Saturday, November 28, 2015

சோஷலிஸக் கண்ணாடிசோஷலிஸக் கண்ணாடி

இரயில்வே ஸ்டேஷன் பாலத்தில் இருந்து வண்டிகள் மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தன. கார்கள், பஸ்கள், இடையில் புகும் ஆட்டோக்கள், அரை அங்குல இடைவெளியில் நுழைய முற்படும் பைக்குகள். பத்து நிமிடத்திற்கு முன் ஆரம்பித்த மழை, நசநசத்துக் கொண்டிருந்தது. இன்னும் விஜயநகர் சிக்னலுக்கு நிறைய தூரம் இருந்தது. சிக்னல் வரை சீரியல் லைட்டுகள் போல, மஞ்சள் சிவப்பு கலவையில் வண்டிகள் நெரிசலாக சிக்கிக் கிடந்தன. எப்.எம்-மில் “தில் ஹை ஹிந்துஸ்தானி” என்று உதித் நாராயண் பாடி முடித்தவுடன், ரத்னா ஸ்டோர்ஸின் ஏசி தள்ளுபடி விற்பனை பற்றி ஒரு மாமியும், மாமாவும் மயிலாப்பூர் தமிழில் சிலாகித்துக் கொண்டிருந்தார்கள்.

“வேளச்சேரிக்கு விடிவே கிடையாது போல. நாளாக நாளாக டிராபிக் கூடிக்கிட்டே தான் போகுது”, சேனல் மாற்றி வால்யூமை குறைத்தான் தீபக்.

மொபலை நோண்டிக் கொண்டிருந்த கீதாவிடம் இருந்து பதில் வராததால். காரின் வைப்பரை, குறைந்தபட்ச வேகத்திற்கு செட் செய்து விட்டு வேடிக்கை ஸ்டியரிங்கின் மேல் நாடியை வைத்து வேடிக்கை பார்க்கலனான்.

ஜன்னல் வழியாக வெண்மையாக படர ஆரம்பித்து, சட்டென்று நெடியேற, கீதா விருட்டென்று திரும்பினாள். இடப்புறம் இரண்டு இஞ்ச் இடைவெளியில் நின்று கொண்டிருந்த இண்டிகாவின் டிரைவர் சீட்டிலுருந்து, நுரையீரலின் அடிவரை சிகரெட்டை இழுத்து புகையை கக்கிக் கொண்டிருந்தான் ஒருவன். தீபக் கண்ணாடியை ஏற்றவும், புகை தடைபட்டு, அவனிடமே திரும்பியது. அனாயசமாக கலைத்துவிட்டு, அடுத்த இழுவைக்கு செருமிக்கொண்டான். கிளட்சை ரிலீஸ் செய்து, முன்னால் இருந்து வண்டியின் நம்பர் பிளேட் வரை வண்டியை ஒட்டினான் தீபக்.

"தலைய வலிக்குது”, என்றபடி தண்னீர் பாட்டிலை தேடினாள் கீதா.

“காபி சாப்டு போலாமா”

“வேணாம் ஆல்ரெடி லேட். அங்க எப்டியும் காபி வச்சிருப்பாங்க. போயி குடிச்சிக்கலாம்”

“இன்னிக்கு போன மாதிரிதான். சீக்கிரமே கிளம்பிருக்கலாம். என்னைக்கு சிக்னல் தாண்டி, 100 பீட் ரோடு தாண்டி ஹோட்டலுக்குப் போக ?”

“நான் பைக்ல போலாம்னு சொன்னேன்.. நீதான் வேணாம்ன”, கீதா.

“எதுக்கு ? நீ ஏற்கனவே சரத் கூட பைக்ல போயி, அவன் பிரேக் அடிச்சதுக்கு அந்தத் திட்டு திட்டுன..நான் அதுக்கு ரெடியா இல்லம்மா”, கைகூப்பினான்.

 உதட்டுக்குத் தெரியாமல் சிரித்துக்கொண்டாள்.

“ஒரு வயசுக் குழந்தைக்கு இவ்ளோ செலவழிச்சு பர்த்டே பார்ட்டி வைக்கணுமா. அதுவும் வேளச்சேரில, வெள்ளைக்கிழமை அன்னைக்கு”

“அவுங்க குழந்தை…அவுங்க வைக்கிறாங்க.உனகென்ன வந்துச்சு. நாளைக்கு உனக்கு குழந்தை பிறந்தா நீயும் இப்டிதான் செலவழிப்ப”, கீதா.

“ வாய்ப்பே இல்ல...இதுக்கு ஆகுற செலவை, நான் எதாது அனாதை ஆசிரமத்துக்கு குடுத்துருவேன்..புண்ணியமாது கிடைக்கும். இதுக்கு போகவே பிடிக்கல, ஏதோ நம்ம மேனேஜர்ங்கிறதால போக வேண்டியது இருக்கு…ரோதனை..”, கியரை மாற்றினான் தீபக்.

“ஓவரா பேசாத..இதெல்லாம் அவுங்கவுங்க இஷ்டம். உனக்கு குறை சொல்ல ரைட்ஸே இல்ல"

முன்னிருந்த வண்டிகள் சரசரவென பத்தடிகள் நகர்ந்து பிரேக்கடித்து நின்றன. தூரத்திலிருந்த பச்சை சிக்னல் அதற்குள் சிவப்புக்கு மாறியிருந்தது. நியூட்ரலிலும் போட முடியாமல், கிளட்சையும் ரிலீஸ் செய்ய முடியாமல் காரோட்டிகளுக்கு இது ஒரு அநியாய அவஸ்தை.

“கால் வலிக்குது. அடுத்து வாங்குனா கண்டிப்பா ஆட்டோ கியர்தான் வாங்கணும். சுத்தமா முடியல”, கை விரல்களில் நெட்டு எடுத்துக் கொண்டே எரிச்சலனான் தீபக்.

தன் பக்கமிருந்த வைப்பர் ஒருமுறை இறங்கி ஏறுவதற்குள் எத்தனை மழைத்துளிகள் கண்ணாடியில் விழுகின்றன என்பதை எண்ன முயன்று தோற்றுக்கொண்டிருந்தாள் கீதா. பின்னால் இருந்த குவாலிஸ் காரன் இருபத்தைந்தாவது முறையாக ஹாரன் அடித்தான்.

“இவனுக்கு என்னவாம்..முன்னாடி என்னமோ காலியாக் கிடக்குற மாதிரி டொய்ங் டொய்ங்கின்னுட்டு இருக்கான். அறிவுகெட்டவன்” ரியர்வியூவில் பார்த்துவிட்டு ப்ரயோஜனமில்லாத கோபத்தைக் காட்டினான் தீபக். அடுத்த பத்து நொடிகளில், அவனது விரல்கள் அனிச்சையாக ஹாரனை அழுத்தின.

கீதா இடப்புறம் திரும்ப, இண்டிகாக்காரன் இரண்டாவது சிகரெட்டை பற்ற வைத்திருந்தான். கார் மெதுவாக வெங்கடேஸ்வரா சூப்பர் மார்க்கெட்டை தாண்டிக்கொண்டிருந்தது. குவாலிஸ் காரன் ஐம்பதாவது முறையாக ஹாரன் அடித்து முடித்திருந்தான். ரோட்டின் இடது ஓரமாக வர முயன்ற தீபக்கை, பஸ் ஸ்டாப்பில் நிறுத்தி எடுத்த எம்டிசி டிரைவர், ஆங்காரமான ஹாரன் சத்தத்துடன் ஒதுக்கினார். வேறு வழியில்லாமல், வலப்பக்கம் மீடியன் ஓரம் வந்து சேர்ந்தான் தீபக். இதற்குள் குவாலிஸ் காரன் இடதுபக்கம் முன்னேறி வந்து, அவனுக்கு முன்பிருந்த ஆல்டோவை எரிச்சலூட்ட ஆரம்பித்திருந்தான்.

“ப்ச்..இனி சிக்னல்ல லெப்ட் எடுத்த மாதிரிதான்”, தன் பக்கமிருந்த ஜன்னலின் கண்ணாடியை இறக்கினான் தீபக்.

 மீடியனுக்கு அந்தப்பக்கம் மெக்-டியின் கண்ணாடி சுவர்களின் வழியே, யுவதிகள் சிரித்தபடி, உறையவைத்த கோழிக்காகவும், பொரித்த உருளைக்கிழங்கிற்காகவும் வரிசையில் நின்றார்கள். வடநாட்டுப் பெண்கள் என்று யூகிப்பதற்குள், பக்கத்து ப்ளாட்டில், எப்போதும் டவுசரோடு திரியும் ஆமோஷிகாவுக்கு சொந்த ஊர் திருச்செங்கோடு என்ற விஷயம் ஞாபகத்துக்கு வர, யூகிப்பதை நிறுத்தினான். இப்போதெல்லாம் வித்தியாசம் காணமுடிவதில்லை. ஜீன்ஸ் வழக்கொழிந்து நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் லெக்கின்ஸ் பரவிவிட்டது. எல்லா ஊர்ப் பெண்களும் ஒரே போல்தான் தெரிகிறார்கள். யோசனையைக் கலைக்கும்படி, ஒரு 51பி ஒயிட் போர்டு சில நூறு பேரை ஏற்றி எதிர்ப்புறம் கடந்து சென்றது.

