Saturday, January 14, 2017

லெமூரியா - பகுதி 1

லெமூரியா - பகுதி 1

லெமூரியா கண்டத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள், சிலர் படித்திருப்பீர்கள்.இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியை(தற்போதைய கன்னியாகுமரி) வடகோடியாகக் கொண்டு, கிழக்கே ஆஸ்திரேலியக் கண்டம் வரையிலும், மேற்கே மடகாஸ்கர் தீவு வரையிலும் நீண்டிருந்ததாக பல புத்தகங்களிலும், இணையத்திலும் குறிப்புகள் இருக்கின்றன.

குமரிக்கண்டம் என்ற பெயரிலும் இது அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. குமரிக்கண்ட நாகரீகத்தின் காலம் கிட்டத்தட்ட கி.மு.50000த்தில் இருந்து கி.மு16000 வரை இருக்கலாம் என்பது ஒரு அளவீடு.அந்தக் கண்டத்தில் மதுரை என்றோரு ஊர் இருந்ததாகவும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகவும் எண்ணற்ற கட்டுரைகள் உண்டு.அந்த கண்டம் அழிந்தவுடன் அதன் நினைவாக தற்போதுள்ள தமிழகத்தில் நிறுவப்பட்டதுதான் இன்றைய மதுரை என்று சொல்வார்கள்.

முதல் தமிழ்ச்சங்கம் ‍இருந்த இடம் தென்மதுரை. அதன் தலைவர் அகத்தியர். இந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட எல்லாம் கடல் சீற்றத்தால் அழிந்து போயின‌. (இப்போதிருக்கும் மதுரைக்கு தெற்கே இருப்பதால், இது தென்மதுரை என்று காலப்போக்கில் அழைக்கப்பட்டிருக்கலாம்)

இரண்டாம் தமிழ்ச்சங்கம் இருந்த இடம் கபாடபுரம். தலைவர் தொல்காப்பியர். இவர் இயற்றியதுதான் மிகப்பழைய நூல் என்று கொண்டாடப்படும் தொல்காப்பியம். தொல்காப்பியமே தலைச்சங்க நூல்களின் சாராம்சம்தான் என்று ஒரு கருத்து உண்டு.

மூன்றாம் தமிழ்ச்சங்கம் இருந்த இடம் இப்போதிருக்கும் மதுரை. தலைவர் நக்கீரர்.
இந்த கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்களைத்தான் சங்க இலக்கியங்கள் என்று படித்துக்கொண்டிருக்கிறோம்.

"இப்ப இருக்கது மூணாவது மதுர. முதல்ல இருந்த மதுர கடலுக்குள்ள போயிருச்சாம். ரெண்டாவது இருந்த மதுரய கண்ணகி எரிச்சிப்புட்டாளாம்" என்று ஊர்ப்பக்கம் கதைகளும் உண்டு. இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தின் பிரம்மாண்ட க்ளைமேக்ஸ் காட்சி உண்மையிலேயே நடந்தேறியதா என்பது விவாதத்துக்குரிய விஷயம். அதைப் பற்றி பிற்பாடு பேசலாம்.
கடல் கொண்டு போனதாக சொல்லப்படும், நமது முன்னோர்கள் வாழ்ந்த நிலப்பரப்பு இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இடத்துக்கு தெற்கே இருந்ததால், அவர்களை,நம் பாட்டன் பூட்டன்களை, அதன்பின்னர் இறந்து போகும் பெரியோர்களை "தென்புலத்தார்" என்று அழைக்கும் வழக்கம் வந்தது. திருவள்ளுவர் திருக்குறளில் இதனை உபயோகித்திருப்பார்.

"வடக்கே தலைவைத்து படுக்காதே" என்று வீட்டில் சொல்வார்கள். அதன் அர்த்தம், தெற்கே கால் வைக்கக்கூடாது என்பது. தமிழகத்தில் இருந்து கொண்டு, நீங்கள் வடக்கே தலை வைத்துப் படுத்தால், உங்கள் கால்கள் தெற்கு நோக்கி இருக்கும்.நம் முன்னோர்கள் வாழ்ந்து, மறைந்த‌ இடத்தை நோக்கி மரியாதை இல்லாமல் நீங்கள் கால் நீட்டுவதாக ஆகிவிடும் என்பதால் அதை செய்யக்கூடாது என்பது வழக்கமாக இருக்கிறது என்றும் ஒரு கூற்று உண்டு.

இது போன்ற சான்றுகளை, காரணங்களை பேராசிரியர் ஐயா தொ.பரமசிவன் அவர்களது கட்டுரைகளில் படித்திருக்கிறேன். (பண்பாட்டு அசைவுகள் என்று நினைக்கறேன்)

1800களின் பிற்பகுதி வரையில் லெமூரியாக் கண்டம் என்ற உருவகமோ, அது இருந்ததற்கான சான்றுகளோ இல்லை. பிலிப் லட்லி ஸ்க்லேட்டர் என்கிற விலங்கியல் ஆராய்ச்சியாளர், பிரைமேட்ஸ் எனப்படும் உயர் குரங்கினங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் பொழுது,மடகாஸ்கரில் இருக்கும் இந்த குரங்கினங்கள் ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்களிலும் இருப்பதை கண்டறிகிறார். அதிகமான, வளமான‌ உயிரினங்களைக் கொண்ட மடகாஸ்கரில் இருந்து, ஆசிய, ஆப்பிரிக்கக் கண்டங்களுக்கு ஒரு நிலவழிப்பாலம் வழியாக இவை பயணித்திருக்கலாம் என்பது இவரது கோட்பாடு.

இவர் ஆராய்ச்சி செய்த ப்ரைமேட்கள் (Primates) இந்த நிலப்பரப்பில் இருந்ததால், அந்த ப்ரைமேட்களின் பெயரான "லெமூர்" என்பதை வைத்து, "லெமூரியா" என்று இந்த கண்டத்துக்கு பெயரிட்டார். அதன் பின்னர் வந்த தமிழ் ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் இதனை மேற்கோள் காட்டி, நம் தொன்மையை பறைசாற்றத் தொடங்கினார்கள் என்றும் ஒரு கருத்து உண்டு.

"லெமூர்" என்ற பெயரில் வழங்கப்பட்ட இந்த ப்ரைமேட்களின் வழித்தோன்றல்கள்தான், "ஸ்லெண்டர் லோரிஸ்" (Slender Loris/ Slow Loris) என்கிற பாலூட்டிகள். இவைதான் தமிழகத்தின் மேற்கு பகுதியில் காணப்படும் "தேவாங்குகள்". லெமூர் என்கிற வார்த்தை ரோமானியப் புராணங்களில் தீயசக்திகளைக் குறிக்கும் "லெம்யூர்ஸ்" (Lemures) என்கிற வார்த்தையில் இருந்து வந்தது. இந்த விலங்கினங்கள் இரவில் அதிகம் நடமாடுவதால் இந்தப் பெயர் இடப்பட்டது.

லெமூரியாக் கண்டம் என்பது உண்மையிலேயே இருந்த ஒன்றா அல்லது, வெறும் புராணக்கதையா என்று அடுத்த பதிவில் பார்ப்போம். (ரெண்டு பகுதிக்குள்ள முடிக்க முயற்சி பண்றேன்)
‍‍தொடரும்...

No comments: