Thursday, November 11, 2010

கிழட்டுத் தாத்தா

கிழட்டுத் தாத்தா. அப்படித்தான் அவர் இது நாள் வரை அழைக்கப்பட்டிருக்கிறார். என் அம்மா வழிப் பாட்டியின் அக்காவுடைய கணவர். கொஞ்சம் புரியும்படியாகச் சொல்ல வேண்டுமென்றால் என் அம்மாவுடைய பெரியப்பா. நூறு வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். 94 வயதில் தூங்கும்போது கீழே விழுந்து, கண்பட்டையில் வெட்டுப்பட்டு, தானாக ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தவரைப் பற்றி கேள்விப்பட்டு நீங்கள் ஆச்சர்யப்பட்டிருப்பீர்களானால், மறுபடியும் ஒருமுறை.. பட்டுக்கொள்ளுங்கள் !! இவரும் அவர்களில் ஒருவர்.

இப்போது எதற்காக அவரைப் பற்றி உங்களிடம் பேசுகிறேன் ? தெரியவில்லை. கொஞ்ச நேரம் கேளுங்களேன்..ப்ளீஸ்.

இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பார். மணி எட்டரை தாண்டி விட்டதா ? அப்படியென்றால் அந்த சிறிய ஓட்டு வீட்டின் ஹாலில் (!), வலது ஓரம் இருக்கும் ஒரு வெள்ளையடிக்கப்பட்ட ( கவனிக்க..."பட்ட") பெஞ்சில், கட்டம் போட்ட பச்சைக் கைலியோ, அல்லது அழுக்கேறிய வெள்ளை வேட்டியோ அணிந்து உறங்கிக் கொண்டிருப்பார்.அவர் இரவு உணவை முடித்து குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் ஆகியிருக்க வேண்டும்.

காது கேளாது. எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்த‌ போது, ஒரு நாள் அவரை செவிடு என்று கிண்டல் செய்து, என் மாமாவிடம் வாங்கிக் கட்டியிருக்கிறேன். அப்படியென்றால், அவருக்கு எத்தனை வருடமாகக் காது கேட்காது என்பதை யூகித்துக் கொள்ளுங்கள். அப்போதெல்லாம், அவருக்கு வெற்றிலை இடித்துக் கொடுத்தால்...அதிலிருந்து சிறிது விண்டு தருவார். அதிகம் கேட்டால் தரமாட்டார்.இதுக்கு மேல தின்னா மாடு முட்டும் என்பார். ப்ச்...கோர்வையில்லாத நினைவுகள்.

சில வருடங்களுக்கு முன்பு வரை, சங்கீதம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். பெரிய வித்வான் இல்லையென்றாலும், கச்சேரிகளுக்கு பஞ்சமில்லை. பி.யு. சின்னப்பாவுடன் நாடகக்குழுவில் இருந்ததாக சொல்லிக்கொள்வார்கள்.இத்தனை வருடமாக, குடும்ப ஜீவனமே அவர் செய்த கச்சேரிகளால்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே..எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்", என்று பாட ஆரம்பித்தால் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.

அவரைப் பார்த்துவிட்டு வந்து ஒரு மாதமாகிறது. நடை தளர்ந்திருந்திருந்தது. தடுமாறி எழுந்தவருக்கு, உதவி செய்யப் போனேன். மறுத்து ஒதுக்கிவிட்டு, தானாக, சுவரைப் பிடித்து நடந்தார். முடியவில்லை என்று நடக்காமல் இருந்தால், நடை விழுந்துவிடும் என்ற பயமோ என்னவோ ? வார்த்தைகள் முன்பு போல் தெளிவாக வரவில்லை. "புல்லாங்குழல் கொடுத்த..." என்று அவர் பிசிராமல் பாடிய போது, பதிவு செய்து வைத்திருக்க வேண்டுமோ. ஹூம்..

நான் சொல்ல வந்தது அதுவல்ல. ஒரு முறை ஊருக்குச் சென்றிருந்தபோது (6 மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன்). அதே மர பெஞ்சில் வைத்து,

"தாத்தா, உங்களுக்கு என்ன வேணும் ?" என்று கேட்ட போது

"ஒரு கடிகாரம் வேணும்" என்றார். " தங்கக் கலர்ல..வெள்ளை டயல் வச்சு இருக்கும்ல..அது வேணும்..ஜாஸ்தி வெலையிருந்தா வேணாம்."

"அடுத்த தடவை ஊருக்கு வரும்போது வாங்கிட்டு வர்றேன் " என்று சொன்னேன்.


அடுத்த தடவை ஊருக்கு போகும்போது நான் மறந்து விட்டேன். அவர் மறக்கவில்லை. மறந்துவிட்டேன் என்று சொன்னதற்கு, "கஷ்டமா இருந்தா வேணாம்பா" என்றார். விருப்பமில்லாமலில்லை...உண்மையிலேயே வேலைப்பளுவினால் தான் மறந்துவிட்டேன் என்று விளக்கத் தோன்றவில்லை.

" நான் வாங்கிட்டு வர்ற வரைக்கும், இத வச்சிக்கோங்க" என்று என் கையிலிருந்ததை கழற்றிக் கொடுத்தேன்.

" இது வெலை ஜாஸ்தி மாதிரி தெரியுது..எனக்கு வேணாம்" என்று சொன்னவரின் கையில் அதை வலுக்கட்டாயமாக திணித்துவிட்டு வந்தேன்.

" நூறு வயதாவப் போவுது..இப்போ எதுக்கு இந்தாளுக்கு கெடியாரம்..சும்மா இருய்யா" ..இரைந்தது மிஸஸ்.கிழட்டுத்தாத்தா.

"இல்ல பாட்டி..போன வாட்டி வாங்கிட்டு வர்றேன்னு சொன்னேன்....மறந்துட்டேன்..அதான்"


அதன்பின் நாலைந்து முறை ஊருக்கு சென்று வந்தாகிவிட்டது. இதுவரை அவர் கேட்டதை வாங்கிச் செல்லவில்லை. அவரும் கேட்கவில்லை..கடைசியாகச் சென்ற போது, நான் கொடுத்த கடிகாரம்... ஒரு ஓரத்தில் கிடந்தது, அந்த வெற்றிலைப் பெட்டியோடு.

"என்ன தாத்தா...வெத்தலை போடறது இல்லய்யா...இப்டிக் கெடக்கு"

"என்னமோ..புடிக்கலப்பா..."

புரிந்து கொள்ள முடிந்தது. வருத்தப்பட்டேன்.

 அடுத்தமுறை செல்லும் போதும் வாங்கிச் செல்வேனா, என்று தெரியவில்லை. கண்டிப்பாக வாங்கிச் செல்ல வேண்டும். அதை அவரிடம் கொடுக்கும் போது. அவர் பொக்கை வாயால் அழகாகச் சிரிப்பதைப் பார்க்க வேண்டும்.

அதைவிட முக்கியம்..ஒரு வேளை அவர் இறந்துவிட்டால்.. அதன் பிறகு, வாங்கித் தராததற்கு ..நான் வருத்தப்பட்டு பிரயோசனமில்லை அல்லவா ? இதோ கிளம்பிவிட்டேன்.

கடைக்குச் சென்று வாங்கி வருவதற்கு எனக்கு செலவான நேரம் வெறும் இருபத்தைந்து நிமிடங்கள். இதை எவ்வளவு தள்ளிப் போட்டிருக்கிறேன்...சே !! .அடுத்தவாரம் ஊருக்கு செல்லும்போது...அவரிடம் கொடுத்து விடலாம். ரொம்ப சந்தோசப்படுவார்.உங்களுடன் பேசிக் கொண்டே மறந்து விடுவேன். இப்போதே.. நான் ஊருக்கு எடுத்துச் செல்லும் பெட்டியில் வைத்து விடுகிறேன். 

ஒரு நிமிஷம் இருங்க‌...என் அம்மாவிடம் இருந்து ஃபோன்.

"சொல்லுங்கம்மா.."

" கிழட்டுத் தாத்தா இறந்துட்டாங்கய்யா... உடனே கிளம்பி வாப்பா "

6 comments:

THOPPITHOPPI said...

கதை சொல்லிய விதம் அருமை

ச ம ர ன் said...

நன்றி தொப்பி !!

ராஜகோபால் said...

இப்போது 90 வயதுக்கு மேல் என்பது நமக்கு எட்டா கனி., நாம் கண்முன் பார்த்த தாத்தாகளின் உருவங்களை நம் சந்ததிகள் பார்க்க குடுத்து வைத்திருக்குமோ தெரிய வில்லை.

ச ம ர ன் said...

@ராஜகோபால்..

அது என்னமோ உண்மைதான்.60 தாண்டுவதே பெரிய விசயமா இருக்கு இப்போல்லாம்..

பதிவுலகில் பாபு said...

முடிவு எதிர்பார்த்ததுதான்.. ஆனாலும் ரொம்ப உணர்வு பூர்வமா இருந்தது..

தாத்தாவுக்கு வாட்ச்சைக் கொடுக்க முடியாதது வருத்தமாயிடுச்சு..

நல்லா எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..

ச ம ர ன் said...

நன்றி பாபு !!