Sunday, July 3, 2016

கடவுள்களின் பந்தயம்


பூமியில் இருப்பது இரண்டே கடவுள்கள். ஒன்று இருந்தது, இன்னொன்று உருவாக்கப்பட்டது. ஒன்று கண்ணெதிரே கிடந்தது, இன்னொன்று கண்ணுக்கு தெரியாமல் இருந்து, பின்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஒன்று இயற்கை, மற்றொன்று அறிவியல். இந்த இரண்டு கடவுள்களுக்கிடையிலான போட்டியும், இரண்டிற்கும் இடையேயான சமநிலையும் மனிதன் ஒவ்வொரு நொடியும் உயிரோடிருப்பதற்கு காரணம்.

இந்த இரண்டு கடவுள்களுக்கிடையே நிலவி வரும், என்ட்ரோபி சிறிது பாதிக்கப்பட்டாலும், மனிதன் உருவாக்கி வைத்திருக்கும் உலகம் என்னும் பிம்பம், சல்லி சல்லியாக நொறுங்கிவிடும். அவனறியாமல், அறிவியலின் வாயிலாக, இயற்கையை வளைக்கப் பார்க்கிறான். இயற்கையும் முடிந்தளவிற்கு வளைந்து கொடுக்கிறது. ஒரு திரஷ்ஹோல்டை தாண்டும் போது, இயற்கை மீதிருக்கும் பிடிமானத்தை அறிவியல் இழக்கும் போது, உயர்ந்து வளர்ந்து நிக்கும் மதயானைக்கு முன் நிற்கும் கோழிக்குஞ்சைப் போல் ஆகிவிடுகிறது, அறிவியலும் மானுடமும். இது தான் நிதர்சனம். இதுதான் உண்மை இயற்கை இல்லாமல், அறிவியல் இல்லை.

மனிதனைத் தவிர மற்ற விலங்குகளுக்கு இந்த பிரச்சனை இல்லை. நாயோ, மாடோ, குரங்கோ, கோவேரிக் கழுதையோ, உராங்குட்டான் குரங்கோ, ஜெல்லி மீனோ, பாண்டா கரடியோ, அறிவியலின் மாயக்கரங்களுக்குள் சிக்கவில்லை. பசிக்கும்போது உண்டு, தூங்கும் போது தூங்கி, சாகும் போது செத்து, இயற்கை எனும் மாபெரும் சக்தியோடு இணைந்து, அதற்குள் கட்டுண்டு வாழ்கின்றன. மனிதன் மட்டுமே கட்டுமீறிச் சென்று, சீரழிந்து கொண்டிருக்கிறான். நாகரீகம் என்ற பெயரிலும், வளர்ச்சி என்ற பெயரிலும், அளவுக்கு மீறி ஆசைப்பட்டு பொன்முட்டையிடும் வாத்தின் அடிவயிற்றை வெறிகொண்டு கிழித்துக் கொண்டிருக்கிறான்.

இந்த உலகம் தொடங்கியதில் இருந்து, இன்று வரை இருக்கும் நீரின் அளவு ஒன்றுதான். என்றும் மாறியதில்லை, மாறப்போவதுமில்லை. அணைகள் கட்டி நீரைத்தேக்கும் அதே அறிவியல் தான், மோட்டாரைக் கொண்டு நீரை உறிஞ்சும் முட்டாள்தனத்தையும் கற்றுக் கொடுத்தது. நீர் ஊற காலம் தராமல், உறிஞ்சுவதை மட்டுமே வேலையாக செய்து விட்டு, தண்ணீர் இல்லை, நிலத்தடி நீர் வற்றிவிட்டது என்று புலம்புவதில் நியாயம் இல்ல. நீரைத் தேக்குவது புத்திசாலித்தனம், உறிஞ்சுவது கொள்ளை, பேராசை. தாயின் மாரில் இருக்கும் பாலையே, பம்பு வைத்து உறிஞ்சுவது சரியென விவாதிக்கும் காலத்தில் இந்த கூற்று எடுபடாது.

அறிவியல் என்பது ஒரு போதையாக மாறி நூற்றாண்டுகள் கடந்து விட்டது . அதனிலிருந்து வெளியேற முடியாது என்பதை முழுதாக ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால் எந்த அளவிற்கு அதன் பிடியிலிருந்து விலகி, வாழ்வதற்கான வழி தேடலாம் என்பதுதான் இங்கே கேள்வி. காய்ச்சலை மட்டுப்படுத்த மருந்து கண்டுபிடித்தது அறிவியல். மூக்கிற்க்கு மாற்றாக, வாய் வழியாக சுவாசிக்கும் ஆற்றலை வைத்தது இயற்கை. இல்லையென்றால் சிறு ஜலதோஷத்திற்கே செத்து விழுந்திருப்போம். இதில்தான் இருக்கிறது வித்தியாசம், தானாய் உருவானதிற்கும், உருவாக்கப்பட்டதிற்கும்.

உங்கள் அனைத்து கடவுள்களும் இந்த இரண்டு கடவுள்களுக்குள் அடக்கம். நடை பயிலும் குழந்தைக்கு தேவைப்படும் தந்தையின் வலதுகை சுண்டு விரலைப் போல, மற்ற கடவுள்கள் நமக்கு தேவை. கடைசிவரை வளர ஆசைப்படாமல், நடக்க கற்றுக் கொள்ளாமல், விரலே கதியென்று இருப்பது சரியா தவறா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சற்றே யோசித்தால், சுண்டு விரலை நான் நீட்டுகிறேன் என்று பிரசங்கம் செய்யும் போலி மதப்போதகர்களும், நான் பிடித்திருக்கும் சுண்டு விரல்தான் பெரிது என்று கண்மூடித்தனமாக சண்டையிடும் மூளைக்காரர்களும் இந்த மாபெரும் அமைப்பில் எந்த மூலையில் இருக்கிறார்கள் என்று விளங்கும்.


பரந்து விரிந்து அகண்டு கிடக்கும் இயற்கையை சிறு பெட்டிக்குள் அடைக்க நினைக்கும் மானுடத்தின் முயற்சி உன்னதமானதாகத் தோன்றலாம், ஒரு சிறு உதறலில் அத்தனையையும் புரட்டி போடும் சக்தி இயற்கைக்கு உண்டு. வளைத்த வரை போதும், வணங்கத் தொடங்குங்கள். இயற்கையை முழுதாக புரிந்து கொள்ளும் சக்தி மனிதனுக்கில்லை. இயற்கைக்கு  யாரும் தேவையில்லை. அதுவே ஆதி, அதுவே அந்தம். நேச்சர் இஸ் ஆல்வேஸ் அல்டிமேட்.