Saturday, November 28, 2015

சோஷலிஸக் கண்ணாடிசோஷலிஸக் கண்ணாடி

இரயில்வே ஸ்டேஷன் பாலத்தில் இருந்து வண்டிகள் மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தன. கார்கள், பஸ்கள், இடையில் புகும் ஆட்டோக்கள், அரை அங்குல இடைவெளியில் நுழைய முற்படும் பைக்குகள். பத்து நிமிடத்திற்கு முன் ஆரம்பித்த மழை, நசநசத்துக் கொண்டிருந்தது. இன்னும் விஜயநகர் சிக்னலுக்கு நிறைய தூரம் இருந்தது. சிக்னல் வரை சீரியல் லைட்டுகள் போல, மஞ்சள் சிவப்பு கலவையில் வண்டிகள் நெரிசலாக சிக்கிக் கிடந்தன. எப்.எம்-மில் “தில் ஹை ஹிந்துஸ்தானி” என்று உதித் நாராயண் பாடி முடித்தவுடன், ரத்னா ஸ்டோர்ஸின் ஏசி தள்ளுபடி விற்பனை பற்றி ஒரு மாமியும், மாமாவும் மயிலாப்பூர் தமிழில் சிலாகித்துக் கொண்டிருந்தார்கள்.

“வேளச்சேரிக்கு விடிவே கிடையாது போல. நாளாக நாளாக டிராபிக் கூடிக்கிட்டே தான் போகுது”, சேனல் மாற்றி வால்யூமை குறைத்தான் தீபக்.

மொபலை நோண்டிக் கொண்டிருந்த கீதாவிடம் இருந்து பதில் வராததால். காரின் வைப்பரை, குறைந்தபட்ச வேகத்திற்கு செட் செய்து விட்டு வேடிக்கை ஸ்டியரிங்கின் மேல் நாடியை வைத்து வேடிக்கை பார்க்கலனான்.

ஜன்னல் வழியாக வெண்மையாக படர ஆரம்பித்து, சட்டென்று நெடியேற, கீதா விருட்டென்று திரும்பினாள். இடப்புறம் இரண்டு இஞ்ச் இடைவெளியில் நின்று கொண்டிருந்த இண்டிகாவின் டிரைவர் சீட்டிலுருந்து, நுரையீரலின் அடிவரை சிகரெட்டை இழுத்து புகையை கக்கிக் கொண்டிருந்தான் ஒருவன். தீபக் கண்ணாடியை ஏற்றவும், புகை தடைபட்டு, அவனிடமே திரும்பியது. அனாயசமாக கலைத்துவிட்டு, அடுத்த இழுவைக்கு செருமிக்கொண்டான். கிளட்சை ரிலீஸ் செய்து, முன்னால் இருந்து வண்டியின் நம்பர் பிளேட் வரை வண்டியை ஒட்டினான் தீபக்.

"தலைய வலிக்குது”, என்றபடி தண்னீர் பாட்டிலை தேடினாள் கீதா.

“காபி சாப்டு போலாமா”

“வேணாம் ஆல்ரெடி லேட். அங்க எப்டியும் காபி வச்சிருப்பாங்க. போயி குடிச்சிக்கலாம்”

“இன்னிக்கு போன மாதிரிதான். சீக்கிரமே கிளம்பிருக்கலாம். என்னைக்கு சிக்னல் தாண்டி, 100 பீட் ரோடு தாண்டி ஹோட்டலுக்குப் போக ?”

“நான் பைக்ல போலாம்னு சொன்னேன்.. நீதான் வேணாம்ன”, கீதா.

“எதுக்கு ? நீ ஏற்கனவே சரத் கூட பைக்ல போயி, அவன் பிரேக் அடிச்சதுக்கு அந்தத் திட்டு திட்டுன..நான் அதுக்கு ரெடியா இல்லம்மா”, கைகூப்பினான்.

 உதட்டுக்குத் தெரியாமல் சிரித்துக்கொண்டாள்.

“ஒரு வயசுக் குழந்தைக்கு இவ்ளோ செலவழிச்சு பர்த்டே பார்ட்டி வைக்கணுமா. அதுவும் வேளச்சேரில, வெள்ளைக்கிழமை அன்னைக்கு”

“அவுங்க குழந்தை…அவுங்க வைக்கிறாங்க.உனகென்ன வந்துச்சு. நாளைக்கு உனக்கு குழந்தை பிறந்தா நீயும் இப்டிதான் செலவழிப்ப”, கீதா.

“ வாய்ப்பே இல்ல...இதுக்கு ஆகுற செலவை, நான் எதாது அனாதை ஆசிரமத்துக்கு குடுத்துருவேன்..புண்ணியமாது கிடைக்கும். இதுக்கு போகவே பிடிக்கல, ஏதோ நம்ம மேனேஜர்ங்கிறதால போக வேண்டியது இருக்கு…ரோதனை..”, கியரை மாற்றினான் தீபக்.

“ஓவரா பேசாத..இதெல்லாம் அவுங்கவுங்க இஷ்டம். உனக்கு குறை சொல்ல ரைட்ஸே இல்ல"

முன்னிருந்த வண்டிகள் சரசரவென பத்தடிகள் நகர்ந்து பிரேக்கடித்து நின்றன. தூரத்திலிருந்த பச்சை சிக்னல் அதற்குள் சிவப்புக்கு மாறியிருந்தது. நியூட்ரலிலும் போட முடியாமல், கிளட்சையும் ரிலீஸ் செய்ய முடியாமல் காரோட்டிகளுக்கு இது ஒரு அநியாய அவஸ்தை.

“கால் வலிக்குது. அடுத்து வாங்குனா கண்டிப்பா ஆட்டோ கியர்தான் வாங்கணும். சுத்தமா முடியல”, கை விரல்களில் நெட்டு எடுத்துக் கொண்டே எரிச்சலனான் தீபக்.

தன் பக்கமிருந்த வைப்பர் ஒருமுறை இறங்கி ஏறுவதற்குள் எத்தனை மழைத்துளிகள் கண்ணாடியில் விழுகின்றன என்பதை எண்ன முயன்று தோற்றுக்கொண்டிருந்தாள் கீதா. பின்னால் இருந்த குவாலிஸ் காரன் இருபத்தைந்தாவது முறையாக ஹாரன் அடித்தான்.

“இவனுக்கு என்னவாம்..முன்னாடி என்னமோ காலியாக் கிடக்குற மாதிரி டொய்ங் டொய்ங்கின்னுட்டு இருக்கான். அறிவுகெட்டவன்” ரியர்வியூவில் பார்த்துவிட்டு ப்ரயோஜனமில்லாத கோபத்தைக் காட்டினான் தீபக். அடுத்த பத்து நொடிகளில், அவனது விரல்கள் அனிச்சையாக ஹாரனை அழுத்தின.

கீதா இடப்புறம் திரும்ப, இண்டிகாக்காரன் இரண்டாவது சிகரெட்டை பற்ற வைத்திருந்தான். கார் மெதுவாக வெங்கடேஸ்வரா சூப்பர் மார்க்கெட்டை தாண்டிக்கொண்டிருந்தது. குவாலிஸ் காரன் ஐம்பதாவது முறையாக ஹாரன் அடித்து முடித்திருந்தான். ரோட்டின் இடது ஓரமாக வர முயன்ற தீபக்கை, பஸ் ஸ்டாப்பில் நிறுத்தி எடுத்த எம்டிசி டிரைவர், ஆங்காரமான ஹாரன் சத்தத்துடன் ஒதுக்கினார். வேறு வழியில்லாமல், வலப்பக்கம் மீடியன் ஓரம் வந்து சேர்ந்தான் தீபக். இதற்குள் குவாலிஸ் காரன் இடதுபக்கம் முன்னேறி வந்து, அவனுக்கு முன்பிருந்த ஆல்டோவை எரிச்சலூட்ட ஆரம்பித்திருந்தான்.

“ப்ச்..இனி சிக்னல்ல லெப்ட் எடுத்த மாதிரிதான்”, தன் பக்கமிருந்த ஜன்னலின் கண்ணாடியை இறக்கினான் தீபக்.

 மீடியனுக்கு அந்தப்பக்கம் மெக்-டியின் கண்ணாடி சுவர்களின் வழியே, யுவதிகள் சிரித்தபடி, உறையவைத்த கோழிக்காகவும், பொரித்த உருளைக்கிழங்கிற்காகவும் வரிசையில் நின்றார்கள். வடநாட்டுப் பெண்கள் என்று யூகிப்பதற்குள், பக்கத்து ப்ளாட்டில், எப்போதும் டவுசரோடு திரியும் ஆமோஷிகாவுக்கு சொந்த ஊர் திருச்செங்கோடு என்ற விஷயம் ஞாபகத்துக்கு வர, யூகிப்பதை நிறுத்தினான். இப்போதெல்லாம் வித்தியாசம் காணமுடிவதில்லை. ஜீன்ஸ் வழக்கொழிந்து நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் லெக்கின்ஸ் பரவிவிட்டது. எல்லா ஊர்ப் பெண்களும் ஒரே போல்தான் தெரிகிறார்கள். யோசனையைக் கலைக்கும்படி, ஒரு 51பி ஒயிட் போர்டு சில நூறு பேரை ஏற்றி எதிர்ப்புறம் கடந்து சென்றது.

“எவ்வளவு ஏற்றத்தாழ்வுல இந்த ஊர்ல…ரெண்டு துண்டு சிக்கனுக்காக, நூறு ரூபா ப்ளஸ் டிப்ஸ் குடுக்குற ஆட்கள் இருக்க அதே கடைக்கு வெளிய, எட்டு ரூபா டிக்கெட் எடுக்க முடியாததால கிரீன் போர்டுல போகாம, நாலு ரூபா டிக்கெட்டுக்காக வெயிட் பண்ணி ஒயிட் போர்டுல, மூச்சுக்கூட விடமுடியாம போற மக்களும் இருக்காங்க…ப்ச்”, கீதா பக்கம் திரும்பினான்.

“ஏன் லெ.ஈ.டி போர்டுல கூடத்தான் இப்பல்லாம் கூட்டம் ஜாஸ்தியா இருக்கு”, கீதா.

“அதென்னமோ உண்மைதான், ஆனா கவனிச்சிருக்கியா, ஒயிட் போர்டை விட லெ.ஈ.டி போர்டுதான் அதிகம் ஓடுது"

“ஆமா, எதுல லாபம் அதிகமோ அதுலதான் நிறைய பஸ் விடுவாங்க. எல்லா பஸ்சயும் ஒயிட் போர்டு ஆக்க முடியுமா என்ன ? கேன் யூ இமாஜின் டிராவிலிங் வித் தி ஸ்வெட்டி, டிரங்க் லேபர்ஸ் எவ்ரி ஈவ்னிங்..உவ்வே”, பழிப்பு காட்டினாள் கீதா.

“ஒரே ஒரு தடவ ஏறிட்டேன், பொண்ணுங்க கூட கெட்ட வார்த்தைல திட்டுது..”. இரு கைகளையும் கன்னங்களுக்கு அருகே வைத்துக் கொண்டாள்.

“ஏன் நீங்கள்லாம் கெட்ட வார்த்தை பேசுறதில்லயா, தி எப் வேர்ட், தி எஸ் வேர்டு, எத்தன தடவை ஒரு நாளைக்கு ?..ஹும்..உங்களுக்கு கோவத்துல ஒருதடவை ஓத்தான்னு திட்டுறவன் கெட்டவன், மதர்பக்கர்னு ஒரு நாளைக்கு நூறு தடவை சிரிச்சுட்டே சொல்றவன் நல்லவன்“, வைப்பரை நிறுத்தினான் தீபக்.

“ப்ளீஸ்..உன் கூட ஆர்கியூ பண்ண முடியாது ”, காதைப் பொத்திக்கொண்டாள் கீதா.

தன் பக்கமிருந்த ஜன்னல் கண்ணாடியை இறக்கி விட்டுக்கொண்டாள்.

“நீ ஏன் எப்பவும் பணம் இல்லாதவுங்க, கஷ்டப்படுறவுங்களுக்கு சப்போர்ட்டாவே பேசுற. யூ வாண்ட் டூ லுக் லைக் எ ஹீரோ…? ஆக்சுவலி யூ ஆர் போரிங். லெட் மீ டெல் யூ”, கீதா.

“தீபக்...எல்லா கேட்டகரீல இருக்க மக்களும் கஷ்டப்படத்தான் செய்றாங்க. எங்கம்மா பேங்கல ஒர்க் பண்றாங்க. அவுங்க கஷ்டப்படுறதில்லையா ? ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை. யாருக்காக ? என் பேமிலிக்காக. எனக்காக. ஏன் நம்ம வேலை பாக்கல, பதினைஞ்சு பதினாறு மணி நேரம் ஒரு நாளைக்கு. அதெல்லாம் உனக்கு கஷ்டமா தெரியலயா. படிச்சவுங்க மூளைக்கு வேலை வச்சு கஷ்டப்படுறாங்க. படிக்காதவுங்க உடல் உழைப்பால கஷ்டப்படுறாங்க. நம்ம சொகுசா இருக்கோங்கிறதால யூ கேன் நாத் இக்னோர் அவர் டிரபள்ஸ். அவனுக்கு பஸ் டிக்கெட்னா உனக்கு கார் இ.எம்.ஐ அவ்ளோதான் வித்யாசம். அவுங்க நம்மள பார்த்து பொறாமைப்பட்டா, நம்ம நமக்கு மேல இருக்கவுங்களப் பாத்து பொறாமைப்படுவோம் அவ்ளோதான்.ச்சும்மா யூஸ்லெஸ் ஹீரோயிக் ஸ்பீச். எல்லாத்தயும் சோஷலிசக் கண்ணாடி வழியாப் பார்க்கக்கூடாது.”.

“அதெல்லாம் ஓகே.. அவசரத்துக்கு பேச மொபைல் வேணும்னு ஆசைப்படுறதும், ஐ போன் 6எஸ் ஸுக்கு ஆசைப்படுறதும் ஒண்ணுங்கிறியா ?”, தீபக்.

“இங்க..பாரு”, என்று கீதா வாயெடுப்பதற்குள் தீபக் இடைமறித்தான்

“இரு..இரு நான் முடிச்சிக்கிறேன். அவுங்க நல்லவுங்க, இவுங்க கெட்டவுங்க, பாவம்னு நான் சொல்ல வரல. இதோ...இந்த மெக்-டி கடை வச்சிருக்கவன்…அவனுக்கும் ஆயிரம் கஷ்டம் இருக்கும். இந்த இடத்துக்கான லீஸ், ப்ரான்ச்சைஸ், இன்ப்ரா, இன்வெஸ்ட்மெண்ட், குவாலிட்டி, எம்ப்ளாயீஸ் ரீட்டெயின்மெண்ட்டுன்னு நம்மள விட கஷ்டம் அவன் பொழைப்பு. லாபம் பாக்குறதே கஷ்டம் தெரியும்ல. நான் பணத்தை மட்டும் சொல்லல. ஒருத்தரு பேசுறத வச்சு, அப்பியரன்ஸ் வச்சு, பைனான்சியல் ஸ்டேட்டஸ வச்சு, யாரையும் ஜட்ஜ் பண்ணாதீங்கன்னு சொல்றேன்”, என்றபடி முன்னால் இருந்த பைக்கை பார்த்தான் தீபக். 

மஞ்சள் நிற குர்தா , கரும்பச்சை ஜீன்ஸ் அணிந்து, சிவந்திருந்தவள், பைக் ஓட்டிக்கொண்டிருந்தவனின் முதுகோடு ஒட்டி, கழுத்தோடு கைகோர்த்து காதில் கிசுகிசுத்துக் கொண்டிருந்தாள். இவனுகளை எல்லாம் ஹெல்மட் போடலைன்னு புடிக்க மாட்டாங்களா என்று எழுந்த கேள்வி, அவனது ஷோல்டர் பேக்கை ஒருவேளை முன்பக்கம் மாட்டியிருப்பானோ என்ற சந்தேகத்தில் அடிபட்டுப்போனது.

“வேற எதை வச்சு ஜட்ஜ் பண்ண சொல்ற”, இரண்டாவது முறையாக கீதா கேட்ட போதுதான் காதில் விழுந்தது.

“அது..ப..ப..பழகிப்பார்த்தா தான் தெரியும். சும்மா பளண்ட்டா..படிச்சவன்..டீசண்ட்ட இருக்கவன்லாம் நல்லவனா இருக்கணும்னு நம்பாதீங்கன்னு சொல்றேன்..அவ்ளோதான். ஸவெட்டி டிரங்க் பீப்பிள் கேன் ஸ்டில் பீ குட்”

“முப்பது நிமிஷம் டிராவல் பண்ணப் போற பஸ்ல இருக்கவன்கூட எனக்கென்ன பழக்கம் வேண்டிக்கிடக்கு. சிட்டில ரெகுலரா ஒரே டைமிங்ல போகாம, டெயிலி ஒரு அஞ்சு பத்து நிமிஷ டிபெரென்ஸ்ல பஸ் ஏறிப் பாரு, ஒரு பஸ்ல, ஒரு மாசத்துல, பார்த்த ஆளையே திரும்பப் பாக்குறதுக்கான ப்ராபபலிட்டி எவ்ளோ கம்மின்னு தெரியும்.பழக்கமாம் பழக்கம்”

“அப்ப..படிச்சவன்லாம் நல்லவன்கிற ?”, இடது பக்கம் ஒடித்து அந்த பைக்கைகடந்து நின்றான் தீபக். ஷோல்டர் பேக்கை முன்னால்தான் மாட்டியிருந்தான், கிராதகன்.

“இல்ல.. கம்பர்டபிளா பீல் பண்றேன்னு சொல்றேன்.. அவ்ளோதான். நத்திங் எல்ஸ். எனக்கு அழுக்கா, பாக்கறதுக்கு லோக்கலா நிக்கிறவன்கிட்ட பேசுறதுல இருக்க தயக்கம், பாக்க டீஸண்ட்டா இருக்கவன்கிட்ட பேசுறதுல இல்ல. நான் என்ன அவன கல்யாணமா பண்ணிக்க போறேன். பேஸிக் பப்ளிக் இண்டிராக்‌ஷனுக்கு இவ்ளோதான் லிமிட், இவ்ளோ பாத்தா போதும்...லெட் அஸ் ஸ்டாப் திஸ்.”

வண்டி இதற்குள் டாக்டர்ஸ் பிளாசா தாண்டியிருந்தது. முப்பது நிமிட மழைக்கே சாக்கடை வெளியேறி ஓடிக்கொண்டிருந்தது. நான்கைந்து சிறுவர்கள் ஓடிக்கொண்டிருந்த சாக்கடையில் மீன்பிடிக்கத் தொடங்கி இருந்தார்கள். எதிர்ப்புறம் சரவணா ஸ்டோர்ஸில் கூட்டம் அள்ளியது. கடையில் இருந்து வெளியேறிய சிலரை கால்டாக்ஸிகள் அள்ளிக்கொண்டிருந்தன. எப்.எம்.மில் “வ்வாட்டகருவாட்” என்று அனிருத் உச்சஸ்தாயியில் பாடிக்கொண்டிருந்தார்.

“நீ இந்த மோட்டர் சைக்கிள் டைரீஸ், சேகுவேரா, காஸ்ட்ரொ பத்திலாம் படிச்சிருக்கியா..எனி ஐடியா” ,இடதுபுறம் திரும்ப ஏதுவாய் இண்டிகேட்டரை ஆன் செய்தான் தீபக். இன்னும் பதினைந்து வண்டிகள் முன்னாலிருந்தன.

“இல்ல”, மீன் பிடித்துக் கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்தவாறே பதிலளித்தாள் கீதா.

“ஒன்லி அகதா கிறிஸ்டியா..ஹிம்..அதப்படிச்சா எப்டி காமன் மேன் பத்தி தெரியும் உங்களுக்கு” , நக்கலாக கேட்டான் தீபக்.

“ஆமா. நாட் ஒன்லி அகதா கிறிஸ்டி. ஐ ரீட் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் டூ. ஏன் சேகுவேரா பத்தி படிச்சவங்களுக்கு மட்டும்தான் காமன்மேன் பத்தி தெரியுமா”, சிறுவர்களுக்கு இன்னும் மீன் சிக்கிய பாடில்லை. கத்திக் கொண்டிருந்தார்கள்.

“ஆப்வியஸ்லி”, என்றபடி அந்த பைக்காரனைத் டிராபிக்கில் தேடினான் தீபக்.

நான்கு கார்களுக்கு முன்னால் ஒரு சிறுமி ஒரு கையில் பொம்மை, ஸ்டிக்கர், சிறிய பெயிண்ட்டிங் புத்தகங்களை வைத்துகொண்டு, கார் கண்ணாடி வழியாக கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். இன்னொரு கையால் வயிற்றைத் தடவிக்கொண்டே, அவளது வாய் ஏதோ முனகிக்கொண்டிருந்தது. எதேச்சையாக பார்வையைத் திருப்பிய கீதாவுக்கு, அந்தச் சிறுமி மட்டுமே கண்ணில் தெரிந்தாள். அதிகபட்சம் பத்து வயதிருக்கும். யாரிவள் ? எந்த ஊராக இருப்பாள் ? அப்பா அம்மா? தான் பத்து வயதில் எப்படி இருந்தோம் ? என்று சில நொடிகளுக்குள் நூறு யோசனைகள். மூன்று கார் கண்ணாடிகளைத் தட்டிப்பார்த்து தோற்றுவிட்டு, இவர்களது காரை நோக்கி நடந்து வந்தாள்.

வறண்ட கண்களும், காய்ந்த தலைமுடியும், மெலிந்த தேகமும், பொருட்களை இடுக்கிக்கொண்டு, ஓட்டமும் நடையுமாய், கார்களின் ஊடே வந்து கொண்டிருந்தாள். அவள் வருவதைப் பார்த்த கீதாவின் கண்களில் இருந்த ஈரத்தை உணர்ந்து கொண்டதைப் போல, வேகுவேகுவென்று வந்தாள். பர்ஸில் இருந்து ஒரு இருபது ரூபாய் நோட்டை கீதா எடுத்து நீட்டவும், தீபக் சுதாரித்து கார் கண்ணாடியை ஏற்றவும் சரியாக இருந்தது.

“தீபக் !!” கத்தினாள் கீதா.

பொம்மையை எடுத்து கண்ணாடியின் அருகே காண்பித்துக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி.கீதா கையிலிருந்த இருபது ரூபாயை பார்த்து விட்டிருந்தாள் அவள்.

“கண்ணாடிய இறக்கு…தீபக்” பவர் விண்டோவின் பட்டன் வேலை செய்யவில்லை. லாக் செய்திருந்தான்.

“இவளுக்கு ஏன் காசு தர்ற..இவுங்கள்லாம்”, என்று ஆரம்பித்தான். விஜய நகர் சிக்னல் பச்சை வண்ணம் காண்பித்தது.

“பேசாத…அவ நான் காசு குடுக்கப்போறேன்னு நினைச்சிட்டா…அன்லாக் பண்ணு”, கத்தினாள் கீதா.

பின்னால் இருந்து ஹாரன்கள் காதை பிளந்தன. ஒரு பார்ச்சூனரின் முன் டயர் அந்த சிறுமியை உரசிக்கொண்டு சென்றது. சலனமேயில்லாமல், கண்ணாடியைத் தடவிகொண்டே, நகர்ந்து கொண்டிருந்த காரோடு ஓட்டமும் நடையுமாய் வந்தாள்.

“நிறுத்து தீபக். சொல்றேன்ல”

“லூசா நீ… எவ்ளோ டிராபிக் பாரு. இங்கலாம் நிறுத்த முடியாது. இதுக்குதான் நான் சிக்னல்ல கண்ணாடிய இறக்குறதே இல்ல”, இடது பக்கம் இண்டிகேட்டர் போடாமல் ஒடித்து, ஆட்டோக்காரனிடம் பேமானி பட்டத்தை வாங்கிக்கட்டிக் கொண்டான். கால்களில் டயர் ஏறாமல் விலகி, நான்கைந்து வாகனங்களிடமிருந்து இலகுவாக ஒதுங்கி, நளாஸ் அருகே மேடேறி நின்றாள் அந்தச்சிறுமி. கீதா திரும்பிப் பார்த்த போது, அந்தச் சிறுமியின் கண்கள் மேலும் வறட்சி ததும்பியது.

தீபக்கின் கார், நூறடி ரோட்டில் திரும்பி, தலப்பாக்கட்டி தாண்டிக்கொண்டிருந்தது.

“சிக்னல்ல லாம் பொருள் வாங்காத கீதா”

“ஏன்”, உர்ரென்றாகியிருந்தாள்.

“குவாலிட்டிக்காக சொல்லல. பூராம் ஏமாத்து வேலை. வெளிய சூப்பர் மார்க்கெட்ல பத்து ரூபாய்க்கு விக்கிறத, இங்க கொண்டுவந்து அம்பது அறுபதுன்னு விக்கிறாங்க. என்னடா அம்பது ரூபாய்க்கு யோசிக்கிறானேன்னு பாக்காத. பகல்கொள்ளை. அதுவும் இந்த மாதிரி சின்னப்பொண்ணுங்க, பசங்களை வச்சு இப்டி வியாபாரம் பண்றது ஒரு டேக்டிக்ஸ். பாக்க பாவமா இருக்குன்னு பணம் குடுக்க யோசிக்க மாட்டோம் பாரு. ரெவின்யூ வையா சிம்பதி. ஐ நெவர் என்கரேஜ் திஸ். டோண்ட் டூ திஸ் அகெய்ன்..ப்ளீஸ்”

கீதாவுக்கு ஏனோ அந்தச் சிறுமியின் கண்கள் ஞாபகத்தைவிட்டு அகல மறுத்தன. காரை  ஹோட்டலின் முன் நிறுத்தி, எங்கே என்று சைகையில் தீபக் கேட்க,

“இங்கே உட்லா சார்”, என்று வெறும் கையில் கார் ஓட்டிக் காண்பித்து, ரோட்டோரமாய், கடையின் முன் குறுக்கே நிறுத்த வசதி செய்து குடுத்தான் அந்த செக்யூரிட்டி.

ஒரு மணி நேரத்தில் டின்னர் முடிந்து, வெளியே வந்து காரை ரிவர்ஸ் எடுக்கையில், பத்து ரூபாயை அந்த செக்யூரிட்டியின் கையில் திணித்து, ஒரு சல்யூட்டை வாங்கிக்கொண்டான் தீபக். ஹெச்.பி. பெட்ரோல் பங்க் அருகே யூ-டர்ன் அடித்து மீண்டும் விஜயநகர் சிக்னல் நோக்கி சென்றது வண்டி. ரெக்ஸ் நெருங்குகையில்,

“இந்த மாதிரி செக்யூரிட்டிக்கெல்லாம் அப்பப்ப வரும் போது காசு குடுத்து கரெக்ட் பண்ணிக்கனும். இல்லாட்டி பார்க்கிங்க்கு ஹெல்ப் பண்ணமாட்டான். அப்புறம் சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும், பயந்துட்டே இருக்கணும், போலீஸ் வந்து நோ பார்க்கிங்னு லாக் பண்ணிருமோன்னு. நம்ம ரோட்டுல வேற எது நோ பார்க்கிங்னு தெரியல இன்னும். ஆனா இருக்கிற பாதி கடைக்கு பார்க்கிங்கே ரோட்டு மேல தான். யூ ஹேவ் டு டூ சம் காம்ப்ரமைஸஸ்”. 

கிரக சஞ்சாரங்களின் பலனால், விஜய நகர் டிப்போ அருகே வந்தவுடன் கிரீன் சிக்னல் விழ, ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில் வண்டியை வலப்புறம் திருப்பினான்.  சரவணா ஸ்டோர்ஸில் பர்ச்சேஸ் முடித்த கையோடு, லாபக்கணக்கு போட்டுக்கொண்டு சில நூறு பேர் நின்று கொண்டிருந்தார்கள். டிராபிக்கில் கார் மெதுவாக ஊர்ந்து சென்றது.

“என்ன கீதா பேசவே மாட்ற..என்ன யோசனை?”

கீதா ரோட்டுக்கு அந்தப்பக்கம் மீடியனைத் தாண்டி அந்த சிறுமியைத் தேடிக்கொண்டிருந்தாள்.

“உன்னத்தான்…என்ன யோசனைன்னு கேட்டேன்”, தீபக்.

“ஒண்ணுமில்ல…நீ சொன்னததான் யோசிச்சிட்டு இருந்தேன்..”

“என்னது ?”

“அதான்….படிச்சவன்லாம் நல்லவனா இருக்கணும்னு அவசியமில்லை”

“ஹா..அதான் நான் சொன்னேன்” தோள்களைக் குலுக்கிக் கொண்டு, டிராபிக் விலகவும், வண்டியை நகர்த்தினான் தீபக்.

அடையார் ஆனந்தபவன் தாண்டும் போது, எதிர்ப்புறம் அந்தச் சிறுமியைப் பார்த்தாள் கீதா. ஒரு ஆட்டோக்காரரிடம் ஏதோ ஒரு புத்தகத்தை கொடுத்து பணம் வாங்கிக்கொண்டிருந்தாள். இன்னொரு 51பி ஒயிட் போர்டு, சில நூறு பேர்களோடு  இவர்களைத் கடந்து சென்றது. மெக்-டியின் அருகே, கேரி பேக்கில் மீன்களோடு சந்தோஷமாக ஓடிக்கொண்டிருந்தார்கள் சில சிறுவர்கள். எப்.எம்-மில் “மோஹேத்து ரங்கு தே பசந்தி” என்று தலர் மெஹந்தி பாடிக்கொண்டிருந்தார்.

No comments: