Saturday, August 1, 2015

தண்ணீர் ...


இந்த வார்த்தையை சொன்ன உடனே நமக்கு ஞாபகம் வருவது, காவிரி !  கர்நாடகா தண்ணீர் தரவில்லை. அநியாயம், அக்கிரமம். நாங்கள் எப்படி விவசாயம் செய்வது, எங்கள் விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஒரு முடிவில்லையா, ஏன் மத்திய அரசு இதில் தலையிடவில்லை. தமிழகத்திற்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை. குறுவை சாகுபடி நேரத்தில் ஒவ்வொரு வருடமும் ஏன் இந்த போராட்டம் ? ஒவ்வொன்றாக பார்க்கலாம். நிறைய படிக்க பொறுமை இல்லாதவர்கள், பிடிக்காதவர்கள் இத்தோடு நிறுத்தி விடுவது நலம். கொஞ்சம் மொக்கையாக இருந்தாலும் பரவாயில்லை, ஏதாவது தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தால் மட்டும் தொடருங்கள்.

குறுவை என்றால் குறுகிய என்று பொருள். அதாவது குறுகிய காலத்தில், விளைவிக்கக் கூடிய நெல் வகை. ஜூன் ஜூலை (வைகாசி) மாதங்களில் குறுவை சாகுபடி செய்யப்படும். இதற்கு ஏதுவாக, காவிரி டெல்டா பகுதியின் வாழ்வாதாரமான காவிரி நீர், மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜீன் 12-ம் தேதி திறந்து விடப்படும். அணையிலிருந்து பாசனத்துகாக தண்ணீர் திறந்து விடுவதற்கு சில நிபந்தனைகள் உண்டு. அணையில் நீர் மட்டம் குறைந்தபட்சம் 80 அடியாவது இருக்க வேண்டும். தொடர்ந்து நாற்பது நாட்களுக்காவது அணைக்கு நீர் வரத்துக்கான வாய்ப்பு இருக்க வேண்டும். ஒரு வேளை குறைவாக இருக்கும் போது, தண்ணீரை திறந்துவிட்டால், தொடர் நீர் வரத்து இல்லாமல் போகும் பட்சத்தில் அணை வற்றிப் போகும் அபாயம் இருப்பதால், இந்த ஏற்பாடு. அளவு குறைவாக இருந்தால், அரசு, அணையில் இருந்து தண்ணீர் திறக்காது. விவசாயிகள் போராட்டம் நடக்கும். அரசுக்கும், விவசாயிகளுக்கும் பேச்சு வார்த்தை நடக்கும். தண்ணீர் திறந்து விட வாய்ப்பே இல்லாத பட்சத்தில், குறுவைக்கான நஷ்ட ஈடு விவசாயிகளுக்கு வழங்கப்படும் (!). இதுதான் நீங்கள் எப்போதும் நியூஸ் சேனல்களில், பேப்பர்களில் தலைப்புச் செய்தியாகப் படிப்பது.

ஏன் 80அடி தண்ணீர் மேட்டூரில் இருப்பதில்லை ? நியாயமான பங்கீட்டின்படி கர்நாடக அரசு தண்ணீரை தமிழகத்துக்கு கொடுத்தால், 80அடி, 90அடி வரை மேட்டூர் அணையில் இருப்பு வைப்பது சாத்தியம். ஆனால் அதற்கு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சரியாகப் பெய்ய வேண்டும். அப்படி என்றால் மழை பெய்யாவிட்டால் கர்நாடகா தண்ணீர் தராதா ? சரியான பங்கீடு வேண்டாமா ? என்பது நியாயமான கேள்வி. ஆனால் அதற்கு காவிரியில் இருந்து கர்நாடகா தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் தரவேண்டும் என்று முதலில் தெரிய வேண்டும். அளவு என்றவுடன், டி.எம்.சி, கன அடி என்று குழப்பாமல், சற்று லாஜிக்கலாக இந்த பிரச்சனையை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

ஆறு என்பது ஒரு இடத்தில் உருவாகி, பல ஊர்கள் வழியாக, நிலப்பரப்பினை வளமாக்கிச் சென்று, வேறொரு இடத்தில் கடலில் கலக்கும் (பெரிய ஏரியில் முடியும் சில ஆறுகளும் உண்டு). இந்த ஆரம்பமும் முடிவும் ஒரே ஆளுமையின் கீழ், ஒரு நாட்டின் உள்ளேயோ அல்லது ஒரு மாநிலத்தின் உள்ளேயோ இருந்து விட்டால், பிரச்சனையே இல்லை. நம் தாமிரபரணி போல். ஒரு வேளை, அந்த ஆற்றின் போக்கு, இரு நாடுகளுக்கு இடையிலோ, அல்லது இரு மாநிலங்களுக்கு இடையிலோ இருந்துவிட்டால் பிரச்சனைக்கு பஞ்சமில்லை. உனக்கு எனக்கு என்று அடித்துக் கொள்வார்கள். அதை வைத்து ஒரு உள்ளூர் அரசியல். உள்ளூர் அரசியலை வைத்து ஒரு வெளியூர் அரசியல் என்று மிகக் கோலாகலமாக இருக்கும்.

இது போன்ற பிரச்சனைகளை நியாயமான முறையில் தீர்ப்பதற்காக, “ரிப்பேரியன் ரூல்” என்னும் ஒரு விதியை பின்பற்றுவது உண்டு. இது உலக அளவில், சிறு சிறு மாற்றங்களோடு, பல நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விதி. அதன் சாராம்சம், ஒரு ஆற்றின் கரைகளில் இருக்கும் அனைவருக்கும், அந்தந்த நிலப்பரப்பில் இருக்கும் ஆற்றின் பகுதியில் சம உரிமை உண்டு. இரு மாநிலங்களுக்கிடையிலோ, நாடுகளுக்கிடையிலோ செல்லும் ஆற்றின் போக்கில், கீழே இருக்கும் (downstream) நிலப்பரப்புக்குதான் உரிமை அதிகம். அதற்கும் ஒரு நியாயமான காரணம் உண்டு. நாளை, அந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், அடித்துச்செல்லப்படும் வேகத்தில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ, கீழே இருக்கும் நிலப்பரப்புக்குதான் அதிகம் இருக்கும் என்பதால் அவர்களுக்கு உரிமை அதிகம். அதுபோல, எந்த மாநிலத்தில் அதிகதூரம் பாய்கிறதோ, அதற்கேற்றாற்போல நீரின் உபயோகமும் அதிகரிக்கும் என்பதால், அந்தப்பகுதிக்கு உரிமை அதிகம்.

தமிழகம்தான் காவிரியின் downstream-ல் இருக்கிறது. கர்நாடகாவைவிட காவிரி தமிழகத்தில்தான் அதிக தூரம் பாய்கிறது. இந்த இரு விதிகளின் அடிப்படையில், தமிழகத்திற்குதான் தண்ணீர் அதிகம் தரப்பட வேண்டும். ஒரு மாநிலத்தில் ஆற்றின் நீளத்தை கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு காரணம், அந்த அளவிற்கு ஆறு செல்லும் வழிகளில், விவசாயம் அதிகமாக இருக்கும் என்பதால்தான். இதனால்தான் ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வழங்கப்படுகிறது. ஆனால் அவர்கள் தீர்ப்புக்கு ஏற்ப தண்ணீர் திறந்துவிடுவதில்லை.

சொன்னபடி தண்ணீரைத் திறந்துவிடாமல் இருப்பது அநியாயம் இல்லையா என்று குதிக்காமல், ஏன் அவர்கள் தண்ணீர் தரவில்லை என்று யோசித்துப் பார்க்கவேண்டும். சும்மா தண்ணீரை சேர்த்து வைத்து அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் ? அவர்களுக்கும் விவசாயம் இருக்கிறது, அதை நம்பி லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரைத் தந்தால், அங்கிருக்கும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும், அந்த விவசாயிகள் கஷ்டப்படுவார்கள். அங்கிருக்கும் எதிர்க்கட்சிகள் அந்த ஆளுங்கட்சியை குறை சொல்லும், அடுத்த முறை  ஓட்டு கிடைக்காது. அவர்கள் பதவிக்கு வர முடியாது. நியாயம்தானே. அந்த இடத்தில் இருந்து யோசித்துப் பார்த்தால், நாமும் ஓட்டுப்போட மாட்டோம். இந்தியாவில் இருக்கும் எந்த அரசியல்வாதிக்கும் ஓட்டுதான் எல்லாம், அப்புறம்தான் மற்றவை என்கிற பட்சத்தில், எது நடக்குமோ, அது நடக்கிறது. அவர்களுக்கு தேவையான தண்ணீரை எடுத்துக்கொண்டு மீதி தமிழகத்திற்கு அனுப்பப்படுகிறது (வெள்ளம் வரும்போது மட்டும் உபரி நீரை திறந்து விடும் ஒரு வழக்கம் இருக்கிறது. அது இந்தக் கணக்கில் வராது) இது மேட்டுர் அணையில் வந்து சேரும் பொழுது, 80 அடி மட்டம் தாண்டாமல், டெல்டா பகுதிக்கு தண்ணீர் தரப்படுவதில்லை. விவசாயம் தடைப்படும். தமிழக் அரசு விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு தரவேண்டும், நமது பட்ஜெட்டில் துண்டு விழும்.இதை வைத்து இங்குள்ள எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யும், அதை வைத்து கூட்டணியில் உள்ள தேசிய கட்சிகள் குளிர் காயும். இது நமது பாரம்பரியம்.

