Thursday, July 30, 2015

கலாம் !!

கலாம் அய்யா இறந்து விட்டார்.  தமிழ்நாடே அழுகிறது. எந்த தனிப்பட்ட உறவும் இல்லாமல் பலர் துக்கத்தில் இருக்கிறார்கள். கலாம் மீதான தங்கள் அன்பை ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த வகையில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வரலாற்று நாயகனின் சாவில் இருக்க வேண்டிய அனைத்து அடையாளங்களும் இருக்கின்றன.

ஆட்டோக்காரர் ஒருவர் கலாம் அய்யாவுக்காக , அவர் மறைந்த நாளன்று ஆட்டோ இலவசம் என்று எழுதியிருக்கிறார்.

என் உறவினர் ஒருவர், தன் மகள் இரண்டு நாட்களாக அழுது கொண்டிருக்கிறாள் என்று பதிவிட்டிருக்கிறார்.

தமிழக அரசு ஒரு படி மேலே சென்று, இராமேஸ்வரத்துக்கு செல்லும் பேருந்துகளில் பயணம் இலவசம் என்று அறிவித்து இருக்கிறது.

பிரதமர் மோடி இறுதி காரியங்களுக்காக டெல்லியிலிருந்து, எங்கோ தென்கோடியில் இருக்கும் பேக்கரும்பு கிராமம் வரை வந்திருக்கிறார்.

இதுவரை விஜயகாந்தை கேவலமாக கிண்டல் அடித்துக் கொண்டிருந்த பேஸ்புக் பெருமக்கள், இன்று கலாமின் உடல் அருகே அவர் அழுததைப் பார்த்து, ‘ச்சே’ நல்ல மனுசனப்பா என்று வருத்தப்படுகிறார்கள். இரண்டொரு நாட்களில், புது மீம் ஒன்று ஷேர் செய்யப்படும் வரை இது தொடரும்.

இன்று பொது விடுமுறையை முன்னிட்டு தியேட்டரில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

தமிழர்கள், பொதுவாகவே எளிதில் உணர்ச்சிவயப்படுபவர்கள். நம்மிடம் உள்ள எமோஷனல் கோஷண்ட் மிக மிக அதிகம். எத்தனையோ அரசியல்வியாதிகளுக்காக அநாவசியமாக உணர்ச்சிகளை அடமானம் வைத்திருக்கும் நாம், இந்த நல்ல மனிதருக்காக தாராளமாக அழலாம். அழுது அவரை சொந்தம் கொண்டாடிக் கொள்ளலாம், அவரது தியாகங்களுக்கான உரிமையை குத்தகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.  நல்ல தலைவர்களுக்கான க்ரனாலஜிக்கல் ஆர்டரில் காமராஜருக்கு பிறகு இவரை சேர்த்துக் கொண்டு , அடுத்த ஆள் வந்து மறைவதற்காக காத்திருக்கலாம்.

ஆனால், இந்த நேரத்தில் கண்டிப்பாக செய்யக்கூடாத விசயம் என்று ஒன்று இருக்கிறது.அதில் முதலாவது, அவரைப் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பது.

இறந்திருக்கும் ஒருவரைப் பற்றி தனிப்பட்ட விமர்சனங்களையோ, பொதுப்படையான விமர்சனங்களையோ முன்வைப்பது தவறு. எதையும் இனிமேல் மாற்ற முடியாது என்பது மட்டும் காரணமல்ல. நம்மிடம் இல்லாத ஒருவரைப் பற்றி தவறாகப் பேசுவது, நல்ல பண்பாடு கிடையாது. ஒருவரின் சாவிலும் கூட, வித்தியாசமான கருத்தியலால் தனக்கு விளம்பரம் தேடிக்கொள்ளும் ஆட்களை நம் தமிழ்நாடு பெற்றிருக்கிறது என்று நினைக்கும் போது, எனக்கு கழிவிரக்கம் தான் மிஞ்சுகிறது. இவர்களைத்தான் தமிழ்த் தேசிய அரசியலின் முன்னோடிகள் என்று நம்பிக் கொண்டிருக்கும் இளைஞர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. ஆனாலும் தன்னுடைய கருத்துக்களை தைரியமாக சொன்னதுக்காக அவரைப் பாராட்டித்தான் ஆக வேண்டும். இதை கலாம் உயிரோடு இருக்கும் போது அவர் சொல்லியிருந்தால், ஒருவேளை அவரது கருத்துக்கள் ஆராயப்பட்டிருக்கும். சரியா தவறா என்று தெரிந்திருக்கும். ஆனால். இப்போது இளவு வீட்டில் வந்து வியாக்யானம் பேசுவதில் என்ன பிரயோசனம் என்று எனக்கு விளங்கவில்லை. அவரது கருத்துக்கள் இந்த நேரத்தில், யார் கவனத்திற்கும் வராது என்பதுதான் முக்கியமான விஷயம்.

ஓட்டை விற்காத ரோசக்காரனாக, அடுத்தவரை ஏமாற்றிப் பிழைக்காத, திருடாத, தவறென்று என் மானங்கெட்ட மனசாட்சிக்குத் தெரிந்தால் திருத்திக்கொள்ளும் ஒரு சராசரி மனிதனாக இருந்து, நம் அரசியல்வாதிகளுக்கு சில விசயங்களை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

இதைப் போன்ற ஒரு வழியனுப்புதல், உங்களுக்கு கிடைக்கும் என்று கனவிலும் நினைக்க வேண்டாம். இது அவரது சாதனைகளுக்காகவோ, மக்களின் மனங்கவர்ந்த ஆட்சிக்காகவோ, பேச்சாற்றலுக்காகவோ, மேடை ஆளுமைக்காகவோ, எங்கள் காசில் இருந்து வரும் நலத்திட்டங்களை ஏதோ, தங்கள் வீட்டு அஞ்சரைப் பெட்டியில் இருந்து எடுத்து தருவதைப் போல் தோற்றத்தை உருவாக்கியதற்காகவோ கிடைத்தது அல்ல. அதற்கும் மேல்,

எத்தனை ஜென்மம் எடுத்தாலும், உங்களுக்கு வராத, உங்களால் முடியாத,  “எளிமை” என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்ததனால், எங்களுக்கு நெருக்கமானார், எங்கள் குடும்பங்களில் ஒருவரனார். "தமிழே, தாயே, தண்ணிவண்டியே" என்று எதுகை மோனையாக பேசாமல், "Instead of putting the satellite in the orbit, the rocket put the satellite into the bay of bengal" என்று வெள்ளந்தியாக, மிக எளிமையாக அவர் பேசியது எங்களுக்கு பிடித்திருந்தது.

“கனவு காணுங்கள்” என்று அவர் சொன்னதன் உண்மையான அர்த்தம் விளங்காவிட்டாலும், ஒரு தாரக மந்திரம் போல், அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, அதைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதே போல, “உடன்பிறப்பே”வும் “இரத்தத்தின் இரத்தமேவும்”, குறிப்பாக “ஆண்ட பரம்பரையும்” இருக்காது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நேரமிது. நீங்கள் இன்னும் மாறி மாறி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் காரணம், எங்கள் பிள்ளைகள், “ மா…முஜே சப்பாத்தி சாஹியே” என்று கேட்டுவிடக்கூடாது என்பதற்காக மட்டுமே. “ஹிந்தி போல்னா அச்சா ஹை” என்று நாங்கள் முடிவு செய்து விட்டால், நீங்கள் புரோட்டா கடையில் சால்னா பாக்கெட் போட வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அவர் மாணவர்களின் அன்பையும், இளைஞர்களின் அன்பையும் பெற்றிருந்தார். இறந்த உடலின் மேல் “அம்மா” என்று எழுதப்பட்ட மலர் வளையம் வைக்கும் உங்கள் பேரறிவுக்கு, அந்த உன்னதம் எட்டாது.

என் உடன்பிறப்பே, இரத்தத்தின் இரத்தமே, என் இனமே, என் உறவே, ஆண்ட பரம்பரையே,  நானூத்து சொச்சம் ஜாதிகளால் பிரிக்கப்பட்டிருக்கும் நாசமாய்ப் போன பெருங்குடும்பமே, அறுபது வருடமாக மாறி மாறி ஏமாந்து கொண்டிருக்கும் என் சக தமிழனே,

கலாம் சாவுக்காக கூடிய கூட்டத்தைப் பார்க்கையில் பெருமையாக இருக்கிறது. நிஜமாகவே சந்தோசமாக இருக்கிறது. ஆனால், இதே ஒற்றுமையை, இதே எழுச்சியை, இதே ஆர்வத்தை, நம் மக்களுக்கு இருந்த, இருக்கின்ற, பிரச்சனையின் போதும் காட்டியிருந்தால், எவ்வளவு மாற்றங்கள்  நடந்திருக்கும் தெரியுமா ? எங்கோ இருக்கின்ற கூடங்குளம் என்றுதானே அதைப் பற்றி நீங்கள் கவலைப்படவில்லை. எங்கோ இருக்கின்ற காவிரி டெல்டா என்றுதானே அதைப் பற்றி நீங்கள் சிந்திக்கவேயில்லை. நியூட்ரினோ, மீத்தேன் என்று இது போல எங்கோ இருந்த விசயங்களைப் பற்றி ஒரு பெரிய பட்டியலே போடலாம்.

தவறு, சரி என்பதற்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டாம். ஆனால், உங்கள் மாநிலத்தில், உங்கள் மொழி பேசும் ஒருவனின், பிரச்சனையை நீங்கள் புரிந்து கொண்டு அவனுக்கு ஆதரவாயிருந்தால், அவன் ஏன் போராளியாக, பிழைக்கத் தெரியாதவனாக, குற்றவாளியாக சித்தரிக்கப்படுகிறான். மங்கோலியாவிற்கு பத்தாயிரம் கோடி கொடுத்ததை பெருமையாக ஷேர் செய்யும் நமக்கு, கூடங்குளத்தில் ஏன் பிரச்சனை என்றோ, பக்கத்து மாநிலம் தண்ணீர் தராததன் நுண்ணரசியல் என்னவென்றோ அறிய விருப்பமில்லையா இல்லை அறிவில்லையா ? பத்து கோடி பேர் இருக்கும் தமிழ்நாட்டில் இருந்து , ஒரு பொதுப்பிரச்சினைக்காக , குறைந்த பட்சம் இரண்டு லட்சம் பேர் திரண்ட ஒரு நிகழ்வு நடந்திருக்கிறதா ?? அரசியல் மாநாடுகளில் மட்டுமே அந்தக் கூட்டத்தை நீங்கள் பார்க்க முடியும்.

உங்களை யாரும் ரோட்டில் இறங்கி, வெயிலில் காய்ந்து போராடச் சொல்லவில்லை. உலகம் இன்று இணையத்தால் சுருங்கிவிட்டது. உங்களது மேலான கருத்தை, எதிர்ப்பை பதிவு செய்தாலே போதும். சேர வேண்டிய இடத்தில் அது சேருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம். இரண்டு வாரங்களுக்கு முன், பத்து லட்சம் ஓட்டுகளுக்காக முக்கியது நினைவிருக்கிறதா ? பிச்சை எடுக்காத குறையாக உங்கள் நண்பர்கள் எத்தனை பேர் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்று பார்த்திருப்பீர்கள். இத்தனைக்கும் அதில் உங்கள் பெயரை மட்டும் பதிவு செய்தால் போதும். தொலைப்பேசி எண்ணோ, ஈமெயில் ஐ.டியோ கூட கேட்கவில்லை. நல்லது நடக்குமா, நடக்காதா என்பது அடுத்த விசயம். இதைச் செய்தால் இலங்கையில் நடந்த இன அழிப்புக்கு, நியாயம் கிடைக்கும் என்று உங்கள் நண்பன் சொன்னால், அதை நீங்கள் செய்திருக்க வேண்டாமா ? ஒரு ஷாப்பிங் மாலில், மெம்பர்ஷிப் கார்டுக்காகவோ, அதிர்ஷ்ட குலுக்கலுக்காகவோ உங்கள் தொலைப்பேசி எண், வீட்டு விலாசம், மனைவியின் பெயர் முதற்கொண்டு யாரிடமோ எழுதிக் கொடுப்பதில் இருந்த தைரியம், இங்கு உங்கள் பெயரை மட்டும் பதிவதில் இல்லையோ ?

இதை நீங்கள் உங்கள் உள் நாட்டுப் பிரச்சினைகளோடும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.உங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் மட்டுமே நடக்கும். குவார்ட்டரும், கோழி பிரியாணியும் போதுமென்று நீங்கள் இருந்துவிட்டால், அம்மா வந்தாலும், அய்யா வந்தாலும் இதே நிலைமை தான். உங்களுக்கு என்று நான் சொல்வதை, நீங்கள் உங்கள் மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள் என்று சுருக்கிக் கொள்ளாமல், எல்லாரையும் அந்த வட்டத்தில் இணைத்துக் கொண்டால் நலம். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். கட்சியாய், ஜாதியாய், மதமாய் பிரிந்து கிடக்கும் நீங்கள், மக்களாக ஒன்று கூடினால் மட்டுமே, உங்கள் பிள்ளைகள் , கூழைக்கும்பிடு போடாமல் தன்மானத்தோடு வாழ முடியும்.

கலாமின் இறுதிச் சடங்கிற்கு, கலைஞர் வரவில்லை, ஜெயலலிதா வரவில்லை ஆனால் மோடி வந்தார் என்று கூறி ஓட்டுக் கேட்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

No comments: