Friday, April 30, 2010

காதல்

"25 வயசுக்கு அப்புறம் வர்றதுதான் மச்சி...உண்மையான காதல்...அதுக்கு முன்னாடி வர்றதெல்லாம் சும்மாடா. அபி ரொம்ப நல்ல பொண்ணுல்ல..அழகாவும் இருக்கா..எனக்கு நல்ல பொருத்தம்..என்னடா ?", சங்கர்.

"டேய்..இதே டயலாக்கதான்டா..மூணு வருசம் முன்னாடி, ராதாவை லவ் பண்ணப்போ சொன்ன.என்ன..அப்போ முதல் கட்டிங் முடிஞ்ச உடனே சொன்ன..இப்போ மூணாவது குவார்ட்டருக்கு அப்புறம் சொல்ற.அவ்ளோதான் வித்தியாசம்.",ராஜா.

"அப்போ சொன்னது 22 வயசுல‌ மச்சி.அப்போ எனக்கு அனுபவம் பத்தல.ராதாவுக்கு என் அளவுக்கு அழகு இல்ல.என்னய அவ மிஸ் பண்ணிட்டா..என்ன கோபி நான் சொல்றது?"

"ங்கொய்யால..அவன ஏண்டா இதுல இழுக்குற..ராதா உன்ன ம‌னுசனாவே மதிக்கல..அந்த உண்மைய ஒத்துக்க துப்பில்ல..இதுல வசனம் வேற", ராஜா.

"ஏ..ச்சீபே..கோபி நீ அவளை பாத்தது இல்லயே, பக்கத்து பில்டிங்தான் டா, 2007 பாஸ்‍ அவுட்டாம். செம அழகு மச்சி.ஒரு பொட்டு,கொஞ்சமா விபூதி,லேசா குங்குமம்.பாத்துட்டே இருக்கலாம்டா.அவ என்ன பாக்கும் போதெல்லாம், வயித்துக்குள்ள பூச்சி பறக்குது மச்சி. அவுங்க அப்பா பேரு நடராஜன் ஐயர்.சொந்த ஊரு கும்பகோணம்.இவ பிட்ஸ் பிலானில படிச்சாளாம்டா"

"மாமா... நீ சொல்ற மேட்டர் எதுவுமே உனக்கு டேலி ஆகலையேடா.வேணாம்டா..ஒத்து வராதுடா.மந்திரம் ஓதுறவிங்க எங்க..மானிட்டர் அடிக்கிற நீ எங்க", ராஜா.

"டேய், அப்படி எல்லாம் சொல்லாதடா.ராதா,ரம்யா,சாந்தி,கீதா மேட்டர் மாதிரி இத நினைச்சிராதடா.. இவதான்டா என் உயிர். அழகுன்னா அதுக்கு அர்த்தம் அபி தான்டா.மச்சான், நீ மகாலக்ஷ்மிய பாத்துருக்கியா?, இவதான்டா அது. ஸோ க்யூட், ஸோ ஸ்வீட்.இவள இன்னொருத்தன்ட்ட என்னால விட முடியாதுடா. நானே கல்யாணம் பண்ணி பூ மாதிரி பாத்துப்பேன். தேவதைடா இவ".

"தோ பாரு.. நம்ம அடிச்சாலும், குடிச்சாலும்,வேலைல கில்லி மாதிரி இருக்கோம்.அதுனால ஆபீஸ்ல நல்ல பேரு இருக்கு. கூட வேலை பாக்குற பொண்ணுகிட்ட ப்ரபோஸ் பண்ணி அசிங்கப்படாத.அவ்ளோதான் சொல்லுவேன்.இந்த ராஜா கணக்கு இது வரைக்கும் தப்புனதே இல்ல..உனக்கெ தெரியும்"

"உனக்கு பொறாமைடா.அதுனாலதான் இப்டி பேசுற.மரியாதையா நான் வாங்கிக்குடுத்த சரக்கை வாந்தி எடுடா.

அவ பளிச்சுன்னு நிலா மாதிரி இருக்கா.எனக்கு மட்டும் என்னடா குறைச்சல். நான் அவளுக்கு மேட்ச் இல்லயா.இல்ல சம்பாதிக்கலயா.ராஜா மாதிரி இருக்கேன்.அவளுக்கு எப்படிடா என்ன புடிக்காம போகும்"

"டேய்... நீ சங்கர்டா.. நாந்தான் ராஜா.உன்ன அவளுக்கு புடிச்சிருக்குனு நினைச்சிகிட்டு, நீயா கனவு காணாத, நீ அன்னிக்கு காலைல,அவ சாப்பிடறப்போ எதிர்க்க உக்காந்த உடனே, எந்திச்சு போயிட்டா.பாவம்..அந்த புள்ளய சாப்பிடக்கூட விடலடா நீ".

"விடுங்கடா. கழுதைக்கு தெரியுமா கட்டிங்கோட அருமை.ஆமா கோபி, உன்கிட்ட ஏதோ ஒரு மொக்க ஃபிகர் வந்து ப்ரபோஸ் பண்ணுச்சுன்னு சொன்னியே,அது என்னா மேட்டரு? டேய் ராஜா, என்னமோ சொல்லுவியே, நான் சரக்கு வாங்கி குடுத்தா, நாந்தான் அனத்துவேன்னு..எனக்கும் என் ஃப்ரெண்ட்ஸ் மேல அக்கறை இருக்குடா..தெரிஞ்சுக்க.."

"அந்த மொக்க ஃபிகரப் பத்திதான்டா..இவ்ளோ நேரம் நீ ராமாயணம் பாடிட்டு இருந்த. மூடிட்டு படுடா வெண்ணை", கடைசி கல்ப்பை கவிழ்த்தான் கோபி.

Tuesday, April 13, 2010

வலியை தேடிப் போகிறேன்

நீ இருக்கும் வரையில்
துணையில்லாமல் இருந்ததில்லை
இப்பொழுது தூக்கமின்றி தவிக்கிறேன்

நீ இருக்கும் வரையில்
வாழ்க்கை கசக்கவில்லை
இப்பொழுது வேதனையை ரசிக்கிறேன்

நீ இருக்கும் வரையில்
கனவில் கூட சோகமில்லை
இப்பொழுது நனவிலும் நைய்ந்து கொண்டிருக்கிறேன்

நீ இருக்கும் வரையில்
நாட்கள் கணக்கில் இருந்ததில்லை
இப்பொழுது நொடிகளைக் கூட கணக்கிடுகிறேன்

நீ இருக்கும் வரையில்
வெறுப்பென்றால் என்னவென்று உணர்ந்ததில்லை
இப்பொழுது உறவுகளைக் கூட வெறுக்கிறேன்

நீ இருக்கும் வரையில்
சுமைகளை நான் அறிந்ததில்லை
இப்பொழுது சுகங்கள் கூட சுமையாய் உணர்கிறேன்

நீ இருக்கும் வரையில்
தோல்விகளால் வெம்பியதில்லை
இப்பொழுது வெற்றியைக் கூட நான் வெறுக்கிறேன்

நீ இருக்கும் வரையில்
அமுதம் கூட எனக்கு இனிக்கவில்லை
இப்பொழுது உன் வார்த்தகளையே நான் விஷமாய் உணர்கிறேன்

நீ இருக்கும் வரையில்
இனிமையை நான் தேடியதில்லை
இப்பொழுது வலியை தேடிப் போகிறேன்

உன் வார்த்தைகளால் மட்டும்....

இப்போது நான் உன்னைவிட‌
நீ தரும் வலியைத் தான் அதிகம் விரும்புகிறேன் !!