Saturday, April 20, 2013

ரயில் பயணங்களில்...


உங்களுக்கு ரயிலைத் தெரியுமா ? எனக்கு இன்னும் ரயிலைப் பற்றி முழுதாகத் தெரியவில்லை. தெரிந்துகொள்ள முடியவில்லை. எத்தனை முறை முயற்சித்தாலும், அதை தெரிந்து கொள்ளும் தூரம் நீண்டு கொண்டே இருக்கிறது. இதுவரையிலும் ரயிலை ஒரு பார்வையாளனாக, பயணியாக, ரசிகனாக பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன்.. தெரிந்துகொள்ள முடியவில்லை.

நீங்கள் சுமாராக எத்தனை முறை ரயிலில் பயணம் செய்திருப்பீர்கள் ? அதில் எத்தனை முறை பயணம் சுகமானதாக அமைந்திருக்கும். அவ்வாறான பயணங்களில் தான் ரயிலை தெரிந்து கொள்ளக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். எனக்கு அந்த வாய்ப்பு அதிகமாக கிடைத்திருக்கிறது. முன்பதிவு பாக்கியம் அருளப்பட்ட சில ஆயிரம் பேர்களில் நானும் ஒருவன். நல்ல ரயில் பயணமாக நான் கருதுவது, முன்பதிவு கிடைத்த இரண்டாம் வகுப்பு பயணத்தையே. ஏசி பெட்டிகளில் படுத்துறங்கி, மறுநாள் காலை ஃப்ரிஜ்ஜில் வைத்த பழைய காய்கறி போல் இறங்குவதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை.

தொடர்ச்சியான ரயில் பயணங்கள் ஆரம்பித்த சில காலத்துக்கு, என்னால ரயிலை ஒரு வாகனமாகத் தான் பார்க்க முடிந்தது. ஆனால், சில நாட்களில் புரிந்து கொள்ளத் தொடங்கினேன், அது வெறும் இரும்புப் பெட்டிகளின் கோர்வை அல்ல. நல்லவன், கெட்டவன் என ஆயிரம் பேர்களின் கனவுகளை சுமந்து செல்லும் ஒரு உயிரி. ஒவ்வொரு முறை பயணம் செய்யும் போதும், நாம் சந்திக்கும் அநேக நபர்கள் நாம் அதற்கு முன் பார்த்திராதவர்களாகத் தான் இருப்பர். வயதானவர்கள், அழகானவர்கள், மாற்றுத் திறனாளிகள், பணக்காரர்கள், குறுந்தகவல் அனுப்பிக் கொண்டிருக்கும் போது எட்டிப் பார்ப்பவர்கள், இப்படி எத்தனையோ பேர். இவர்களில் பல பேரிடம், நாம் பேசாவிட்டால் கூட, அவர்களது பாவனை, அலைபேசியில் பேசுவதை வைத்து, அவர்கள் இன்னார், அவர்களது குடும்பம் இப்படி இருக்கக் கூடும் என்று ஒரு அவதானிப்பு வந்து விடும். முன்பு அடுத்தவர் இருக்கும் போது அலைபேசியில் தனிப்பட்ட விசயங்களைப் பேசுவதில் இருந்த தயக்கம் இப்போது இல்லை. ஏனெனில், யாரும் யாருக்கும் தெரிந்தவர் இல்லை. அடுத்தவர் என்ன நினைக்கிறார் என்பதை பற்றிய கவலையும் இல்லை. ஆனால் இவை அனைத்தயும் ரயில் பார்த்துக் கொண்டிருக்குமோ, என்ற சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு.

அந்த ஒருவரை நான் தொடர்ச்சியாக நெல்லை எக்ஸ்பிரஸில் செய்த சில பயணங்களில் பார்த்திருக்கிறேன். அவரது பெயர் தெரியாது. 40 வயதுக்குள் இருக்கலாம்.விருதுநகரில் இறங்குவார். நான் ஒவ்வொரு முறை தாம்பரத்தில் ஏறும் போதும், எனக்கு முன்னரே அதே பெட்டியில் அவர் அமர்ந்திருப்பார். எழும்பூரில் ஏறியிருக்கலாம். பெரும்பாலான பயணங்களில்  நாங்கள இருவரும் ஒரே பெட்டியில் பயணம் செய்துள்ளோம். இது வரை பேசிக் கொண்டதில்லை. சில பயணங்களுக்கு பின், அவர் என்னை அதே பெட்டியில் பார்க்க நேரும் போது, சினேகமான ஒரு பார்வை மட்டும் அவரிடம் இருந்து வரும். ஏதோ என்னை முழுதாக அறிந்து கொண்டதை போல. என்னை ஆச்சரியப் படுத்திய விஷயம் அது. ஏனென்றால் நான் ஒவ்வொரு முறை அவரைப் பார்க்கும் போதும், முதல் முறை பார்க்கும் ஒரு பாவனையைத் தான் வெளிப்படுத்தி இருக்கிறேன். இருந்தாலும் அவர் பார்வை மாறியதில்லை. அது என்னுடைய திமிராகக் கூட இருக்கலாம் என்பது பின்பு எனக்கு விளங்கிய விஷயம்.

அவர் ரயிலை ஒரு பயணப்பொருளாக பார்த்ததில்லை. தன்னுடைய சொந்த வீட்டின் படுக்கையறையைப் போல்தான் பாவித்தார். அவர் சக பயணிகளிடம் எரிந்து விழுந்து நான் பார்த்ததில்லை.விருந்தினர்கள் இருக்கும் போது, நம் வீட்டின் படுக்கையறையின் மீதுள்ள உரிமையை குறைத்து, ஒரு இயல்பான நாகரீகத்தை வெளிப்படுத்துவோமல்லவா.. அதைத்தான் அவரிடம் நான் பார்த்திருக்கிறேன். தனது பெர்த்தில் அவரது பொருட்களை, ஒதுங்க வைப்பதில் இருந்து, காலை எழுந்து, கைலி பனியனுடன், மேலுக்கு ஒரு துண்டைப் போர்த்திக் கொண்டு வாசலில் நின்று காற்றை ரசிப்பது வரை,அந்தப் பெட்டியின் மேல் அவர் கொண்டுள்ள உரிமைதான் வெளிப்படும். தலையணை, போர்வை, பிரஷ், பேஸ்ட், ஏன் தேங்காய் எண்ணெய் முதற்கொண்டு எடுத்து வருவார். காலையில் ரயில மதுரை தாண்டும் போது, அவர் குளித்து முடித்திருப்பார். விருதுநகர் வருவதற்கும், அவர் கிளம்பி தயாராவதற்கும் சரியாக இருக்கும். ஒரு மனிதன் இவ்வளவு நிதானமாக, தன் ரயில் பயணத்தை ரசிக்க முடியுமா என்று எனக்கு இப்போது வரை ஆச்சரியம் உண்டு.

வெள்ளி இரவு செய்யும் ரயில் பயணத்திற்கும், ஞாயிறு இரவு செய்யும் பயணத்திற்கும், நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஊருக்கு கிளம்பும் சந்தோசத்தில், வெள்ளி மாலை தொடங்கும் படபடப்பு, சனிக்கிழமை காலை, ஊரில் சென்று இறங்கும் வரை, நம்மை அறியாமல் தொற்றிக் கொண்டு கூடவே வரும். ஞாயிறு இரவு அப்படி அல்ல. இரண்டு நாட்கள், அம்மாவின் சமையலை ருசித்து சாப்பிட்டு, சந்தோசமாக இருந்துவிட்டு, பிழைப்பைப் பார்க்க திரும்பும் போது, ஒரு வித நிதானம் வந்துவிடும். ஒரு வித மந்தத்தன்மையோடுதான் ரயில் ஏறுவோம். ஆனால் அந்த மனிதரிடம் நான் இந்த நிதானத்தை எப்போதுமே பார்த்திருக்கிறேன். ஊருக்கு போகும் போது அவரிடம் என்ன ரசனை வெளிப்பட்டதோ, அது இம்மியளவும் குறையாமல் திரும்பி வரும் போதும் இருக்கும். ஒரு வேளை அவர் வாரஇறுதியில் ஊருக்கு வருவதே, ரயிலை ரசிப்பதற்காகவோ என்று தோன்றும்.

இப்போது எனக்கு ரயில் மேல் வந்துள்ள சினேகத்துக்கு காரணம் அவராகக் கூட இருக்கலாம். அந்த பேர் தெரியாத மனிதனிடம் என்றைக்கும் பேச வேண்டும் என்று நினைத்தேனோ...அன்றிலிருந்து எனக்கு நெல்லையில் பயணம் செய்யும் வாய்ப்பு அமையவில்லை. ஒரு நாள் அந்த வாய்ப்பு வரும். அவரிடம் பேசி, அவரிடம் இருந்து வெளிப்படும் ரயில் மேலுள்ள அலாதியான உரிமையின் காரணத்தை அறிய வேண்டும். அவரிடமும் என்னைப் போல் ஆயிரம் கதைகள் இருக்கலாம். கேட்டால் சளைக்காமல் சொல்லுவார் என்று எனக்குத் தெரியும்.. அப்போதும் ரயில் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும்...