Thursday, February 18, 2010

இது ஒரு காதல் கதை

"நாளைக்கு 3 மணிக்கு மேட்ச் மறந்துராதடா.. 2 மணிக்கு வர்றேன் ரெடியா இரு..சொதப்பிராத " சொல்லிவிட்டு கருப்பு நிற சிபிசி யில் விர்ர்ரினான் அருள்.

அருளுக்கு பதில் சொல்லியவாறே,காம்பவுண்ட் கேட்டை சாத்திவிட்டு, உள்ளே சென்ற அமுதன்,

"சுஜா.. நான் வெளிய சாப்பிட்டு வந்துட்டேன். நீ சாப்பிட்டு படு" , என்று மேல் மாடிக்கு கேட்குமாறு கத்தி விட்டு, டிவியை ஆன் செய்தான்.

"ஏண்டா, ஒரு ஃபோன் பண்ணி சொல்லிருந்தா, நான் அப்போவே தூங்கப் போயிருப்பேன். நான் சாப்பிட்டு முடிச்சு ஒரு மணி நேரம் ஆச்சு. நீ வருவன்னு தான் வெயிட் பண்ணிகிட்டு இருந்தேன். உனக்கு அந்த அருள் கூட இருந்தா உலகமே மறந்துருமே !!" மாடியிலிருந்து இறங்கி வந்தாள் சுஜா.

"போடி..போயி உன் வேலையப் பாரு..ஆமா அப்பா எங்க?"

"க்கும்..யாரோ ஃப்ரெண்டை பாக்க போறேன்னு மதியம் கிளம்பி போனாரு.இப்போ வரைக்கும் ஆளக் காணோம். அவருக்கு நீ எவ்வளவோ பரவாயில்லை. அம்மா இருந்திருந்தா நீங்க ரெண்டு பேரும் இப்படி இஷ்டத்துக்கு இருக்க முடியுமா? உனக்கு கல்யாணம் ஆனப்புறம் இருக்குதுடா ஆப்பு"

"சரிங்க மேடம்..உங்க மொக்கைய நிப்பாட்டுங்க.உனக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம்தான் எனக்கு கல்யாணம். இந்த மார்ச்சோட உனக்கு கோர்ஸ் முடியுதுல்ல. இதுக்கு மேல எதுவும் படிக்கிறேன்னு அலும்பு பண்ணாத.இந்த வருசத்துக்குள்ள உனக்கு கல்யாணம் பண்ணிரனும்"

"அண்ணா..இந்த பேச்சை நிறுத்துறியா ?"

"ஏன் கல்யாணப் பேச்சை எடுத்தாலே, டென்ஷன் ஆகுற. யாரையாவது லவ் பண்றியா? சொல்லு. பேசி முடிச்சிரலாம்"

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை, இருந்தா உன்கிட்ட சொல்றேன். நான் தூங்கப் போறேன்.குட் நைட். மாடிக்கு போயி தம் அடிக்காத. ஒழுங்கா படுத்து தூங்கு"


13வது தடவையாக புரண்டு படுத்தாள் சுஜா.

"அண்ணன்கிட்ட லவ பண்றத சொல்லிரலாமா.இப்போ ஓ.கே.ன்னு சொல்றான், ஆனா விஷயத்த சொன்ன உடனே, டென்ஷன் ஆகிட்டா என்ன பண்றது." மனசாட்சியுடன் விவாதித்து கொண்டிருந்தாள் சுஜா.

"அறிவு கெட்டவளே, அதுக்கு முன்னாடி லவ் பண்றவன்கிட்ட உன் லவ்வை சொல்லு.அதயே சொல்லாம் அண்ணன்கிட்ட சம்மதம் வாங்குறத பத்தி யோசிக்கிற. கிணறு வெட்றதுக்கு முன்னாடி, தவளை கூப்பாடு போட்ட கதையா இருக்கு" பன்ச் டயலாக் பேசியது மனசாட்சி.

"அதுவும் சரி தான். சே.. இதுல போயி எப்படி விழுந்தேன். இது வரைக்கும் எத்தன பேரு ப்ரபோஸ் பண்ணியிருப்பாங்க. எப்போவுமே டிஸ்டர்ப் ஆனதில்ல. இப்படி தூக்கம் வராம இருந்ததில்ல. இந்த ஆறு மாசமாத்தான் இப்படி.இந்த அருள் பாக்குறதுக்கு அப்படி ஓண்ணும் பெரிய அழகன் இல்லை. அவன் இது வரைக்கும் சிரிச்சுக்கூட பாத்ததில்லை.ஆனா எனக்கு ஏன் அவன
இவ்ளோ புடிச்சிருக்கு ?

ஒரு வேளை , என்னை கண்டுக்காம இருந்து என்னை ஜெயிக்க ட்ரை பண்றானோ ? அதான் பண்ணிட்டானே. இதுக்கு மேல என்ன ? என் ஈகோ கிட்டத்தட்ட உடைஞ்சிருச்சு. இன்ஃபாக்ச்சுவேஷனாக் கூட இருக்கலாம். இருந்தா இருந்துட்டு போகட்டும். அவனோட அலட்சியம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. இது வரைக்கும் எனக்கு வரப் போற புருஷன் எப்படி இருக்கணும்னு நான் கற்பனை பண்ணினது இல்ல. ஆனா இப்போ எனக்கு தோணுது, ஹி இஸ் மை மேன். நாளைக்கு அவன் வீட்டுக்கு வர்றப்போ சொல்லிர வேண்டியதுதான். கண்டிப்பா ரிஜக்ட் பண்ண மாட்டான்."

தனக்குள் சொல்லிக்கொண்டே, ஏ.சியின் ரீங்காரத்தில் தூங்கிப் போனாள்.

மறுநாள், அருள் மதியத்துக்கு மேல்தான் வருவான் என்று தெரிந்தும், காலையில் இருந்தே எதிர்பார்க்க தொடங்கிவிட்டாள். தான் இன்னும் கொஞ்சம் அழகாக இருப்பதாக அவளுக்கு தோன்றியது.

அப்பா லேட்டாக வந்திருப்பார் போலும், இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருந்தார். அமுதன் கேக்கவே வேண்டாம், மதியத்துக்கு மேல் தான் அவனுக்கு விடியும்.

"எப்படி சொல்றது, தனியாப் பேசணும்னு எங்கயாவது வர சொல்லலாமா ? வேணாம், அண்ணகிட்ட ஏதாவது சொல்லிட்டா ? நேரடியா கேட்டுற வேண்டியதுதான். எப்படியும் அருள் வந்ததுக்கு அப்புறம்தான் அண்ணன் எந்திரிப்பான்.அந்த நேரம் போதும். ஒரு வேளை அவன் என்னை புடிக்கலன்னு சொல்லிட்டு, அண்ணன்கிட்ட சொல்லிட்டா என்ன பண்றது ?"

"மண்டு..உன்னப் போயி யாராவது புடிக்கலன்னு சொன்னா ? அவன் குருடன்னு அர்த்தம். நம்பிக்கையோட இரு" மனசாட்சி முந்தியது.

மணி 2 அடிக்க பத்து நிமிடம் இருக்கும்போது, அருள் வந்தான்.

"அமுதன் ரெடியாயிட்டானா? "

"இல்லை அருள், இன்னும் எந்திரிக்கவேயில்லை,உள்ள வந்து உக்காரு" சுஜா.
சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

"ஹாய் மச்சி, இன்னும் 15 மினிட்ஸ் டா. குளிச்சிட்டு வந்துர்றேன், என்றபடி பெட்ரூமிலிருந்து ஹாலைக் கடந்து பாத்ரூமிற்குள் சென்றான் அமுதன்.

இப்போதே சொல்லிவிடு சுஜா..இந்த நேரம் கிடைக்காது...யோசிக்காதே..ம்ம் சீக்கிரம்..என்ற மனசாட்சியின் உந்துதலில், சுஜா ஆரம்பித்தாள்..

"அருள், என்னால இதுக்கு மேல இத மனசுலயே வச்சிருக்க முடியல. எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு அருள். நீ உன் மனசுல என்ன நினைச்சிருக்கன்னு தெரியல. என் காதலை நீ ஏத்துக்கோன்னு உன்னை நான் கேக்கலை. ஆனா என காதலை உன்கிட்ட சொல்லாமயே இருந்து குழப்பிகிறதுக்கு, உன்கிட்ட சொல்லிர்றது பெட்டர்‍னு ஃபீல் பண்றேன்.

ஏன் என்னய புடிச்சிருக்குன்னு, என்கிட்ட கேள்வி கேக்காத அருள், என்கிட்ட பதில இல்ல. வேணாம்னு சொல்ல மாட்டேன்னு நினைக்கிறேன். நீ ஓ.கே சொன்னா, இதப்பத்தி அண்ணன்கிட்ட பேசலாம், இல்லாட்டி இத்தோட இந்த விஷயத்த விட்டுரலாம்."

"ஹப்பா..ஒரு வழியா டிப்ளோமேட்டிக்கா என் காதலை புரிஞ்சிக்கோன்னு சொல்லியாச்சு", என்று சுஜா ரிலாக்ஸ் ஆகும் முன்பு, அமுதன் வெளியே வந்து விட்டான்.

"இரு மச்சி..டூ மினிட்ஸ்" என்று டிரஸ் மாட்ட உள்ளே சென்றான்.

"சீக்கிரம் வாடா..வெளிய வெயிட் பண்றேன்" என்ற சொல்லிவிட்டு, சுஜாவை மையமாக ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியேறினான் அருள்.

உடைந்து போனாள் சுஜா. "ஏதாவது சொல்லியிருக்கலாம். 1000 காரணங்கள் சொல்லலாம்.பிடிக்கலை. இன்னொரு பொண்ண லவ் பண்றேன். ஆனா ஒண்ணுமே சொல்லாமப் போறான். இப்படி மையமா பார்த்தா ? இந்த ரியாக்ஷன பாத்து என்னன்னு புரிஞ்சிக்கிறது. அய்யோ .. இதுக்கு இவன்கிட்ட சொல்லாமயே இருந்துருக்கலாம் போல." மருகினாள்.

அதற்குள், அமுதனும், அருளும் தெருமுனையை தாண்டி விட்டிருந்தார்கள். அருள் ஆரம்பித்தான் " நான் அன்னிக்கு சொன்னப்ப, நீ கேக்கலை அமுதா, இன்னைக்கு சுஜா என்கிட்ட ப்ரபோஸ் பண்ணிட்டா தெரியுமா ? அதுக்குதான் நான் உன் வீட்டுக்கு வர மாட்டேன் சொல்லுவேன். நீ கேக்க மாட்ட‌"

"ம்ம் நானும் எதிர்பார்த்தேன்.இனிமே நீ வீட்டுப் பக்கம் வர வேண்டாம் அருள். ஆமா அதுக்கு நீ என்ன சொன்ன ?"

கிறீச்சிட்டு வண்டி ப்ரேக்கியது.

"அமுதா..என்னடா கேள்வி இது..இன்னொரு வாட்டி என்ன சந்தேகப்பட்ட அவ்ளோதான் ..நடக்குறதே வேற."

"கோச்சுக்காதடா அருள்..ஒரு பொசஸிவ்னஸ்ல கேட்டுட்டேன். நான் இல்லாட்டி நீ செத்துருவன்னு தெரியும் டா. அதே மாதிரி தான் நானும். நமக்குள்ள யாரும் வர முடியாது" என்றபடி அருளின் இடையில் ஒரு கையைப் படரவிட்டு, தோள்பட்டையில் முத்தம் பதித்தான் அமுதன்.

அருள் சிரிக்க, அமுதன் இறுக்க.. வண்டி சீறிப் பாய்ந்தது !!

9 comments:

அண்ணாமலையான் said...

நடத்துங்க....

Rajeswari said...

different story..nice!

V.A.S.SANGAR said...

கோவா பட பாதிப்போ


காலம் கலி காலம்

ச ம ர ன் said...

@ அண்ணாமலையான் & ராஜேஸ்வரி

நன்றி

@V.A.S.SANGAR

:)))

மீன்துள்ளியான் said...

கதை நல்லா இருக்குடா

Joe said...

A story with a mega twist!

Congratulations to the upcoming writer, Shan! ;-)

ச ம ர ன் said...

நன்றி ஜோ !!

ஆண்டாள் said...

முடிவை எதிர்பார்க்கலை சூப்பர்

ச ம ர ன் said...

@ஆண்டாள்

varukaikku nanri..:)