“எவ்வளவு ஏற்றத்தாழ்வுல இந்த ஊர்ல…ரெண்டு துண்டு சிக்கனுக்காக, நூறு ரூபா ப்ளஸ் டிப்ஸ் குடுக்குற ஆட்கள் இருக்க அதே கடைக்கு வெளிய, எட்டு ரூபா டிக்கெட் எடுக்க முடியாததால கிரீன் போர்டுல போகாம, நாலு ரூபா டிக்கெட்டுக்காக வெயிட் பண்ணி ஒயிட் போர்டுல, மூச்சுக்கூட விடமுடியாம போற மக்களும் இருக்காங்க…ப்ச்”, கீதா பக்கம் திரும்பினான்.

“ஏன் லெ.ஈ.டி போர்டுல கூடத்தான் இப்பல்லாம் கூட்டம் ஜாஸ்தியா இருக்கு”, கீதா.

“அதென்னமோ உண்மைதான், ஆனா கவனிச்சிருக்கியா, ஒயிட் போர்டை விட லெ.ஈ.டி போர்டுதான் அதிகம் ஓடுது"

“ஆமா, எதுல லாபம் அதிகமோ அதுலதான் நிறைய பஸ் விடுவாங்க. எல்லா பஸ்சயும் ஒயிட் போர்டு ஆக்க முடியுமா என்ன ? கேன் யூ இமாஜின் டிராவிலிங் வித் தி ஸ்வெட்டி, டிரங்க் லேபர்ஸ் எவ்ரி ஈவ்னிங்..உவ்வே”, பழிப்பு காட்டினாள் கீதா.

“ஒரே ஒரு தடவ ஏறிட்டேன், பொண்ணுங்க கூட கெட்ட வார்த்தைல திட்டுது..”. இரு கைகளையும் கன்னங்களுக்கு அருகே வைத்துக் கொண்டாள்.

“ஏன் நீங்கள்லாம் கெட்ட வார்த்தை பேசுறதில்லயா, தி எப் வேர்ட், தி எஸ் வேர்டு, எத்தன தடவை ஒரு நாளைக்கு ?..ஹும்..உங்களுக்கு கோவத்துல ஒருதடவை ஓத்தான்னு திட்டுறவன் கெட்டவன், மதர்பக்கர்னு ஒரு நாளைக்கு நூறு தடவை சிரிச்சுட்டே சொல்றவன் நல்லவன்“, வைப்பரை நிறுத்தினான் தீபக்.

“ப்ளீஸ்..உன் கூட ஆர்கியூ பண்ண முடியாது ”, காதைப் பொத்திக்கொண்டாள் கீதா.

தன் பக்கமிருந்த ஜன்னல் கண்ணாடியை இறக்கி விட்டுக்கொண்டாள்.

“நீ ஏன் எப்பவும் பணம் இல்லாதவுங்க, கஷ்டப்படுறவுங்களுக்கு சப்போர்ட்டாவே பேசுற. யூ வாண்ட் டூ லுக் லைக் எ ஹீரோ…? ஆக்சுவலி யூ ஆர் போரிங். லெட் மீ டெல் யூ”, கீதா.

“தீபக்...எல்லா கேட்டகரீல இருக்க மக்களும் கஷ்டப்படத்தான் செய்றாங்க. எங்கம்மா பேங்கல ஒர்க் பண்றாங்க. அவுங்க கஷ்டப்படுறதில்லையா ? ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை. யாருக்காக ? என் பேமிலிக்காக. எனக்காக. ஏன் நம்ம வேலை பாக்கல, பதினைஞ்சு பதினாறு மணி நேரம் ஒரு நாளைக்கு. அதெல்லாம் உனக்கு கஷ்டமா தெரியலயா. படிச்சவுங்க மூளைக்கு வேலை வச்சு கஷ்டப்படுறாங்க. படிக்காதவுங்க உடல் உழைப்பால கஷ்டப்படுறாங்க. நம்ம சொகுசா இருக்கோங்கிறதால யூ கேன் நாத் இக்னோர் அவர் டிரபள்ஸ். அவனுக்கு பஸ் டிக்கெட்னா உனக்கு கார் இ.எம்.ஐ அவ்ளோதான் வித்யாசம். அவுங்க நம்மள பார்த்து பொறாமைப்பட்டா, நம்ம நமக்கு மேல இருக்கவுங்களப் பாத்து பொறாமைப்படுவோம் அவ்ளோதான்.ச்சும்மா யூஸ்லெஸ் ஹீரோயிக் ஸ்பீச். எல்லாத்தயும் சோஷலிசக் கண்ணாடி வழியாப் பார்க்கக்கூடாது.”.

“அதெல்லாம் ஓகே.. அவசரத்துக்கு பேச மொபைல் வேணும்னு ஆசைப்படுறதும், ஐ போன் 6எஸ் ஸுக்கு ஆசைப்படுறதும் ஒண்ணுங்கிறியா ?”, தீபக்.

“இங்க..பாரு”, என்று கீதா வாயெடுப்பதற்குள் தீபக் இடைமறித்தான்

“இரு..இரு நான் முடிச்சிக்கிறேன். அவுங்க நல்லவுங்க, இவுங்க கெட்டவுங்க, பாவம்னு நான் சொல்ல வரல. இதோ...இந்த மெக்-டி கடை வச்சிருக்கவன்…அவனுக்கும் ஆயிரம் கஷ்டம் இருக்கும். இந்த இடத்துக்கான லீஸ், ப்ரான்ச்சைஸ், இன்ப்ரா, இன்வெஸ்ட்மெண்ட், குவாலிட்டி, எம்ப்ளாயீஸ் ரீட்டெயின்மெண்ட்டுன்னு நம்மள விட கஷ்டம் அவன் பொழைப்பு. லாபம் பாக்குறதே கஷ்டம் தெரியும்ல. நான் பணத்தை மட்டும் சொல்லல. ஒருத்தரு பேசுறத வச்சு, அப்பியரன்ஸ் வச்சு, பைனான்சியல் ஸ்டேட்டஸ வச்சு, யாரையும் ஜட்ஜ் பண்ணாதீங்கன்னு சொல்றேன்”, என்றபடி முன்னால் இருந்த பைக்கை பார்த்தான் தீபக். 

மஞ்சள் நிற குர்தா , கரும்பச்சை ஜீன்ஸ் அணிந்து, சிவந்திருந்தவள், பைக் ஓட்டிக்கொண்டிருந்தவனின் முதுகோடு ஒட்டி, கழுத்தோடு கைகோர்த்து காதில் கிசுகிசுத்துக் கொண்டிருந்தாள். இவனுகளை எல்லாம் ஹெல்மட் போடலைன்னு புடிக்க மாட்டாங்களா என்று எழுந்த கேள்வி, அவனது ஷோல்டர் பேக்கை ஒருவேளை முன்பக்கம் மாட்டியிருப்பானோ என்ற சந்தேகத்தில் அடிபட்டுப்போனது.

“வேற எதை வச்சு ஜட்ஜ் பண்ண சொல்ற”, இரண்டாவது முறையாக கீதா கேட்ட போதுதான் காதில் விழுந்தது.

“அது..ப..ப..பழகிப்பார்த்தா தான் தெரியும். சும்மா பளண்ட்டா..படிச்சவன்..டீசண்ட்ட இருக்கவன்லாம் நல்லவனா இருக்கணும்னு நம்பாதீங்கன்னு சொல்றேன்..அவ்ளோதான். ஸவெட்டி டிரங்க் பீப்பிள் கேன் ஸ்டில் பீ குட்”

“முப்பது நிமிஷம் டிராவல் பண்ணப் போற பஸ்ல இருக்கவன்கூட எனக்கென்ன பழக்கம் வேண்டிக்கிடக்கு. சிட்டில ரெகுலரா ஒரே டைமிங்ல போகாம, டெயிலி ஒரு அஞ்சு பத்து நிமிஷ டிபெரென்ஸ்ல பஸ் ஏறிப் பாரு, ஒரு பஸ்ல, ஒரு மாசத்துல, பார்த்த ஆளையே திரும்பப் பாக்குறதுக்கான ப்ராபபலிட்டி எவ்ளோ கம்மின்னு தெரியும்.பழக்கமாம் பழக்கம்”

“அப்ப..படிச்சவன்லாம் நல்லவன்கிற ?”, இடது பக்கம் ஒடித்து அந்த பைக்கைகடந்து நின்றான் தீபக். ஷோல்டர் பேக்கை முன்னால்தான் மாட்டியிருந்தான், கிராதகன்.

“இல்ல.. கம்பர்டபிளா பீல் பண்றேன்னு சொல்றேன்.. அவ்ளோதான். நத்திங் எல்ஸ். எனக்கு அழுக்கா, பாக்கறதுக்கு லோக்கலா நிக்கிறவன்கிட்ட பேசுறதுல இருக்க தயக்கம், பாக்க டீஸண்ட்டா இருக்கவன்கிட்ட பேசுறதுல இல்ல. நான் என்ன அவன கல்யாணமா பண்ணிக்க போறேன். பேஸிக் பப்ளிக் இண்டிராக்‌ஷனுக்கு இவ்ளோதான் லிமிட், இவ்ளோ பாத்தா போதும்...லெட் அஸ் ஸ்டாப் திஸ்.”

வண்டி இதற்குள் டாக்டர்ஸ் பிளாசா தாண்டியிருந்தது. முப்பது நிமிட மழைக்கே சாக்கடை வெளியேறி ஓடிக்கொண்டிருந்தது. நான்கைந்து சிறுவர்கள் ஓடிக்கொண்டிருந்த சாக்கடையில் மீன்பிடிக்கத் தொடங்கி இருந்தார்கள். எதிர்ப்புறம் சரவணா ஸ்டோர்ஸில் கூட்டம் அள்ளியது. கடையில் இருந்து வெளியேறிய சிலரை கால்டாக்ஸிகள் அள்ளிக்கொண்டிருந்தன. எப்.எம்.மில் “வ்வாட்டகருவாட்” என்று அனிருத் உச்சஸ்தாயியில் பாடிக்கொண்டிருந்தார்.

“நீ இந்த மோட்டர் சைக்கிள் டைரீஸ், சேகுவேரா, காஸ்ட்ரொ பத்திலாம் படிச்சிருக்கியா..எனி ஐடியா” ,இடதுபுறம் திரும்ப ஏதுவாய் இண்டிகேட்டரை ஆன் செய்தான் தீபக். இன்னும் பதினைந்து வண்டிகள் முன்னாலிருந்தன.

“இல்ல”, மீன் பிடித்துக் கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்தவாறே பதிலளித்தாள் கீதா.

“ஒன்லி அகதா கிறிஸ்டியா..ஹிம்..அதப்படிச்சா எப்டி காமன் மேன் பத்தி தெரியும் உங்களுக்கு” , நக்கலாக கேட்டான் தீபக்.

“ஆமா. நாட் ஒன்லி அகதா கிறிஸ்டி. ஐ ரீட் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் டூ. ஏன் சேகுவேரா பத்தி படிச்சவங்களுக்கு மட்டும்தான் காமன்மேன் பத்தி தெரியுமா”, சிறுவர்களுக்கு இன்னும் மீன் சிக்கிய பாடில்லை. கத்திக் கொண்டிருந்தார்கள்.

“ஆப்வியஸ்லி”, என்றபடி அந்த பைக்காரனைத் டிராபிக்கில் தேடினான் தீபக்.

நான்கு கார்களுக்கு முன்னால் ஒரு சிறுமி ஒரு கையில் பொம்மை, ஸ்டிக்கர், சிறிய பெயிண்ட்டிங் புத்தகங்களை வைத்துகொண்டு, கார் கண்ணாடி வழியாக கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். இன்னொரு கையால் வயிற்றைத் தடவிக்கொண்டே, அவளது வாய் ஏதோ முனகிக்கொண்டிருந்தது. எதேச்சையாக பார்வையைத் திருப்பிய கீதாவுக்கு, அந்தச் சிறுமி மட்டுமே கண்ணில் தெரிந்தாள். அதிகபட்சம் பத்து வயதிருக்கும். யாரிவள் ? எந்த ஊராக இருப்பாள் ? அப்பா அம்மா? தான் பத்து வயதில் எப்படி இருந்தோம் ? என்று சில நொடிகளுக்குள் நூறு யோசனைகள். மூன்று கார் கண்ணாடிகளைத் தட்டிப்பார்த்து தோற்றுவிட்டு, இவர்களது காரை நோக்கி நடந்து வந்தாள்.

வறண்ட கண்களும், காய்ந்த தலைமுடியும், மெலிந்த தேகமும், பொருட்களை இடுக்கிக்கொண்டு, ஓட்டமும் நடையுமாய், கார்களின் ஊடே வந்து கொண்டிருந்தாள். அவள் வருவதைப் பார்த்த கீதாவின் கண்களில் இருந்த ஈரத்தை உணர்ந்து கொண்டதைப் போல, வேகுவேகுவென்று வந்தாள். பர்ஸில் இருந்து ஒரு இருபது ரூபாய் நோட்டை கீதா எடுத்து நீட்டவும், தீபக் சுதாரித்து கார் கண்ணாடியை ஏற்றவும் சரியாக இருந்தது.

“தீபக் !!” கத்தினாள் கீதா.

பொம்மையை எடுத்து கண்ணாடியின் அருகே காண்பித்துக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி.கீதா கையிலிருந்த இருபது ரூபாயை பார்த்து விட்டிருந்தாள் அவள்.

“கண்ணாடிய இறக்கு…தீபக்” பவர் விண்டோவின் பட்டன் வேலை செய்யவில்லை. லாக் செய்திருந்தான்.

“இவளுக்கு ஏன் காசு தர்ற..இவுங்கள்லாம்”, என்று ஆரம்பித்தான். விஜய நகர் சிக்னல் பச்சை வண்ணம் காண்பித்தது.

“பேசாத…அவ நான் காசு குடுக்கப்போறேன்னு நினைச்சிட்டா…அன்லாக் பண்ணு”, கத்தினாள் கீதா.

பின்னால் இருந்து ஹாரன்கள் காதை பிளந்தன. ஒரு பார்ச்சூனரின் முன் டயர் அந்த சிறுமியை உரசிக்கொண்டு சென்றது. சலனமேயில்லாமல், கண்ணாடியைத் தடவிகொண்டே, நகர்ந்து கொண்டிருந்த காரோடு ஓட்டமும் நடையுமாய் வந்தாள்.

“நிறுத்து தீபக். சொல்றேன்ல”

“லூசா நீ… எவ்ளோ டிராபிக் பாரு. இங்கலாம் நிறுத்த முடியாது. இதுக்குதான் நான் சிக்னல்ல கண்ணாடிய இறக்குறதே இல்ல”, இடது பக்கம் இண்டிகேட்டர் போடாமல் ஒடித்து, ஆட்டோக்காரனிடம் பேமானி பட்டத்தை வாங்கிக்கட்டிக் கொண்டான். கால்களில் டயர் ஏறாமல் விலகி, நான்கைந்து வாகனங்களிடமிருந்து இலகுவாக ஒதுங்கி, நளாஸ் அருகே மேடேறி நின்றாள் அந்தச்சிறுமி. கீதா திரும்பிப் பார்த்த போது, அந்தச் சிறுமியின் கண்கள் மேலும் வறட்சி ததும்பியது.

தீபக்கின் கார், நூறடி ரோட்டில் திரும்பி, தலப்பாக்கட்டி தாண்டிக்கொண்டிருந்தது.

“சிக்னல்ல லாம் பொருள் வாங்காத கீதா”

“ஏன்”, உர்ரென்றாகியிருந்தாள்.

“குவாலிட்டிக்காக சொல்லல. பூராம் ஏமாத்து வேலை. வெளிய சூப்பர் மார்க்கெட்ல பத்து ரூபாய்க்கு விக்கிறத, இங்க கொண்டுவந்து அம்பது அறுபதுன்னு விக்கிறாங்க. என்னடா அம்பது ரூபாய்க்கு யோசிக்கிறானேன்னு பாக்காத. பகல்கொள்ளை. அதுவும் இந்த மாதிரி சின்னப்பொண்ணுங்க, பசங்களை வச்சு இப்டி வியாபாரம் பண்றது ஒரு டேக்டிக்ஸ். பாக்க பாவமா இருக்குன்னு பணம் குடுக்க யோசிக்க மாட்டோம் பாரு. ரெவின்யூ வையா சிம்பதி. ஐ நெவர் என்கரேஜ் திஸ். டோண்ட் டூ திஸ் அகெய்ன்..ப்ளீஸ்”

கீதாவுக்கு ஏனோ அந்தச் சிறுமியின் கண்கள் ஞாபகத்தைவிட்டு அகல மறுத்தன. காரை  ஹோட்டலின் முன் நிறுத்தி, எங்கே என்று சைகையில் தீபக் கேட்க,

“இங்கே உட்லா சார்”, என்று வெறும் கையில் கார் ஓட்டிக் காண்பித்து, ரோட்டோரமாய், கடையின் முன் குறுக்கே நிறுத்த வசதி செய்து குடுத்தான் அந்த செக்யூரிட்டி.

ஒரு மணி நேரத்தில் டின்னர் முடிந்து, வெளியே வந்து காரை ரிவர்ஸ் எடுக்கையில், பத்து ரூபாயை அந்த செக்யூரிட்டியின் கையில் திணித்து, ஒரு சல்யூட்டை வாங்கிக்கொண்டான் தீபக். ஹெச்.பி. பெட்ரோல் பங்க் அருகே யூ-டர்ன் அடித்து மீண்டும் விஜயநகர் சிக்னல் நோக்கி சென்றது வண்டி. ரெக்ஸ் நெருங்குகையில்,

“இந்த மாதிரி செக்யூரிட்டிக்கெல்லாம் அப்பப்ப வரும் போது காசு குடுத்து கரெக்ட் பண்ணிக்கனும். இல்லாட்டி பார்க்கிங்க்கு ஹெல்ப் பண்ணமாட்டான். அப்புறம் சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும், பயந்துட்டே இருக்கணும், போலீஸ் வந்து நோ பார்க்கிங்னு லாக் பண்ணிருமோன்னு. நம்ம ரோட்டுல வேற எது நோ பார்க்கிங்னு தெரியல இன்னும். ஆனா இருக்கிற பாதி கடைக்கு பார்க்கிங்கே ரோட்டு மேல தான். யூ ஹேவ் டு டூ சம் காம்ப்ரமைஸஸ்”. 

கிரக சஞ்சாரங்களின் பலனால், விஜய நகர் டிப்போ அருகே வந்தவுடன் கிரீன் சிக்னல் விழ, ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில் வண்டியை வலப்புறம் திருப்பினான்.  சரவணா ஸ்டோர்ஸில் பர்ச்சேஸ் முடித்த கையோடு, லாபக்கணக்கு போட்டுக்கொண்டு சில நூறு பேர் நின்று கொண்டிருந்தார்கள். டிராபிக்கில் கார் மெதுவாக ஊர்ந்து சென்றது.

“என்ன கீதா பேசவே மாட்ற..என்ன யோசனை?”

கீதா ரோட்டுக்கு அந்தப்பக்கம் மீடியனைத் தாண்டி அந்த சிறுமியைத் தேடிக்கொண்டிருந்தாள்.

“உன்னத்தான்…என்ன யோசனைன்னு கேட்டேன்”, தீபக்.

“ஒண்ணுமில்ல…நீ சொன்னததான் யோசிச்சிட்டு இருந்தேன்..”

“என்னது ?”

“அதான்….படிச்சவன்லாம் நல்லவனா இருக்கணும்னு அவசியமில்லை”

“ஹா..அதான் நான் சொன்னேன்” தோள்களைக் குலுக்கிக் கொண்டு, டிராபிக் விலகவும், வண்டியை நகர்த்தினான் தீபக்.

அடையார் ஆனந்தபவன் தாண்டும் போது, எதிர்ப்புறம் அந்தச் சிறுமியைப் பார்த்தாள் கீதா. ஒரு ஆட்டோக்காரரிடம் ஏதோ ஒரு புத்தகத்தை கொடுத்து பணம் வாங்கிக்கொண்டிருந்தாள். இன்னொரு 51பி ஒயிட் போர்டு, சில நூறு பேர்களோடு  இவர்களைத் கடந்து சென்றது. மெக்-டியின் அருகே, கேரி பேக்கில் மீன்களோடு சந்தோஷமாக ஓடிக்கொண்டிருந்தார்கள் சில சிறுவர்கள். எப்.எம்-மில் “மோஹேத்து ரங்கு தே பசந்தி” என்று தலர் மெஹந்தி பாடிக்கொண்டிருந்தார்.

Saturday, August 1, 2015

தண்ணீர் ...


இந்த வார்த்தையை சொன்ன உடனே நமக்கு ஞாபகம் வருவது, காவிரி !  கர்நாடகா தண்ணீர் தரவில்லை. அநியாயம், அக்கிரமம். நாங்கள் எப்படி விவசாயம் செய்வது, எங்கள் விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஒரு முடிவில்லையா, ஏன் மத்திய அரசு இதில் தலையிடவில்லை. தமிழகத்திற்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை. குறுவை சாகுபடி நேரத்தில் ஒவ்வொரு வருடமும் ஏன் இந்த போராட்டம் ? ஒவ்வொன்றாக பார்க்கலாம். நிறைய படிக்க பொறுமை இல்லாதவர்கள், பிடிக்காதவர்கள் இத்தோடு நிறுத்தி விடுவது நலம். கொஞ்சம் மொக்கையாக இருந்தாலும் பரவாயில்லை, ஏதாவது தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தால் மட்டும் தொடருங்கள்.

குறுவை என்றால் குறுகிய என்று பொருள். அதாவது குறுகிய காலத்தில், விளைவிக்கக் கூடிய நெல் வகை. ஜூன் ஜூலை (வைகாசி) மாதங்களில் குறுவை சாகுபடி செய்யப்படும். இதற்கு ஏதுவாக, காவிரி டெல்டா பகுதியின் வாழ்வாதாரமான காவிரி நீர், மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜீன் 12-ம் தேதி திறந்து விடப்படும். அணையிலிருந்து பாசனத்துகாக தண்ணீர் திறந்து விடுவதற்கு சில நிபந்தனைகள் உண்டு. அணையில் நீர் மட்டம் குறைந்தபட்சம் 80 அடியாவது இருக்க வேண்டும். தொடர்ந்து நாற்பது நாட்களுக்காவது அணைக்கு நீர் வரத்துக்கான வாய்ப்பு இருக்க வேண்டும். ஒரு வேளை குறைவாக இருக்கும் போது, தண்ணீரை திறந்துவிட்டால், தொடர் நீர் வரத்து இல்லாமல் போகும் பட்சத்தில் அணை வற்றிப் போகும் அபாயம் இருப்பதால், இந்த ஏற்பாடு. அளவு குறைவாக இருந்தால், அரசு, அணையில் இருந்து தண்ணீர் திறக்காது. விவசாயிகள் போராட்டம் நடக்கும். அரசுக்கும், விவசாயிகளுக்கும் பேச்சு வார்த்தை நடக்கும். தண்ணீர் திறந்து விட வாய்ப்பே இல்லாத பட்சத்தில், குறுவைக்கான நஷ்ட ஈடு விவசாயிகளுக்கு வழங்கப்படும் (!). இதுதான் நீங்கள் எப்போதும் நியூஸ் சேனல்களில், பேப்பர்களில் தலைப்புச் செய்தியாகப் படிப்பது.

ஏன் 80அடி தண்ணீர் மேட்டூரில் இருப்பதில்லை ? நியாயமான பங்கீட்டின்படி கர்நாடக அரசு தண்ணீரை தமிழகத்துக்கு கொடுத்தால், 80அடி, 90அடி வரை மேட்டூர் அணையில் இருப்பு வைப்பது சாத்தியம். ஆனால் அதற்கு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சரியாகப் பெய்ய வேண்டும். அப்படி என்றால் மழை பெய்யாவிட்டால் கர்நாடகா தண்ணீர் தராதா ? சரியான பங்கீடு வேண்டாமா ? என்பது நியாயமான கேள்வி. ஆனால் அதற்கு காவிரியில் இருந்து கர்நாடகா தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் தரவேண்டும் என்று முதலில் தெரிய வேண்டும். அளவு என்றவுடன், டி.எம்.சி, கன அடி என்று குழப்பாமல், சற்று லாஜிக்கலாக இந்த பிரச்சனையை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

ஆறு என்பது ஒரு இடத்தில் உருவாகி, பல ஊர்கள் வழியாக, நிலப்பரப்பினை வளமாக்கிச் சென்று, வேறொரு இடத்தில் கடலில் கலக்கும் (பெரிய ஏரியில் முடியும் சில ஆறுகளும் உண்டு). இந்த ஆரம்பமும் முடிவும் ஒரே ஆளுமையின் கீழ், ஒரு நாட்டின் உள்ளேயோ அல்லது ஒரு மாநிலத்தின் உள்ளேயோ இருந்து விட்டால், பிரச்சனையே இல்லை. நம் தாமிரபரணி போல். ஒரு வேளை, அந்த ஆற்றின் போக்கு, இரு நாடுகளுக்கு இடையிலோ, அல்லது இரு மாநிலங்களுக்கு இடையிலோ இருந்துவிட்டால் பிரச்சனைக்கு பஞ்சமில்லை. உனக்கு எனக்கு என்று அடித்துக் கொள்வார்கள். அதை வைத்து ஒரு உள்ளூர் அரசியல். உள்ளூர் அரசியலை வைத்து ஒரு வெளியூர் அரசியல் என்று மிகக் கோலாகலமாக இருக்கும்.

இது போன்ற பிரச்சனைகளை நியாயமான முறையில் தீர்ப்பதற்காக, “ரிப்பேரியன் ரூல்” என்னும் ஒரு விதியை பின்பற்றுவது உண்டு. இது உலக அளவில், சிறு சிறு மாற்றங்களோடு, பல நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விதி. அதன் சாராம்சம், ஒரு ஆற்றின் கரைகளில் இருக்கும் அனைவருக்கும், அந்தந்த நிலப்பரப்பில் இருக்கும் ஆற்றின் பகுதியில் சம உரிமை உண்டு. இரு மாநிலங்களுக்கிடையிலோ, நாடுகளுக்கிடையிலோ செல்லும் ஆற்றின் போக்கில், கீழே இருக்கும் (downstream) நிலப்பரப்புக்குதான் உரிமை அதிகம். அதற்கும் ஒரு நியாயமான காரணம் உண்டு. நாளை, அந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், அடித்துச்செல்லப்படும் வேகத்தில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ, கீழே இருக்கும் நிலப்பரப்புக்குதான் அதிகம் இருக்கும் என்பதால் அவர்களுக்கு உரிமை அதிகம். அதுபோல, எந்த மாநிலத்தில் அதிகதூரம் பாய்கிறதோ, அதற்கேற்றாற்போல நீரின் உபயோகமும் அதிகரிக்கும் என்பதால், அந்தப்பகுதிக்கு உரிமை அதிகம்.

தமிழகம்தான் காவிரியின் downstream-ல் இருக்கிறது. கர்நாடகாவைவிட காவிரி தமிழகத்தில்தான் அதிக தூரம் பாய்கிறது. இந்த இரு விதிகளின் அடிப்படையில், தமிழகத்திற்குதான் தண்ணீர் அதிகம் தரப்பட வேண்டும். ஒரு மாநிலத்தில் ஆற்றின் நீளத்தை கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு காரணம், அந்த அளவிற்கு ஆறு செல்லும் வழிகளில், விவசாயம் அதிகமாக இருக்கும் என்பதால்தான். இதனால்தான் ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வழங்கப்படுகிறது. ஆனால் அவர்கள் தீர்ப்புக்கு ஏற்ப தண்ணீர் திறந்துவிடுவதில்லை.

சொன்னபடி தண்ணீரைத் திறந்துவிடாமல் இருப்பது அநியாயம் இல்லையா என்று குதிக்காமல், ஏன் அவர்கள் தண்ணீர் தரவில்லை என்று யோசித்துப் பார்க்கவேண்டும். சும்மா தண்ணீரை சேர்த்து வைத்து அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் ? அவர்களுக்கும் விவசாயம் இருக்கிறது, அதை நம்பி லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரைத் தந்தால், அங்கிருக்கும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும், அந்த விவசாயிகள் கஷ்டப்படுவார்கள். அங்கிருக்கும் எதிர்க்கட்சிகள் அந்த ஆளுங்கட்சியை குறை சொல்லும், அடுத்த முறை  ஓட்டு கிடைக்காது. அவர்கள் பதவிக்கு வர முடியாது. நியாயம்தானே. அந்த இடத்தில் இருந்து யோசித்துப் பார்த்தால், நாமும் ஓட்டுப்போட மாட்டோம். இந்தியாவில் இருக்கும் எந்த அரசியல்வாதிக்கும் ஓட்டுதான் எல்லாம், அப்புறம்தான் மற்றவை என்கிற பட்சத்தில், எது நடக்குமோ, அது நடக்கிறது. அவர்களுக்கு தேவையான தண்ணீரை எடுத்துக்கொண்டு மீதி தமிழகத்திற்கு அனுப்பப்படுகிறது (வெள்ளம் வரும்போது மட்டும் உபரி நீரை திறந்து விடும் ஒரு வழக்கம் இருக்கிறது. அது இந்தக் கணக்கில் வராது) இது மேட்டுர் அணையில் வந்து சேரும் பொழுது, 80 அடி மட்டம் தாண்டாமல், டெல்டா பகுதிக்கு தண்ணீர் தரப்படுவதில்லை. விவசாயம் தடைப்படும். தமிழக் அரசு விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு தரவேண்டும், நமது பட்ஜெட்டில் துண்டு விழும்.இதை வைத்து இங்குள்ள எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யும், அதை வைத்து கூட்டணியில் உள்ள தேசிய கட்சிகள் குளிர் காயும். இது நமது பாரம்பரியம்.

அங்கிருக்கும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் போதாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, பருவமழை சரியாகப் பெய்யாமல் இருப்பது. இதற்கு நாம் உடனடியாக ஒன்றும் செய்ய முடியாது. இரண்டு, அனுமதிக்கப்பட்ட அளவை விட, விவசாய நிலப்பரப்பு அதிகளவில் இருப்பது. தமிழகத்தில் தான் அதிக அளவு விவசாய நிலப்பரப்பு இருக்க வேண்டும். இப்போதும் நம்மிடம்தான் அதிகம் இருக்கிறது. ஆனால அங்கே, அது இருக்க வேண்டிய அளவை விட சற்று அதிகமாக இருக்கிறது. இது அங்கே முதலில் விதிப்படி இருந்திருந்தாலும், காலப்போக்கில் உள்ளூர் அரசியலுக்கு ஏற்றாற்போல் மாறியிருக்கும். அந்த விவசாயிகளிடம் போய், நீங்கள் விவசாயம் செய்வது தவறு,  நாங்கள்தான் அதிக பரப்பில் விவசாயம் செய்ய வேண்டும், அனுமதிக்கப்பட்ட நிலப்பரப்பை தாண்டி விட்டீர்கள் என்று சொல்ல முடியுமா ? எத்திக்கலி ராங். நம் விவசாயிகளைப் போல் அவர்களும் உழைப்பவர்கள் தானே. விவசாயம்தான் செய்கிறார்கள். தப்பான காரியமொன்றும் இல்லையே. முன்பு இந்த பிரச்சனை இருந்தது இல்லையா என்று கேட்டால், தனித்தனி சிறு நாடுகளாக, ராஜதானிகளாக இருந்த பொழுது, எவ்வளவு சண்டை இருந்தாலும் , ஒரு தர்மம் இருந்தது, கொள்கை இருந்தது மொத்தப் பகுதியும் ஒரு ஆளுமையின் கீழ் இருந்த போது இருந்த நியாயம் இப்போது இல்லை. மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட பின்புதான் இவ்வளவு பிரச்சனை வந்திருக்க வேண்டும் என்பது என் அனுமானம்.

மத்திய அரசு என்ன செய்கிறது என்று கேட்கக்கூடாது, நம்மைப்போல் மாநிலக்கட்சிகள் ஆட்சி செய்யும் ஊரில்லை அது. தேசியக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்யும் இடம். அங்கிருக்கும் பலத்தையும் சிதைக்காமல், இங்கிருக்கும் சொற்ப ஓட்டுக்களையும் இழக்காமல் இருக்க, கபடி ஆடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.கட்சி வேறுபாடின்றி, இரு மாநில அரசியல்வாதிகளும் இதற்கு தீர்வு காண வேண்டும் என்று நினைத்திருந்தால், இது என்றைக்கோ முடிந்திருக்க வேண்டிய பிரச்சனை. ஆனால் தத்தம் கட்சி மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இழுத்தடிக்கிறார்கள். ஒரு தாய் மக்களாக, சகோதரர்களாக இருக்க வேண்டிய இரு மாநில மக்களும், சம்பந்தமில்லாமல் ஒருவரையொருவர் பழித்துக் கொண்டு சண்டையிட்டுக் கொள்கிறோம். அவ்வளவே !

இதைவிட முக்கியமான விஷயம் ஒன்றிருக்கிறது. கொடுக்க வேண்டிய தண்ணீரைக் கொடுத்துவிட்டால் மட்டும் நாம் கழட்டி விடுவோமா என்ன ? கூவம் என்ற நதியை குப்பையாக்கி பெருமை யாரைச் சேரும் ? பாலாறு என்ன ஆயிற்று ? நொய்யல் எப்படி சாயக்கழிவுகள் சேரும் சாக்கடையாய்ப் போனது ? இதெல்லாம் நமக்கு நாமே வெட்டிக்கொண்ட குழி இல்லையா ? மிக நிச்சயமாக, நம் பேரப்பிள்ளைகளின் சாபக்கேடுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். இந்த சாபக்கேட்டில், விருதுநகர், அருப்புக்கோட்டை, பரமக்குடி, இராம்நாடு பகுதியை சேர்ந்தவர்கள் பங்கு கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், ஒரு டம்ளர் தண்ணீர் கிடைத்தால், அதை குலசாமியாய் நினைத்து திருவிழா எடுக்கும் நிலையில்தான் நாங்கள் இருந்தோம், இருக்கிறோம் என்பது வரலாறு. 

திருநெல்வேலிக்காரர்கள் புண்ணியத்தில், தாமிரபரணி மட்டும்தான் சற்று உருப்படியாக இருக்கிறது என்று நினைக்கிறேன். வாழ்க !

சிந்து நதியில் இந்தியா அணை கட்டுவதை எதிர்த்து பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது என்று ஒரு செய்தி படித்ததாக ஞாபகம். அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.பி.கு : ரமணா போல் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் சொல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. கூகுளில் தேடினால், எது நியாயமான பங்கீடு , காவிரி டிரிப்யூனலின் பணி என்ன என்று புட்டு புட்டு வைக்கும். 

Thursday, July 30, 2015

டோல் கேட்

ரோட் டாக்ஸ் - வாகனம் வாங்கும் போது, நாம் அனைவரும் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரிகளில் ஒன்று. இதைக் கட்டாமல், நீங்கள் எந்த வாகனமும் வாங்க முடியாது. அந்த வண்டியை நீங்கள் மவுண்ட் ரோடில் ஓட்டினாலும் சரி, ரோடே இல்லாத மல்லாங்கிணறில் ஓட்டினாலும் சரி, வரி கட்டியே தீர வேண்டும். நீங்கள் வாங்கும் வாகனத்தின் விலைக்கேற்ப இதன் சதவிகிதம் மாறுபடும்.

சரி, எதற்காக ரோட் டாக்ஸ் கட்ட வேண்டும் ? உங்கள் வாகனத்தை, இந்த அரசாங்கம் உங்களுக்காக போட்டிருக்கும் ரோட்டில், நீங்கள் ஓட்டுவதற்காக ரோட் டாக்ஸ் கட்ட வேண்டும். அந்த வாகனத்தை வாங்குவதற்காக, அதன் தயாரிப்பு விலையில் இருந்து ஒரு 12% மதிப்புக்கூட்டப்பட்ட சேவை வரி கட்டியிருப்பீர்கள். அது வாங்குவதற்காக மட்டும். இந்த ரோட் டாக்ஸ், அந்த வாகனத்தை ஓட்டுவதற்காக. எந்த வருமானத்தை வைத்து இந்த வாகனத்தை வாங்கியிருக்கிறீர்களோ, அதற்கு தனியாக வருமான வரி கட்டியிருப்பீர்கள். அது இந்தக் கணக்கில் வராது. இது ஒரு அருமையான டிசைன்.ஏன் இப்டி என்று விளக்கும் அளவிற்கோ, இல்லை அதைப் புரிந்து கொள்ளும் அளவிற்கோ நமக்கு அறிவில்லாததால், அதை மன்மோகன்சிங்குகளுக்கும், ப.சிதம்பரங்களுக்கும் விட்டுவிடலாம்.

எங்கள் ஊரில் ரோடே இல்லை, நானெதற்கு ரோட் டாக்ஸ் கட்ட வேண்டும் என்று நீங்கள் கேட்கக்கூடாது. ஏனென்றால் நீங்கள் கட்டும் ரோட் டாக்ஸ், அந்த வாகனத்தின் முழு ஆயுளுக்கும் சேர்த்து, அதாவது அது காயலான் கடைக்கு செல்லும் வரையோ, இல்லை ஏதெனும் ஒரு காம்பவுண்டின் மூலையில் கேட்பாரற்று அனாதையாக துருப்பிடித்து உதிரும் வரையோ பொருந்தும். இந்த காலகட்டத்துக்குள், நீங்கள் அந்த வண்டியை , ஒரு நாள் ரோடு இருக்கும் ஒரு ஊருக்கு ஓட்டிச் செல்லலாம்.இல்லை, உங்கள் ஊருக்கே நாளை நல்ல ரோடு வரலாம். அப்போது வந்து உங்களிடம் அதை வசூலிக்க முடியாதல்லவா.அதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் வாகனம் வாங்கும் போதே, வரி கட்ட வேண்டுமென்று சட்டம் இருக்கிறது. 

இது புரிகிறதோ இல்லையோ, நாம் இதற்கு பழக்கப்பட்டு விட்டோம். புரியாத விஷயம் என்னவென்றால், இவ்வளவு பணம் நம்மிடம் இருந்து வாங்கப்பட்ட பின்பும், எதற்காக “டோல் கேட்”டில் பணம் கட்டுகிறோம் என்பதுதான். ரோட்டில் வாகனம் ஓட்டுவதற்காகத்தான் ரோட் டாக்ஸ் என்றால், தனியாக டோல் ரோடு எதற்கு, அதற்கு தனியாக கட்டணம் எதற்கு ? அதாவது, நாம் ஹோட்டலுக்கு போகிறோம், சாப்பிடுகிறோம், அதற்கு பில் வருகிறது, பணம் கொடுக்கிறோம். க்ளியர் ! பிரச்சனையில்லை. இப்படி வைத்துக் கொள்வோம், ஹோட்டலுக்கு போகிறீர்கள், சாப்பிடுகிறீர்கள், பில் வருகிறது. சாப்பாட்டுக்கு தனியாக, உட்கார்ந்திருக்கும் டேபிளுக்குத் தனியாக. இது சரியா ? கடுப்பாகி கேள்வி கேட்டால், “கட்டுப்படியாகல சார் ! நீங்க உட்காருவதற்குத்தானே டேபிள்,சேர் போட்டிருக்கிறோம், நின்னுகிட்டா சாப்பிடுவீங்க? “ என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் ?

கிட்டத்தட்ட அதேதான். நாம் செலுத்தும் ரோட் டாக்ஸ், அடிப்படையான ரோடுகள் போடுவதற்கு மட்டுமே. மல்டி-லேன் சாலைகளுக்கும், பெரிய நெடுஞ்சாலைகளுக்கும் இந்தப் பணம் போதாது என்பது ஒரு கணக்கு. அதை அரசாங்கமே நாம் செலுத்தும் பல்வேறு விதமான வரிகளில் இருந்து எடுத்து செய்யலாம் என்றாலும், அதற்கான நேரம், தரம், வேலை ஆட்கள் சார்ந்த பிரச்சினைகளை போன்றவற்றை சமாளிக்க, தனியாரிடம் ஒரு விதமான குத்தகைக்கு விடப்படுகிறது. அதாவது, ஒரு தனியார் நிறுவனம் தன்னிடம் உள்ள பணத்தை வைத்து, அரசாங்கம் கேட்பது போல், சாலைகள் அமைத்துத் தரும். அந்த சாலைக்கு செலவிட்ட பணம், அதற்கான வட்டி, இதையெல்லாம் கணக்கில் வைத்து, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, அந்த ரோட்டை பயன்படுத்தும் மக்களிடம் இருந்து பணம் வசூலிக்க, அரசு அந்த நிறுவனத்திற்கு அனுமதி தரும்.


சரி, என்ன அடிப்படையில் பணம் வசூலிக்கப்படுகிறது ? 1998ல் ஒரு கிலோமீட்டருக்கு நாற்பது பைசாவாக இருந்த இந்த கட்டணம், 2012ல் கிலோமீட்டருக்கு ஒரு ரூபாயை நெருக்கி இருக்கிறது. அடிப்படைக் கட்டணத்தை (பேஸ் டோல் சார்ஜ்) வைத்து ஒரு பார்முலாவின் மூலம் இந்த கட்டணம் நிர்ணயிக்கப் படுகிறது. அடிப்படைக் கட்டணத்தை அந்த வருமானவரி ஆண்டின், மொத்தவிலைக் குறியீட்டு எண் (wholesale price index)-ஆல் பெருக்கி, அதனை 1997-இன் மொத்தவிலைக்குறியீட்டு எண்ணால் வகுத்தால் வருவதே, ஒரு குறிப்பிட்ட தூரத்தின் டோல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த WPI என்பது பணவீக்கத்தோடு சம்பந்தபட்டது. அதனால் இதோடு நிறுத்திக் கொள்வோம்.அந்த அடிப்படைக் கட்டணம், சாலை அமைக்கும் இடம், அதன் தன்மை, அங்கே ஆகும் செலவு, நேரம் முதலீடு, அந்த சாலையை ஒப்பந்த காலத்துக்குள் பயனபடுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை போன்றவற்றை வைத்து நிர்ணயிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

ஒருவேளை அப்படி இருந்தால், என்றைக்கு நம் ஊரில் வாகனங்கள் கம்மியாகி இருக்கிறது ? நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். அதனால் டோல் கம்பெனிகளுக்கு லாபம்தான். குறிப்பிட்ட தொகையை வசூலித்துவிட்டால், ஒப்பந்த காலத்திற்கு பிறகு, பராமரிப்புக்காக வாங்கப்பட்ட டோல் கட்டணத்தில் நாற்பது சதவிகிதம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்பது விதி. எத்தனை டோல்களில் இது சரியான முறையில் நடக்கிறது என்பதை உங்கள் அனுமானத்திற்கு விட்டு விடுகிறேன்.

இரு டோல்களுக்கு இடையே குறைந்தபட்சம் அறுபது கிலோமீட்டராவது இருக்க வேண்டும் என்பது இன்னுமொரு விதி. ஒவ்வொரு டோலுக்கும் கட்டணம் மாறுவதற்கு காரணம், குறிப்பிட்ட சாலையில் இருக்கும் கட்டுமானங்கள், பாலங்கள் போன்றவை. பாலங்கள் அதிகமானால், சாலையின் அந்தப் பகுதிக்கான கட்டணம் அதிகமாக இருக்கும்.

இவ்வளவு விளக்கங்கள் இருந்தாலும், ஏன் சென்னை நகருக்குள் டோல் வந்தது என்பதற்கு நம்மிடம் இன்னும் பதில் இல்லை.நெடுஞ்சாலை இல்லை, அதிகபட்சம் இரண்டு லேன்கள்தான்.இருந்தும் டோல் வசூலிக்கப்படுகிறது. 19 ரூபாயில் இருந்து இன்று 22 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.  நம்மாட்கள் அதிலும் பணத்தை ஆட்டையப்போட வழி கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நீங்கள் ஓ.எம்.ஆர்-இல் இருந்து மேடவாக்கத்துக்கோ, பல்லாவரத்துக்கோ செல்லும் பொழுது, சோழிங்கநல்லூரிலோ, துரைப்பாக்கத்திலோ உள்ள எக்ஸிட்டில் பணம் கட்டுவீர்கள். அதற்குப் பிறகு உங்களுக்கு வேறு எங்கும் டோல் கிடையாது. பணம் கட்டியவுடன் தரும் ரசீதில் பாருங்கள். பெரும்பாலான நேரங்களில் உங்கள் வண்டி எண் இருக்காது. சில சமயங்களில், அவர்களே “பிரிண்டிங் மிஸ்டேக் சார்” என்று சொல்வார்கள். விசயம் இதுதான்.

ஏற்கனவே, பெருங்குடியிலோ, அந்தப்பக்கம் சோழிங்கநல்லூரிலோ டோல் எடுத்தவர்கள், இந்த இரண்டு எக்ஸிட்டுகளில் ரசீதை கொடுத்துவிட்டு, திரும்ப வாங்காமல் சென்று விடுவார்கள். நாம் சாலையை உபயோகித்துவிட்டு பணம் கட்டும் போது, யாரோ கொடுத்துச் சென்ற ரசீது, நமக்கு “பிரிண்டிங் மிஸ்டேக்”காக திரும்ப வரும். அந்த 22 ரூபாயை உயிரைக்குடுத்து வேலை செய்யும், கவுண்ட்டரில் இருக்கும் அந்த அறிவாளி எடுத்துக் கொள்வார். நாம் வாங்கிய ரசீதை பார்க்காமல, அவசரமாகக் கடந்து விடுவோம். அதையும் மீறி, “நம்பர் தப்பாருக்கு” என்று நீங்கள் சொன்னால், “பரவால்ல சார், ஒண்ணும் பிரச்சனையில்லை”, என்று ஏதோ நமக்கு அவர் சாதகமாக இருப்பது போல ஒரு பதில் வரும். “அந்த வெங்காயம் எனக்கு வேண்டாம், சரியான நம்பரை அடித்துக் கொடுங்கள்”, என்று காரில் இருந்து இறங்கிப் போய் சொன்னால், மறுபேச்சு பேசாமல், ரசீது வந்து சேரும். இது டெக்னிக் தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் பொருந்தும்.

ஏற்கனவே எதற்கு காசு தருகிறோம் என்று முழுதாகத் தெரியாமல், கேட்ட இடத்தில் எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.இதில் இந்த அறிவுஜீவிகள் வேறு, அதை நம்மிடம் இருந்து புடுங்கிக் கொள்ளப் பார்க்கிறார்கள். அடுத்த முறை ஏதேனும் நெடுஞ்சாலையிலோ, துரைப்பாக்கம் எக்ஸிட்டிலோ டோல் எடுத்தால், ஒரு நொடி நின்று ரசீதை பாருங்கள், அதில் என்ன இருக்கிறதென்பதாவது விளங்கும். 

இன்னும் பதில் தேடிக்கொண்டிருக்கிறேன், ரோட் டாக்ஸ் கட்டும் போது ஏன் தனியாக டோல் என்று ?

கலாம் !!

கலாம் அய்யா இறந்து விட்டார்.  தமிழ்நாடே அழுகிறது. எந்த தனிப்பட்ட உறவும் இல்லாமல் பலர் துக்கத்தில் இருக்கிறார்கள். கலாம் மீதான தங்கள் அன்பை ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த வகையில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வரலாற்று நாயகனின் சாவில் இருக்க வேண்டிய அனைத்து அடையாளங்களும் இருக்கின்றன.

ஆட்டோக்காரர் ஒருவர் கலாம் அய்யாவுக்காக , அவர் மறைந்த நாளன்று ஆட்டோ இலவசம் என்று எழுதியிருக்கிறார்.

என் உறவினர் ஒருவர், தன் மகள் இரண்டு நாட்களாக அழுது கொண்டிருக்கிறாள் என்று பதிவிட்டிருக்கிறார்.

தமிழக அரசு ஒரு படி மேலே சென்று, இராமேஸ்வரத்துக்கு செல்லும் பேருந்துகளில் பயணம் இலவசம் என்று அறிவித்து இருக்கிறது.

பிரதமர் மோடி இறுதி காரியங்களுக்காக டெல்லியிலிருந்து, எங்கோ தென்கோடியில் இருக்கும் பேக்கரும்பு கிராமம் வரை வந்திருக்கிறார்.

இதுவரை விஜயகாந்தை கேவலமாக கிண்டல் அடித்துக் கொண்டிருந்த பேஸ்புக் பெருமக்கள், இன்று கலாமின் உடல் அருகே அவர் அழுததைப் பார்த்து, ‘ச்சே’ நல்ல மனுசனப்பா என்று வருத்தப்படுகிறார்கள். இரண்டொரு நாட்களில், புது மீம் ஒன்று ஷேர் செய்யப்படும் வரை இது தொடரும்.

இன்று பொது விடுமுறையை முன்னிட்டு தியேட்டரில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

தமிழர்கள், பொதுவாகவே எளிதில் உணர்ச்சிவயப்படுபவர்கள். நம்மிடம் உள்ள எமோஷனல் கோஷண்ட் மிக மிக அதிகம். எத்தனையோ அரசியல்வியாதிகளுக்காக அநாவசியமாக உணர்ச்சிகளை அடமானம் வைத்திருக்கும் நாம், இந்த நல்ல மனிதருக்காக தாராளமாக அழலாம். அழுது அவரை சொந்தம் கொண்டாடிக் கொள்ளலாம், அவரது தியாகங்களுக்கான உரிமையை குத்தகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.  நல்ல தலைவர்களுக்கான க்ரனாலஜிக்கல் ஆர்டரில் காமராஜருக்கு பிறகு இவரை சேர்த்துக் கொண்டு , அடுத்த ஆள் வந்து மறைவதற்காக காத்திருக்கலாம்.

ஆனால், இந்த நேரத்தில் கண்டிப்பாக செய்யக்கூடாத விசயம் என்று ஒன்று இருக்கிறது.அதில் முதலாவது, அவரைப் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பது.

இறந்திருக்கும் ஒருவரைப் பற்றி தனிப்பட்ட விமர்சனங்களையோ, பொதுப்படையான விமர்சனங்களையோ முன்வைப்பது தவறு. எதையும் இனிமேல் மாற்ற முடியாது என்பது மட்டும் காரணமல்ல. நம்மிடம் இல்லாத ஒருவரைப் பற்றி தவறாகப் பேசுவது, நல்ல பண்பாடு கிடையாது. ஒருவரின் சாவிலும் கூட, வித்தியாசமான கருத்தியலால் தனக்கு விளம்பரம் தேடிக்கொள்ளும் ஆட்களை நம் தமிழ்நாடு பெற்றிருக்கிறது என்று நினைக்கும் போது, எனக்கு கழிவிரக்கம் தான் மிஞ்சுகிறது. இவர்களைத்தான் தமிழ்த் தேசிய அரசியலின் முன்னோடிகள் என்று நம்பிக் கொண்டிருக்கும் இளைஞர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. ஆனாலும் தன்னுடைய கருத்துக்களை தைரியமாக சொன்னதுக்காக அவரைப் பாராட்டித்தான் ஆக வேண்டும். இதை கலாம் உயிரோடு இருக்கும் போது அவர் சொல்லியிருந்தால், ஒருவேளை அவரது கருத்துக்கள் ஆராயப்பட்டிருக்கும். சரியா தவறா என்று தெரிந்திருக்கும். ஆனால். இப்போது இளவு வீட்டில் வந்து வியாக்யானம் பேசுவதில் என்ன பிரயோசனம் என்று எனக்கு விளங்கவில்லை. அவரது கருத்துக்கள் இந்த நேரத்தில், யார் கவனத்திற்கும் வராது என்பதுதான் முக்கியமான விஷயம்.

ஓட்டை விற்காத ரோசக்காரனாக, அடுத்தவரை ஏமாற்றிப் பிழைக்காத, திருடாத, தவறென்று என் மானங்கெட்ட மனசாட்சிக்குத் தெரிந்தால் திருத்திக்கொள்ளும் ஒரு சராசரி மனிதனாக இருந்து, நம் அரசியல்வாதிகளுக்கு சில விசயங்களை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

இதைப் போன்ற ஒரு வழியனுப்புதல், உங்களுக்கு கிடைக்கும் என்று கனவிலும் நினைக்க வேண்டாம். இது அவரது சாதனைகளுக்காகவோ, மக்களின் மனங்கவர்ந்த ஆட்சிக்காகவோ, பேச்சாற்றலுக்காகவோ, மேடை ஆளுமைக்காகவோ, எங்கள் காசில் இருந்து வரும் நலத்திட்டங்களை ஏதோ, தங்கள் வீட்டு அஞ்சரைப் பெட்டியில் இருந்து எடுத்து தருவதைப் போல் தோற்றத்தை உருவாக்கியதற்காகவோ கிடைத்தது அல்ல. அதற்கும் மேல்,

எத்தனை ஜென்மம் எடுத்தாலும், உங்களுக்கு வராத, உங்களால் முடியாத,  “எளிமை” என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்ததனால், எங்களுக்கு நெருக்கமானார், எங்கள் குடும்பங்களில் ஒருவரனார். "தமிழே, தாயே, தண்ணிவண்டியே" என்று எதுகை மோனையாக பேசாமல், "Instead of putting the satellite in the orbit, the rocket put the satellite into the bay of bengal" என்று வெள்ளந்தியாக, மிக எளிமையாக அவர் பேசியது எங்களுக்கு பிடித்திருந்தது.

“கனவு காணுங்கள்” என்று அவர் சொன்னதன் உண்மையான அர்த்தம் விளங்காவிட்டாலும், ஒரு தாரக மந்திரம் போல், அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, அதைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதே போல, “உடன்பிறப்பே”வும் “இரத்தத்தின் இரத்தமேவும்”, குறிப்பாக “ஆண்ட பரம்பரையும்” இருக்காது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நேரமிது. நீங்கள் இன்னும் மாறி மாறி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் காரணம், எங்கள் பிள்ளைகள், “ மா…முஜே சப்பாத்தி சாஹியே” என்று கேட்டுவிடக்கூடாது என்பதற்காக மட்டுமே. “ஹிந்தி போல்னா அச்சா ஹை” என்று நாங்கள் முடிவு செய்து விட்டால், நீங்கள் புரோட்டா கடையில் சால்னா பாக்கெட் போட வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அவர் மாணவர்களின் அன்பையும், இளைஞர்களின் அன்பையும் பெற்றிருந்தார். இறந்த உடலின் மேல் “அம்மா” என்று எழுதப்பட்ட மலர் வளையம் வைக்கும் உங்கள் பேரறிவுக்கு, அந்த உன்னதம் எட்டாது.

என் உடன்பிறப்பே, இரத்தத்தின் இரத்தமே, என் இனமே, என் உறவே, ஆண்ட பரம்பரையே,  நானூத்து சொச்சம் ஜாதிகளால் பிரிக்கப்பட்டிருக்கும் நாசமாய்ப் போன பெருங்குடும்பமே, அறுபது வருடமாக மாறி மாறி ஏமாந்து கொண்டிருக்கும் என் சக தமிழனே,

கலாம் சாவுக்காக கூடிய கூட்டத்தைப் பார்க்கையில் பெருமையாக இருக்கிறது. நிஜமாகவே சந்தோசமாக இருக்கிறது. ஆனால், இதே ஒற்றுமையை, இதே எழுச்சியை, இதே ஆர்வத்தை, நம் மக்களுக்கு இருந்த, இருக்கின்ற, பிரச்சனையின் போதும் காட்டியிருந்தால், எவ்வளவு மாற்றங்கள்  நடந்திருக்கும் தெரியுமா ? எங்கோ இருக்கின்ற கூடங்குளம் என்றுதானே அதைப் பற்றி நீங்கள் கவலைப்படவில்லை. எங்கோ இருக்கின்ற காவிரி டெல்டா என்றுதானே அதைப் பற்றி நீங்கள் சிந்திக்கவேயில்லை. நியூட்ரினோ, மீத்தேன் என்று இது போல எங்கோ இருந்த விசயங்களைப் பற்றி ஒரு பெரிய பட்டியலே போடலாம்.

தவறு, சரி என்பதற்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டாம். ஆனால், உங்கள் மாநிலத்தில், உங்கள் மொழி பேசும் ஒருவனின், பிரச்சனையை நீங்கள் புரிந்து கொண்டு அவனுக்கு ஆதரவாயிருந்தால், அவன் ஏன் போராளியாக, பிழைக்கத் தெரியாதவனாக, குற்றவாளியாக சித்தரிக்கப்படுகிறான். மங்கோலியாவிற்கு பத்தாயிரம் கோடி கொடுத்ததை பெருமையாக ஷேர் செய்யும் நமக்கு, கூடங்குளத்தில் ஏன் பிரச்சனை என்றோ, பக்கத்து மாநிலம் தண்ணீர் தராததன் நுண்ணரசியல் என்னவென்றோ அறிய விருப்பமில்லையா இல்லை அறிவில்லையா ? பத்து கோடி பேர் இருக்கும் தமிழ்நாட்டில் இருந்து , ஒரு பொதுப்பிரச்சினைக்காக , குறைந்த பட்சம் இரண்டு லட்சம் பேர் திரண்ட ஒரு நிகழ்வு நடந்திருக்கிறதா ?? அரசியல் மாநாடுகளில் மட்டுமே அந்தக் கூட்டத்தை நீங்கள் பார்க்க முடியும்.

உங்களை யாரும் ரோட்டில் இறங்கி, வெயிலில் காய்ந்து போராடச் சொல்லவில்லை. உலகம் இன்று இணையத்தால் சுருங்கிவிட்டது. உங்களது மேலான கருத்தை, எதிர்ப்பை பதிவு செய்தாலே போதும். சேர வேண்டிய இடத்தில் அது சேருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம். இரண்டு வாரங்களுக்கு முன், பத்து லட்சம் ஓட்டுகளுக்காக முக்கியது நினைவிருக்கிறதா ? பிச்சை எடுக்காத குறையாக உங்கள் நண்பர்கள் எத்தனை பேர் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்று பார்த்திருப்பீர்கள். இத்தனைக்கும் அதில் உங்கள் பெயரை மட்டும் பதிவு செய்தால் போதும். தொலைப்பேசி எண்ணோ, ஈமெயில் ஐ.டியோ கூட கேட்கவில்லை. நல்லது நடக்குமா, நடக்காதா என்பது அடுத்த விசயம். இதைச் செய்தால் இலங்கையில் நடந்த இன அழிப்புக்கு, நியாயம் கிடைக்கும் என்று உங்கள் நண்பன் சொன்னால், அதை நீங்கள் செய்திருக்க வேண்டாமா ? ஒரு ஷாப்பிங் மாலில், மெம்பர்ஷிப் கார்டுக்காகவோ, அதிர்ஷ்ட குலுக்கலுக்காகவோ உங்கள் தொலைப்பேசி எண், வீட்டு விலாசம், மனைவியின் பெயர் முதற்கொண்டு யாரிடமோ எழுதிக் கொடுப்பதில் இருந்த தைரியம், இங்கு உங்கள் பெயரை மட்டும் பதிவதில் இல்லையோ ?

இதை நீங்கள் உங்கள் உள் நாட்டுப் பிரச்சினைகளோடும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.உங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் மட்டுமே நடக்கும். குவார்ட்டரும், கோழி பிரியாணியும் போதுமென்று நீங்கள் இருந்துவிட்டால், அம்மா வந்தாலும், அய்யா வந்தாலும் இதே நிலைமை தான். உங்களுக்கு என்று நான் சொல்வதை, நீங்கள் உங்கள் மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள் என்று சுருக்கிக் கொள்ளாமல், எல்லாரையும் அந்த வட்டத்தில் இணைத்துக் கொண்டால் நலம். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். கட்சியாய், ஜாதியாய், மதமாய் பிரிந்து கிடக்கும் நீங்கள், மக்களாக ஒன்று கூடினால் மட்டுமே, உங்கள் பிள்ளைகள் , கூழைக்கும்பிடு போடாமல் தன்மானத்தோடு வாழ முடியும்.

கலாமின் இறுதிச் சடங்கிற்கு, கலைஞர் வரவில்லை, ஜெயலலிதா வரவில்லை ஆனால் மோடி வந்தார் என்று கூறி ஓட்டுக் கேட்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.