அங்கிருக்கும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் போதாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, பருவமழை சரியாகப் பெய்யாமல் இருப்பது. இதற்கு நாம் உடனடியாக ஒன்றும் செய்ய முடியாது. இரண்டு, அனுமதிக்கப்பட்ட அளவை விட, விவசாய நிலப்பரப்பு அதிகளவில் இருப்பது. தமிழகத்தில் தான் அதிக அளவு விவசாய நிலப்பரப்பு இருக்க வேண்டும். இப்போதும் நம்மிடம்தான் அதிகம் இருக்கிறது. ஆனால அங்கே, அது இருக்க வேண்டிய அளவை விட சற்று அதிகமாக இருக்கிறது. இது அங்கே முதலில் விதிப்படி இருந்திருந்தாலும், காலப்போக்கில் உள்ளூர் அரசியலுக்கு ஏற்றாற்போல் மாறியிருக்கும். அந்த விவசாயிகளிடம் போய், நீங்கள் விவசாயம் செய்வது தவறு,  நாங்கள்தான் அதிக பரப்பில் விவசாயம் செய்ய வேண்டும், அனுமதிக்கப்பட்ட நிலப்பரப்பை தாண்டி விட்டீர்கள் என்று சொல்ல முடியுமா ? எத்திக்கலி ராங். நம் விவசாயிகளைப் போல் அவர்களும் உழைப்பவர்கள் தானே. விவசாயம்தான் செய்கிறார்கள். தப்பான காரியமொன்றும் இல்லையே. முன்பு இந்த பிரச்சனை இருந்தது இல்லையா என்று கேட்டால், தனித்தனி சிறு நாடுகளாக, ராஜதானிகளாக இருந்த பொழுது, எவ்வளவு சண்டை இருந்தாலும் , ஒரு தர்மம் இருந்தது, கொள்கை இருந்தது மொத்தப் பகுதியும் ஒரு ஆளுமையின் கீழ் இருந்த போது இருந்த நியாயம் இப்போது இல்லை. மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட பின்புதான் இவ்வளவு பிரச்சனை வந்திருக்க வேண்டும் என்பது என் அனுமானம்.

மத்திய அரசு என்ன செய்கிறது என்று கேட்கக்கூடாது, நம்மைப்போல் மாநிலக்கட்சிகள் ஆட்சி செய்யும் ஊரில்லை அது. தேசியக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்யும் இடம். அங்கிருக்கும் பலத்தையும் சிதைக்காமல், இங்கிருக்கும் சொற்ப ஓட்டுக்களையும் இழக்காமல் இருக்க, கபடி ஆடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.கட்சி வேறுபாடின்றி, இரு மாநில அரசியல்வாதிகளும் இதற்கு தீர்வு காண வேண்டும் என்று நினைத்திருந்தால், இது என்றைக்கோ முடிந்திருக்க வேண்டிய பிரச்சனை. ஆனால் தத்தம் கட்சி மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இழுத்தடிக்கிறார்கள். ஒரு தாய் மக்களாக, சகோதரர்களாக இருக்க வேண்டிய இரு மாநில மக்களும், சம்பந்தமில்லாமல் ஒருவரையொருவர் பழித்துக் கொண்டு சண்டையிட்டுக் கொள்கிறோம். அவ்வளவே !

இதைவிட முக்கியமான விஷயம் ஒன்றிருக்கிறது. கொடுக்க வேண்டிய தண்ணீரைக் கொடுத்துவிட்டால் மட்டும் நாம் கழட்டி விடுவோமா என்ன ? கூவம் என்ற நதியை குப்பையாக்கி பெருமை யாரைச் சேரும் ? பாலாறு என்ன ஆயிற்று ? நொய்யல் எப்படி சாயக்கழிவுகள் சேரும் சாக்கடையாய்ப் போனது ? இதெல்லாம் நமக்கு நாமே வெட்டிக்கொண்ட குழி இல்லையா ? மிக நிச்சயமாக, நம் பேரப்பிள்ளைகளின் சாபக்கேடுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். இந்த சாபக்கேட்டில், விருதுநகர், அருப்புக்கோட்டை, பரமக்குடி, இராம்நாடு பகுதியை சேர்ந்தவர்கள் பங்கு கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், ஒரு டம்ளர் தண்ணீர் கிடைத்தால், அதை குலசாமியாய் நினைத்து திருவிழா எடுக்கும் நிலையில்தான் நாங்கள் இருந்தோம், இருக்கிறோம் என்பது வரலாறு. 

திருநெல்வேலிக்காரர்கள் புண்ணியத்தில், தாமிரபரணி மட்டும்தான் சற்று உருப்படியாக இருக்கிறது என்று நினைக்கிறேன். வாழ்க !

சிந்து நதியில் இந்தியா அணை கட்டுவதை எதிர்த்து பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது என்று ஒரு செய்தி படித்ததாக ஞாபகம். அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.பி.கு : ரமணா போல் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் சொல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. கூகுளில் தேடினால், எது நியாயமான பங்கீடு , காவிரி டிரிப்யூனலின் பணி என்ன என்று புட்டு புட்டு வைக்கும். 

No comments: