க.மூணு நாள்ல , 1000 கிலோமீட்டர் வண்டி ஓட்டிருப்பேன், ஆனா கஷ்டமே தெரியல.

எல்லாத்தயும் விட, எங்க பெரியப்பா ஒருத்தரு 85 வயசாகுது.காது விழுந்து போச்சு.ஸ்ரீவில்லிபுத்தூர்ல எங்க அக்கா வீட்டுல இருக்காரு.அவரை என் கார்ல பொங்கலுக்கு கூட்டிட்டு போனேன். பொங்கல் முடிஞ்சு கெளம்புறப்போ என் கை ரெண்டயும் புடிச்சிகிட்டு " 12 வருசமா .. என்னால இங்க வர முடியல..காளியாத்தால பாக்க முடியல, உன் புண்ணியத்துல பாத்துட்டேன்.இனி வர முடியுமான்னு தெரியல.என்னய கார்ல கூட்டிட்டு வந்துட்டியேய்யா."னு சொன்னப்போ, என்னால அழுகைய நிப்பாட்ட முடியல. கால்ல விழுந்து கும்பிட்டேன்."யய்யா.என்னய்யா என் கால்ல நீ விழுந்துட்டு"னு பதறிட்டாரு.

அதுதான்னே பாசம். எதயுமே எதிர்பார்க்காம, வர்ற உண்மையான பாசம்.கோடி ரூவா கொடுத்தாலும் கிடைக்காது.


பி.கு : என் மாப்பிள கணேசால இந்த வாட்டி வர முடியல.ஊருல ரெட்டப்புள்ளக மாதிரி சுத்திகிட்டு இருப்போம்.அவன் ஏன் வரலனு கேட்டவுகளுக்கு என்னால பதில சொல்ல முடியல.

எனக்காக மூணு நாள் லீவு போட்டு, என்கூட ஊருக்கு வந்த என் நண்பன் கார்த்திய என்னால நினைக்காம இருக்க முடியல.என்னய விட அதிகமா ஊருல மிங்கிள் ஆயிட்டான்.எல்லாரும் அவன கணேசுன்னு நினைச்சிட்டாங்க.எங்க வீட்டுல ஒரு புள்ள மாதிரி ஆயிட்டான்.

ஃபோட்டோவெல்லாம் பாத்துட்டு போங்க..கொஞ்சம் பெரிய இடுகை தான்.இருந்தாலும், எங்க ஊர்க்காரங்க என் மேல வச்சிருக்க பாசத்தவிட பெரிசு இல்ல.2 comments:

Sachanaa said...

very nice to read...

ச ம ர ன் said...

@ Sachanaa

மிக்க நன்றி ஹை !!