Wednesday, December 2, 2009

விப‌த்தும்..ம‌ன‌தின் விச‌ன‌மும்

இத எப்படி இத்தன நாளா எழுத விட்டேன்னு தெரியல. இப்போதான் ஞாபகம் வந்துச்சு.2004 டிசம்பர்னு நினைக்கிறேன். சனி,ஞாயிறு லீவுக்கு வீட்டுக்கு வந்திருந்தேன். படிக்கும் போதே வேலை கிடைச்ச சந்தோசம், அப்போதான் வானத்துல இருந்து கொஞ்சமா கீழ இறங்கிருந்தேன்.

நானும் அப்பாவும், காலையில கேஸ் சிலிண்டர் மாத்துறதுக்காக எங்க டி.வி.எஸ் சாம்ப்ல போயிட்டு இருந்தோம். எங்க வீடு என்.ஹெச். ரோட்டுக்கு பக்கத்துல இருக்கு. எங்க அப்பாகூட வண்டியில போறப்போ, ரோட்டுல ஏறவே கூடாது, "மண்லயே போ, சர்ரு புர்ருன்னு வருவாங்க"னு சொல்லிட்டே இருப்பாரு. அவரு ரோடு டேக்ஸ் கட்டுறதே வேஸ்ட்னு எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க.அன்னிக்கும் அதே மாதிரி தான். மண்லயேதான் வண்டி போயிட்டு இருந்தது.

ரோட்டுக்கு எதிர்பக்கம் தொழிற்பேட்டை.ஒரு 10,15 போலீஸ்காரங்க இருந்தாங்க. முந்தின நாள் நடந்த கொலைக்கு ஏதோ விசாரணை நடந்துகிட்டு இருந்துச்சு. நாங்க கிராஸ் பண்ணி போறத, அங்க இருந்த போலீஸ்காரங்களும் பாத்தாங்க.அப்போதான் எதிர்க்க ஒரு சுமோ, ரோட்டுல இருந்து மண்ண நோக்கி, பேய் மாதிரி வந்தான்.எனக்கு ஒரு நிமிசம் அல்லு இல்ல.சுமோ டயருக்கு கீழ ஒரு 8 வய்சு பையன்.அவன அடிச்சு இழுத்துட்டு வருது. சுமோ எங்க மேல மோதிரக் கூடாதுன்னு நான் வண்டிய வளைக்க,அது ஸ்லிப் ஆயிடுச்சு.அப்பாவை கீழ விழாம, புடிச்சதுல, சிலிண்டர் சாய்ஞ்சு, வண்டியோட கீழ விழுந்துட்டோம்.

என் பக்கத்துல சுமோக்கு அடியில கிடந்த அந்த பையன்.சுமோ காரன் ரிவர்ஸ் எடுத்துட்டு முன்னாடி போகப்பாத்தான். எனக்கு என்ன தோணுச்சுனு தெரியல, டிரைவரை இருக்குற கெட்ட வார்த்தலையெல்லாம், திட்டிகிட்டு, டிரைவர அடிக்கவும், வண்டி வேகமெடுக்கவும் சரியா இருந்துச்சு.புடிக்க முடியல. ஆத்திரம், இயலாமை எல்லாம் சேர்ந்து ஒரு மாதிரி ஆயிடுச்சு.

அப்பா கத்துனாங்க "அவன ஏண்டா விரட்டுற. பையனப் பாருடா.சீக்கிரம் தூக்கு"ன்னாங்க. அப்பாவுக்கு ஒரு கை உடைஞ்சிருந்ததால தூக்க முடியல.அந்த பையனோட பாதம் , அவன் தலை கிட்ட மடங்கி இருந்துச்சு. இரத்த வெள்ளம்னு சொல்லுவோமே, அதப் பாத்தேன். கிட்ட போக முடியல. மயக்கம் வந்துருச்சு.அப்பா உடனே "ஒண்ணும் இல்ல .தூக்கு..பயப்படாத"னு சொன்னாலும் என்னால முடியல. அப்பா கண்ட்ரோல் ரூமுக்கு அடிச்சு விஷயத்த சொல்லி, ஆம்புலன்சை வர சொல்லிட்டாரு. நான் வண்டி நம்பர், எத்தன பேரு இருந்தாங்கங்கிறத சொன்னேன்.

அதுக்குள்ள, எதுக்க இருந்த போலீஸ்காரங்க எல்லாம் வந்துட்டாங்க " என்னங்கய்யா ஆச்சு..தம்பி உங்களுக்கு ஓண்ணும் இல்லலை"னு கேட்டாங்க.
"அண்ணே, நீங்க வண்டிய புடிங்க, தே.மகன் அடிச்சிட்டு போயிட்டான்"னு அப்பா இருக்குறது கூட தெரியாம வார்த்தை வருது. அப்பா "ரகு நீ அவன விரட்டு, நான் செக்போஸ்டுக்கு சொல்லிட்டேன்"ன்னு சொன்னாங்க. அப்போ ரகு அவரோட வண்டிய எடுத்துட்டு போன வேகத்துல எனக்கு ஒரு நம்பிக்கை இருந்துச்சு. எப்படியும் புடிச்சிருவாங்கன்னு.(அப்பா க்ரைம் ப்ராஞ்ச்ல இன்ஸபெக்டரா இருக்காங்க)

அந்த‌ வ‌ழியா வ‌ந்த‌ ஒரு கார்ல‌, பைய‌ன‌ போலீஸ்கார‌ங்க‌ சேர்ந்து ஏத்திகிட்டு கூட‌ போயிட்டாங்க‌. காப்பாத்திருவாங்க‌ன்னு ந‌ம்பிக்கை இருந்துச்சு.இதெல்லாமே அஞ்சு நிமிச‌த்துல‌ ந‌ட‌ந்து முடிஞ்சிருச்சு.ஒரு இருவ‌து நிமிச‌ம் க‌ழிச்சு, அதே சுமோ திருப்பி வ‌ந்துச்சு, புடிச்சிட்டாங்க‌ன்னு அப்பா சொன்னாங்க‌. வ‌ண்டி வ‌ந்து எங்க‌ ப‌க்க‌த்துல‌ நின்ன‌ உட‌னே "நான் டிரைவ‌ர் ஸீட்ல‌ உக்காந்திருந்த‌வ‌னை மூஞ்சில‌ குத்திட்டேன். "ங்கொம்மால‌..அடிச்சிட்டு,வ‌ண்டிய‌ நிப்பாட்டாம‌ போறியா"ன்னு. அப்பா " டேய் அவ‌ன் போலீஸ்கார‌ன்டா"ன்னு சொல்றப்போதான் என‌க்கு புரிஞ்ச‌து. புடிச்ச‌துக்கு அப்புறம் எப்ப‌டி அவ‌னை வ‌ண்டி ஓட்ட‌ விடுவாங்க‌ன்னு. பின்னாடி ரெண்டு பி.சி. க்கு ந‌டுவுல‌ அவ‌ன் உக்காந்திருந்தான். "அண்ணே..மொத்த‌ம் நாலு பேரு இருந்தாங்க‌ன்னே"ன்னு சொன்னேன். "இல்ல தம்பி..அவிங்க எஸ் ஆயிட்டாங்க..வண்டிய மட்டும்தான் மடக்க முடிஞ்சது"ன்னு சொன்னாங்க. வண்டிய ஸ்டேஷனுக்கு கொண்டு போயிட்டாங்க.

அப்பாவும் நானும் ஸ்டேஷனுக்கு போனோம்."நீ ஸ்டேஷனுக்குள்ள வராத, வண்டிக்கு பெட்ரோல் போட்டுட்டு வா"ன்னு சொல்லிட்டாங்க. எனக்கு அவன ஒரு அடி கூட அடிக்க முடியலயேன்னு ஆத்திரம். பெட்ரோல் போட்டுட்டு வந்த உடனே, "உள்ள இருக்கான், அந்த ஜன்னல் வழி பாரு"ன்னு அப்பா சொன்னாங்க. ஜன்னல் வழி கைய விட்டு அவனை அடிச்சேன். அப்போ அங்க இருந்த ஒரு ஏட்டு "தம்பி..ஒண்ணும் இல்ல..புடிச்சிசாச்சுல்ல"னு சொன்னாரு.

இதெல்லாம் முடிஞ்சு, நாங்க கிளம்பும் போதுதான் ஆம்புலன்ஸ் வந்துச்சு. "அப்பா..எப்படியும் உள்ள வச்சிருவாங்கள்ல..ஹிட் அண்டு ரன் கேஸ்..விட மாட்டாங்கள்ல பா"ன்னு கேட்டேன். இன்னிக்கு சாயங்காலம் வெளிய வந்துருவான்டா. பத்தாயிரமோ, இருவதாயிரமோ குடுத்துட்டு வந்துருவான்டா"ன்னு சொன்னாங்க. என்னால ஏத்துக்கு முடியல. "அப்பா நீங்க டிபார்ட்மெண்ட் ஆளு, பாத்துருக்கோம், கூட இருந்துருக்கோம்..அப்புறம் அப்படி"ன்னு கேட்டதுக்கு. "பையன் பொழச்சா சந்தோசம்"னு சொல்லிட்டு வீட்டுக்கு போன்னு சொல்லிட்டாங்க.

வீட்டுக்கு வ‌ந்த‌ உட‌னே ப‌டுத்துட்டேன். செம‌ த‌லைவ‌லி. அப்பா அம்மாகிட்ட‌ சொல்லிட்டு இருந்தாங்க‌. "இவ‌ன‌ இதுக்கா ப‌டிக்க‌ வ‌ச்சோம். இவ்ளோ கோவ‌ம் வ‌ருது.காட்டுப்ப‌ய‌ மாதிரி கத்துறான்.அடிக்க‌ போறான். ச‌ங்க‌ட‌மா இருக்கு. பைய‌ன‌ பாக்காம‌, அடிச்ச‌வ‌னை விர‌ட்டிட்டு போறான்."

சாய‌ங்கால‌ம் அப்பாகிட்ட‌ கேட்டேன் " பையான் பொழ‌ச்சிட்டானாப்பா ? சின்ன‌ பைய‌ன் பா". அதுக்கு அப்பாவோட‌ ப‌தில் "இன்னிக்கு நான் கூட‌ இருந்தேன், உன்ன‌ய‌ எல்லாருக்கும் தெரியும். கோவ‌த்த‌ காமிச்ச‌, கையெழுத்து போடுறேன்னு சொன்ன‌. வேற‌ ஊருல‌ இது மாதிரி ந‌ட‌ந்துச்சுன்னா, த‌னியா இப்ப‌டி எல்லாம் ப‌ண்ணாத‌. அடிப‌ட்ட‌வுங்க‌ள‌ ம‌ட்டும் காப்பாத்த‌ பாரு. அதுக்கே நீ எத்தன‌ கையுழுத்து போட‌ணும், எவ்ளோ அலைய‌ணும் தெரியுமா. தாங்க‌ மாட்ட‌டா, என்னால‌யும் நீ அப்ப‌டி அலையுற‌த‌ பாக்க‌முடியாது"ன்னு சொன்னாங்க‌.

ச‌ம்ப‌ந்த‌ம் இல்லாம‌ அப்பா பேசுற‌ப்போவே தெரிஞ்ச‌து பைய‌ன் இல்ல‌ன்னு. டிபார்ட்மெண்ட்ல‌ இருந்தே இவ்ளோதான் செய்ய‌ முடியும்னு நினைக்கும் போது க‌ஷ்ட‌மா இருந்த‌து. இன்னும் இருக்குது.

6 comments:

Joe said...

கலங்க வைத்த இடுகை.

உனது சமூகக் கோபம் பாராட்டுக்குரியது. ("எவன் செத்தா எனக்கென்ன" என்று போய் விடும் மக்கள் நிறைந்த இந்த நாட்டில் ஏதோ ஒன்னு, இரண்டு பேராவது இருக்கீங்களே?)
மனித உயிருக்கு எந்த மரியாதையும் தராத தேசமிது.

விபத்து நடந்த இடத்திலிருந்து அருகாமையில் இருக்கும் காவல் நிலையத்தில் சரணடைந்து விட்டால், 1500 ரூபாய் கொடுத்து விட்டு சில மணி நேரங்களில் கிளம்பி விடலாம்.

Meenthulliyaan said...

உண்மை தான்டா ..
இப்போ எல்லாம் மனிதத்திற்கு மதிப்பு கிடையாது ... பணம் தான் ..

உன்னோட நண்பர்கள் நிறைய பேர் எங்கு தெரியும்.. அதானல உன்னோட மத்த பதிவுகளும் ரெம்ப பிடிக்கும்
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

ச ம ர ன் said...

@மீன்துள்ளி

என்னோட நண்பர்கள் யாரை உங்களுக்கு தெரியும். தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்

மீன்துள்ளியான் said...

சங்கிலி , ரமேஷ் , மூக்கன் , பாஸ் (பாலா கணேஷ்) , சுரேஷ் , முருகையா , சுந்தரேசன் , உன்னைய கூட

நான் மாதவன் ஸ்கூல் நண்பன் ( உங்க கல்லூரிக்கு வந்து இருக்கேன் )..

ச ம ர ன் said...

ரைட்டு விடு... சூப்பர் மாப்ள..எப்படி என் ப்ளாக் கண்டுபுடிச்ச ?

அப்புறம்..மாமன் பேருதான் பாலகணேஷ் டா

Anonymous said...

//விபத்து நடந்த இடத்திலிருந்து அருகாமையில் இருக்கும் காவல் நிலையத்தில் சரணடைந்து விட்டால், 1500 ரூபாய் கொடுத்து விட்டு சில மணி நேரங்களில் கிளம்பி விடலாம்.//
Are you serious. That's pathetic.