Monday, May 14, 2012

டி.என்.ஏ ‍- 2

சென்ற பகுதியில் நாம் பார்த்த "இரட்டையர்களின் டி.என்.ஏ ஒன்றையொன்று ஒத்து இருக்குமா ?" என்ற சந்தேகத்திற்கு விளக்கத்தை பார்ப்போம்.

இரட்டையர்களின் டி.என்.ஏ‍-வை பற்றி ஆராயும் முன், இரட்டையர்கள் எப்படி உருவாகிறார்கள், அவர்களில் எத்தனை வகை உண்டு என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதை அறிந்து கொண்டால், அவர்களின் டி.என்.ஏ-வை பற்றி புரிந்து கொள்வது எளிது.

இரட்டையர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1)ஒரு நுகவிரட்டை(Monozygotic)
2)துவி நுகவிரட்டை(Dizygotic)

ஒரு விந்தணுவும், ஒரு முட்டையுடம் இணைந்துதான், ஒரு கருமுட்டை உருவாகிறது. இந்த கருமுட்டையானது, கருப்பைக்கு செல்லும் வழியில், இரண்டாகப் பிரிந்தால், அதிலிருந்து இரண்டு குழந்தைகள் உருவாகும். அது ஏன் இரண்டாகப் பிரிகிறது என்பதற்கு நம்மிடம் இன்னும் விளக்கமில்லை. இவ்வாறு,ஒரே கருமுட்டையில் இருந்து உருவாகும் இரட்டையர்கள், மோனோஸைக்காட்டிக் எனப்படுகிறார்கள்.

நாம் சென்ற பகுதியில் பார்த்தது போல டி.என்.ஏ‍ வானது 23 இணைகளால் ஆனது. அதில் பாதி ஆணின் விந்தணுவில் இருந்தும், மீதி பெண்ணின் முட்டையில் இருந்தும் பெறப்பட்டது. அதனால், ஒரே விந்தணு மற்றும் ஒரே முட்டையில் இருந்து உருவான கருமுட்டை, இரண்டாகப் பிரிவதால் உருவாகும் இரட்டையர்களின் டி.என்.ஏ க்கள் ஒன்று போலத்தான் இருக்கும். அதனால்தான் சில இரட்டையர்களிடையே, நம்மால் வித்தியாசம் காணமுடியவில்லை.

ஆகவே, நீங்கள் மோனோஸைக்காட்டிக் இரட்டையர்களின் டி.என்.ஏ வை பரிசோதித்தால், அவற்றுள் கிட்டத்தட்ட 99.99 சதவிகிதம் ஒற்றுமை இருக்கும்.மூன்றில் ஒரு பங்கு இரட்டையர்கள் மோனோஸைக்காட்டிக் தான்.

இதுபோல் இல்லாமல், இரு விந்தணுக்கள், இரு வெவ்வேறு முட்டைகளுடன் இணைந்து தனித்தனியாக கருமுட்டையாக உருவானால், அதை டை ஸைக்காட்டிக் என்று அழைக்கிறோம்.இந்தக் கருமுட்டைகளின் மூலம் வெவ்வேறாக இருப்பதால், அவைகளில் உள்ள டி.என்.ஏ வை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டால், பாதிதான் ஒத்துப் போகும்.அதனால்தான், சிலர் ஒரே பிரசவத்தில் பிறந்திருந்தாலும், நம்மால் அவர்களிடையே மிக எளிதாக வித்தியாசத்தைக் காண இயலும்.

இத்தனை இயல்புகளை உடைய டி.என்.ஏ வானது, ஜெனிட்டிக் இன்ஜினியரிங்,தடயவியல், நானோ டெக்னாலஜி போன்ற துறைகளுக்கு பயன்படுகிறது.

எப்படி தகவல் தொழில்நுட்பம் உலகை புரட்டி போட்டதோ, அதைப் போல, ஏன் அதைவிட அதிகமான தாக்கத்தை இந்த ஜெனிட்டிக் இன்ஜினியரிங் ஏற்படுத்த வல்லது. ஏனென்றால், இது ஒரு மனிதனின் மரபுக்கூறை மாற்றியமைக்கும் அறிவியல். உதாரணமாக, ஒரு மனிதனின் டி.என்.ஏ வின் படி அவர் வழுக்கை என்று எடுத்துக் கொள்வோம். அதை மாற்றியமைப்பதன் மூலம் அவருக்கு சராசரி மனிதனுக்கு இருப்பது போல் முடி வளரச் செய்ய இயலும். இது ஒரு மிகச் சாதாரண உதாரணம்.ஆனால் இதை "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" போல எடுத்துக் கொள்ளலாம்.

தடயவியலில் டி.என்.ஏ வின் பங்கைப் பற்றி வரும் பதிவுகளில் பார்ப்போம்.

Tuesday, May 8, 2012

டி.என்.ஏ


டி.என்.ஏ. என்றால் என்ன ? டீஆக்ஸி- ரிபோநியூக்ளிக் ஆசிட் என்பது இதன் விரிவாக்கமாக இருந்தாலும், "மரபு அடிப்படைக் கூறு" என்று சொல்லும் போது எளிதாக விளங்கும். அதாவது உங்கள் அடிப்படை உருவ அமைப்பை நிர்ணயம் செய்வதற்கு மூல காரண‌மாக இருப்பது இந்த டி.என்.ஏ தான்.

ஒரு மனிதனுக்கு விரல் ரேகை எவ்வளவு தனித்துவம் வாய்ந்ததோ, அது போல, ஏன்..அதை விட ஒரு படி மேலானது இந்த டி.என்.ஏ.

அப்படியென்றால் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள டி.என்.ஏ, ஒன்றை ஒன்று ஒத்து இருக்காதா என்றால், அது தவறு. பெரும்பாலான டி.என்.ஏ-க்களில் வேறுபாடு இருக்காது. அடிப்படையான மூன்று மில்லியன் டி.என்.ஏ-க்கள் மட்டுமே ஒவ்வொரு மனிதனுக்கும் இடையில் வேறுபடுபவை.

அடிப்படையே மூன்று மில்லியன் என்றால் ? மொத்தம் எவ்வளவு ? இந்த வேறுபடும் டி.என்.ஏ வின் விகிதம் மொத்தமுள்ள டி.என்.ஏ வில் ஆயிரத்தில் ஒரு பங்குதான்.( நாம் அனைவரும் ஆயிரத்தில் ஒருவர் தான்)

ஒரு டி.என்.ஏ என்பது  நீளமான, முறுக்கிய, இரட்டைவட சங்கிலி போன்ற அமைப்பை உடையது. இதைத்தான் ஆங்கிலத்தில் double helix என்பார்கள்.
பார்ப்பதற்கு சிக்கலான வடிவத்தில் இருந்தாலும், இதன் உட்பொருட்கள் வெறும் நான்கு உட்கரு அமில மூலங்கள் தான். அதாவது nucleotides.

1)அடினின்
2)சைட்டோஸின்
3)குவாமின்
4)தையமின்

மேற்கண்ட நான்கு அமிலமூலங்கள் தான் ஒரு டி.என்.ஏ வின் அடிப்படை இணைகளாக அமைபவை. இவற்றில் எப்பொழுதும் அடினின் மற்றும் தையமின் ஒரு இணையாகவும், சைட்டொஸின் மற்றும் குவாமின் ஒரு இணையாகவும் அமைந்திருக்கும், ஒரு ஏணியின் படிகளைப் போல.

இந்த இணைகளை உடைய டி.என்.ஏ வின் ஒரு அமைப்புதான் குரோமோசோம் எனப்படுவது. மனித உடலில் இந்த டி.என்.ஏ 23 ஜோடி குரோமோசொம்களாக உருப்பெற்றிருக்கும். இந்த 23 இணைகளில், ஒரு இணை உங்கள் தந்தையிடமிருந்தும், மற்றொரு இணை உங்கள்  தாயிடம் இருந்தும் பெறப்பட்டிருக்கும். அதாவது உங்களது டி.என்.ஏ உங்கள் தாய்,தந்தை, இருவரின் டி.என்.ஏ க்களின் கலவையாக இருக்கும். இப்போது புரிந்திருக்கும் இது எவ்வளவு தனித்துவம் வாய்ந்தது என்று.

1) இரட்டையர்களின் டி.என்.ஏ ஒன்றையொன்று ஒத்து இருக்குமா ?
2) தற்கால அறிவியலில் டி.என்.ஏ வின் பயன் என்ன ?
3) டி.என்.ஏ பரிசோதனை எவ்வாறு செய்யப்படுகிறது ?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை பின்வரும் பகுதிகளில் பார்ப்போம்.பி.கு : இந்தப் பகுதியில் நான் எழுதும் எதுவும் நானாக கண்டுபிடித்தது அல்ல. அறிந்ததை, படித்ததை எழுதுகிறேன். முடிந்தவரை சரியாக :)